சும்மா/ வளவ. துரையன்


இந்த மாடு
அப்படியே நிற்கிறது
அரைமணி நேரமாய்
அசையாமல் நிற்கிறது

கண்களை உருட்டி உருட்டி
கருப்பு வண்ண ஆடு
அதோ படுத்துக் கிடக்கிறது

பூனையொன்று
சுற்றுச் சுவர் மேல்
அடிவயிற்றைப் பரப்பி
அரிய சிலையாய் நிற்கிறது

துணை எதையும் அழைக்காமல்
தூங்குமூஞ்சி மரக்கிளையில்
அண்டங்காக்கை அதோ
ஒண்டிக்கிடக்கிறது

ஓடிக்கொண்டே இருக்கும்
தெருநாய் கூட
குப்பைக்கருகில்
முடங்கிக் கிடக்கிறது

எல்லாமே எப்போதும்
சும்மாதான் இருக்கிறது

அவற்றையெல்லாம்
கேட்காமல் நான் மட்டும்
தனித்திருந்தால்
ஏன் சும்மா இருக்கிறாய்
எனக்கேட்பதேனோ
என்கிறான் அவன்