
அயல்நாடுகளில் டூர் சென்று திரும்பிய அந்த பிரபல எழுத்தாளர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். கடுமையான முதுகு தண்டு நோய்! (Ankylosing Spondylitis). யாத்திரையின்போது எதிர்கொள்ள நேர்ந்த ஏதோ உலோக நச்சு பொருள் தான் காரணம் என்று டாக்டர்கள் சொன்னதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. உடன் சென்ற அவர் மனைவிக்கு ஏதும் நேரவில்லையே? எத்தனையோ மருந்துகள்! நிற்கவில்லை வலி. நீங்கவில்லை நோய். ஐநூற்றில் ஒரு சான்ஸ் தான் இருக்கிறது நீர் பிழைக்க, என்றார் ஒரு ஸ்பெஷலிஸ்ட் நண்பர். ‘வாழாதிருக்க’ சந்தர்ப்பம் அதிகமென்றதும் இனி ‘வாளாவிருப்பதில்’ அர்த்தம் இல்லை என தீர்மானித்தார் இவர். என்ன செய்தார்?
ஒரு நல்ல நாளில் மருத்துவ மனையை விட்டு வெளியேறினார். ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துக்கொண்டார்.
முழுசாய் முப்பது நாட்கள்! அவர் செய்ததெல்லாம் மேக்ஸ் பிரதர்ஸ் படங்கள் உட்பட முழுக்க முழுக்க காமெடி படங்களை பார்த்துத் தள்ளியதுதான்! காமெடி புத்தகங்களைப் படித்துத் தள்ளியதுதான். சிரிப்பு.. சிரிப்பு! அது ஒன்றே அவர் எடுத்துக்கொண்ட ட்ரீட்மென்ட்!
மறுபடி போய் செக் பண்ணிய போது டாக்டர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சத்தமின்றி நோய் சுத்தமாக விலகி இருந்தது.
அதுவரை அவர்கள் அப்படி நினைத்துப் பார்த்ததே இல்லை. அதாவது மனசுக்கும் நோய்க்கும் சம்பந்தம் உண்டு என்று. மெடிக்கல் சயின்ஸையே அப்படி திரும்பிப் பார்க்கவைத்த அவர்தான்….

நார்மன் கஸின்ஸ். (Norman Cousins). பிரபல பத்திரிகை ஆசிரியர். எழுத்தாளர். ஜூன் 24. பிறந்த நாள்..
எதிர்மறை எண்ணங்களுக்கு நம்மைப் பாதிக்கும் சக்தி இருக்குமானால், மனம் விட்டுச் சிரிப்பதற்கு நம்மைப் பலப்படுத்தும் சக்தி இருக்க வேண்டுமே? அதுதான் அவர் மனதில் தோன்றிய கேள்வி. மிக மோசமாய் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஏற்றதல்ல மருத்துவமனை என்ற எண்ணம் தோன்றிற்று. அதுவரை எடுத்துக் கொண்ட அளவற்ற மருந்துகளின் பாதிப்பைக் களைய நினைத்தார். விட்டமின் சி-யை நிறைய எடுத்துக் கொண்டார். கிளம்பிவிட்டார் தனியறைக்கு, சிரித்துத் தள்ள!
வலிந்து சிரிக்க, வழிந்து போனது வலி. வாய்விட்டு சிரிக்க நோய்விட்டுப் போனதோ?
ஸிக்மன்ட் ஃபிராய்டும் ஃபிரான்சிஸ் பேகனும் அவருக்கு நிறைய இன்ஸ்பிரேஷன் கொடுத்திருந்தார்கள். ரொம்ப முக்கியம் தன் டாக்டருடன் நார்மனுக்கு இருந்த நல்லுறவும் அவர் இந்த முயற்சிக்குத் தந்த ஆதரவும்.
தன் முயற்சி பற்றி நார்மன் ஆற்றிய உரையின் போது சொன்ன நகைச்சுவைக் கதை… அந்தப் பெண்மணி ஓட்டி வந்த கார் வழியில் நின்று விட்டது. காரணம் பெட்ரோல் தீர்ந்து விட்டிருந்தது. பெண் இரண்டு மைல் நடந்து ஒரு பம்பை அடைந்தார். “ஒரு டின் பெட்ரோல் கிடைக்குமா?” அவர்: “டின் இல்லையே!” இவர் தேடியதில் பக்கத்தில் சின்னக் குழந்தைகளின் மொபைல் டாய்லெட் பாத்திரம் ஒன்று கண்ணில் பட்டது. அதில் வாங்கிக்கொண்டு காருக்கு வந்தவர் அதிலிருந்து காரில் பெட்ரோலை ஊற்றும்போது எதிர்க் காரிலிருந்து அந்தப் பாத்திரத்தை பார்த்த நபர், “ஆஹா, உங்கள் நம்பிக்கையைப் பார்த்தா பொறாமையா இருக்கு!” என்றாராம். சற்று நேரத்தில் கார் கிளம்பியதைப் பார்த்தபின் என்ன நினைத்திருப்பார்? ‘அட, அதுவும் நல்லாத்தான் வேலை செய்யுது!’
‘நல்லதாகவோ கெட்டதாகவோ மனம் நம்புவது நடக்குது!’ Placebo (உள்ளே மருந்து ஏதும் இல்லாமல் மருந்து என்று தரப்பட்டு பரிசோதிக்கிறார்களே, அது.) தரப்பட்டவர்களில் 60% பேர் பொய் விளைவுகளை உணர்வதை உதாரணமாகச் சொல்லுகிறார் நார்மன். ஒரு சோதனையில் இது என்ன மாதிரி செயல்படும் என்று சொல்லிவிட்டு, அதற்கு நேர் எதிர் முறையில் செயல்படும் மாத்திரைகளைக் கொடுத்துப் பார்த்தபோதுகூட 60% பேர் அப்படியே செயல்பட்டதாக உணர்ந்ததைச் சொல்லி, இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் என்று கேட்டார்.
“… மனம் நம் முழு வசத்தில் இருக்கிறபோது, அதாவது உடல் மனதின் கண்ட்ரோலில் இருக்கிற போது ஏற்படும் கெமிக்கல் பேலன்ஸில் (homeostasis) மைக்ரேன், ரத்த அழுத்தம் போன்றவை நீக்கிவிடுவதை நிரூபித்திருக்கிறார்கள். ஆக நாம் வைக்கும் நம்பிக்கைக்கும் நம் நோய் குணமாவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆயிரக்கணக்கான நோயாளிகளின் அருகே நடமாடும் டாக்டருக்கு ஆரோக்கியம் கெடாமல் இருப்பதற்கும் அந்த நம்பிக்கை தானே காரணம்?
“நம் உடம்புக்குள் நடக்கும் அற்புதங்களை மட்டும் நாம் கவனிக்க முடியுமானால், அதை வியப்பதிலேயே போய்விடும் நம் ஆயுசு முழுவதும். அதனால் நம் மேல் கருணை வைத்து இறைவன் அவற்றை நம் பார்வைக்கு அப்பால் வைத்திருக்கிறான். நாம் செய்யும் எதோ ஒன்று அங்கே ஒரு கஷ்டத்தை உண்டாக்குகிறது என்றால், அதன்பால் நம் கவனத்தை ஈர்க்க இயற்கை ஏற்படுத்திய ஒரு வழிதான் வலி என்பது. நாம் சாப்பிடும் ஏதோ ஒன்றோ, மேற்கொண்டுள்ள ஒரு பழக்கமோ, நம்முடைய சில உணர்வுகளோ சரியில்லை என்று சொல்லும் அறிவிப்பு அது. அவ்வளவுதான். நம் மனோநிலையை சரியான திசையில் செலுத்தினால், வலியை அகற்றும் மார்ஃபைன் முதல் இம்யூனிட்டியை அதிகரிக்கும் காமா க்ளோபுலின், வைரஸை விரட்டும் இன்டெர்ஃபெரான் என்று மூளையே தயாரித்துத் தருகிறது..” என்று அடுக்குகிறார் நார்மன்.
மாரடைப்பு வந்த ஒரு மனிதனைச் சுற்றி மருத்துவ உதவியாளர்கள் சீரியஸாக இயங்கிக் கொண்டிருப்பதை ஒருமுறை காண்கிறார் நார்மன். ஆனால் யாரும் அவனுடன் ஒரு வார்த்தை பேசக் காணோம்! கார்டியாக் கருவிகளில் தாறுமாறாக ரீடிங் எகிறிக் கொண்டிருக்கிறது. நார்மன் அவனைத் தட்டிக் கொடுத்து, உன் இதயம் பிரமாதமா இருக்கு. இது ஒண்ணுமில்லை. ஏதோ டீஹைட்ரேஷன், அவ்வளவுதான், என்று சொல்லச் சொல்ல.. ரீடிங் சரிகிறது, சரியாகிறது.
இப்படியான தன் ஆய்வுகளையும் அனுபவங்களையும் வைத்து 1979-இல் அவர் எழுதிய பிரபல புத்தகம்தான் ‘ஒரு நோயின் உடற்கூறியல்’ (Anatomy of an Illness). பலரின் மருத்துவ சிந்தனையை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கிற்று அது.
நார்மனின் கருத்துக்களை அடியொற்றி ஆய்வுகள் நடத்திய டாக்டர் லீ பெர்க் முதலானோர், மனம்விட்டுச் சிரித்திடும் முனைப்பானது நம் உடலில் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் HGH ஹார்மோனை 87%, மனநிலையை உற்சாகப்படுத்தும் பீட்டா எண்டார்ஃபினை 27% என்று அதிகரிக்கச் செய்வதை கண்டுபிடித்தனர். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது என்று நன்மைகளை அடுக்கினார்கள்.
நார்மன் கசின்ஸ் அதன் ஆசிரியரானபோது வெறும் 20 ஆயிரம் பிரதிகளே விற்பனை என்றிருந்தது ‘சாட்டர்டே ரெவ்யூ’. ஆறு லட்சத்துக்கு கொண்டுவந்தார் தன் அயராத உழைப்பால். பெரும்பாலும் வயதானவர் படிக்கிற ஓர் இலக்கியப் பத்திரிகையாக இருந்த அதற்கு பல்வேறு முகம் கொடுத்து, அன்றைய நாட்டு நடப்பை அலசும் விதமாக திசை திருப்பிய பெருமை இவரையே சாரும். ‘இலக்கியத்தை வெறுமே அளவிட்டுக் கொண்டிராதீர்கள். அதை உரமிட்டு வளர்த்து பாதுகாப்பதே நம் வேலை,’ என்பார் உதவி ஆசிரியர்களிடம். வெறும் பத்திரிகையாக மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்ட ஒரு நிறுவனமாகவே வளர்ந்தது அது.
யுத்தத்தோடு யுத்தம் செய்தவர் நார்மன். உலக சமாதானத்துக்காக இவர் ஆற்றிய பணி உலகளவு! இந்தியாவுக்கு ஐம்பதுகளில் வந்த போது எழுதிய புத்தகம், ‘நேருவுடன் நேருக்கு நேர் (உரையாடல்கள்)’. அமைதியை வலியுறுத்தி இவர் எழுதிய புத்தகங்களில், ‘மனிதனுக்காக பேசுவது யார்?’ ‘அணு யுகத்தின் கடைசிப் புகலிடம்,’ இரண்டும் மிகப் பிரபலம்.
நார்மன் தன் புத்தகம் ஒன்றில் ஆல்பர்ட் ஸ்வெட்சர் பற்றிக் குறிப்பிடுகிறார். லாம்பரின் மருத்துவமனையில் நார்மன் தங்கியிருந்தபோது ஒரு நள்ளிரவு தூக்கம் பிடிக்காமல் ஆற்றங்கரையோரமாக நடக்கையில் ஸ்வெட்சரின் அறையிலிருந்து அந்த இசை தவழ்ந்து வருகிறது. ஸ்வெட்சருக்கு மிகவும் பிடித்த இசை மேதை பாச் அவர்களின் ஓர் இசைக் கோலம் அது. நுட்பமாகவும் ஆழமாகவும் அணுவளவும் லயம் பிசகாமலும் தன் பியானோவில் வாசித்து முடித்தவர், சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருக்கிறார். தன் முயற்சிகளை ஒருமுகப்படுத்துவதும் தன்னை புதுப்பித்துக் கொள்வதும் ஆக ஓர் உணர்வுச் செப்பனிடுதல் அங்கே நடப்பதை கவனிக்கிறார் நார்மன். ஆம்,இசையே ஆல்பெர்ட் ஸ்வெட்சருக்கு ஓர் ஔடதமாக இருந்தது என்கிறார் நார்மன்.
உதிர்த்த முத்துக்கள் இதோ சில:
‘இறப்பு ஒன்றும் அளப்பரிய இழப்பு அல்ல; வாழும்போதே நம்முள் மடிகிற விஷயங்களே மிகப்பெரிய இழப்பு!’
‘எந்த இடத்திலும் தன் நிதானத்தை இழக்காமல் இருக்கிறவனே ஜெயிக்கிறான்.’
‘மனம்விட்டுச் சிரிப்பது, வெளியே எங்கும் செல்லாமலே ஓட்டப்பயிற்சி செய்துவிட ஒரு வழி!’
‘மற்றவர் வாழ்வில் உன்னால் ஏதேனும் நல்லதைத் தோற்றுவிக்க முடியுமானால் என்றும் அழியாத நிலை நோக்கி, ஓரடி எடுத்து வைக்கிறாய் நீ!’
‘என் ஆய்வு என் நம்பிக்கைக்கு உரம் அளிக்கிறது; நம்பிக்கை ஆய்வுக்கு உரம் அளிக்கிறது.’
‘விளைவுகளைக் கணிப்பது தான் விவேகம் என்பது.’
‘திரும்பத்திரும்ப மனிதன் தேடுவது தன் தனிமையைப் போக்கிக் கொள்ள வழிதான்!’
‘நந்நோக்கு (optimism) விவரங்களுக்காகக் காத்திருப்பதில்லை; அது நல் விளைவுகளை மட்டுமே கருத்தில் கொள்கிறது. பின்னோக்கு (pessimism) ஒரு நேர விரயம்.’
‘நம்பிக்கை வைக்க முடிவதுதான் வாழ்வின் மிகப்பெரிய உண்மை. அடைய வேண்டிய இடத்தையும் சரி, அதற்கு வேண்டிய சக்தியையும் சரி அதுவே தருகிறது.’
-கே.பி.ஜனார்த்தனன்
(‘அமுதம்’ மார்ச் 2011 இதழில் வெளியான எனது: ‘அன்புடன் ஒரு நிமிடம் – 47)
