“கடந்து போன சந்திப்புகள்” /

எஸ்.எல் நானு

வணக்கம் அன்பர்களே..

“கடந்து போன சந்திப்புகள்” என்ற புதிய தொடரை இன்று முதல் பதிவு செய்கிறேன்..

முதலிலேயே ஒன்று சொல்லிவிடுகிறேன்.. “தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அனுபங்களும்” பதிவைப் போல் இது ஐம்பத்திரெண்டு பதிவுகளெல்லாம் நீளாது..

தினமும் இல்லாவிட்டாலும் முடிந்தபோதெல்லாம் பதிவு செய்கிறேன்..

வழக்கம் போல் உங்கள் கருத்துக்களை வேண்டுகிறேன்..

ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டலாம்.. திருத்திக் கொள்கிறேன்..

இனி தொடருக்குப் போகலாமா?

கடந்து போன சந்திப்புகள்

தின வாழ்க்கையில் நாம் பல பேரை சந்திக்கிறோம்.. ஆனால் எல்லா சந்திப்புகளும் மனதில் பதிந்து நிரந்தர இடம் பெறுவதில்லை.. பல சந்திப்புகள் காய்ந்த சருகுகளாக உதிர்ந்து தொலைந்து போய் விடுகின்றன.. ஆனால் மீத மிருக்கும் சில சந்திப்புகள் நம் மனதில் ஆழமாகப் பதிந்து நிலைத்து நீங்கா இடம் பெற்று விடுகின்றன..

அப்படிப் பட்ட சில சந்திப்புகளைப் பற்றி விவாதித்தால் என்ன என்று தோன்றியதும் அசை போட ஆரம்பித்தேன்..

சில சந்திப்புகள் நினைவிலிருக்கிறது.. ஆனால் விவாதிக்கப் பட்ட விஷயங்கள் நினைவுக்கு வர வில்லை.. சில சந்திப்புகளின் ஒவ்வொரு நொடியும் பளிச்சென்று கண் முன் நிற்கிறது..

இதையெல்லாம் திரட்டி என் பாணியில் சமர்ப்பிக்கும் முயற்சி தான் இது.. கூடவே சம்பந்தப் பட்ட சில விவரணைகளும் உண்டு..

என்ன.. சந்திக்கலாமா?

***********************

(1)

“அம்மா அம்மா தாயே..

அகிலாண்டேஸ்வரி நீயே..

அன்னபூர்ணேஸ்வரி தாயே.. – நீயே

ஆதி பராசக்தி”

இந்தப் பாட்டு கணீர் குரலில் எங்கள் வீட்டில் ஸ்பூல் டேப்பில் அடிக்கடி ஒலிக்கும்.. இது மட்டுமல்ல.. இன்னும் பல பாட்டுக்கள்.. இந்தக் குரலைக் கேட்டவுடன் அந்த நாதத்திலும் பக்தியிலும் நாங்கள் எல்லோரும் மெய் மறந்து விடுவோம்..

என்னுடைய இளமைப் பிராயம் கல்கத்தாவில் தான் கழிந்தது..

எழுபதுகளின் ஆரம்பம்..

என் தந்தையார் திரு. சகஸ்ரநாமன் பிரபல கம்பெனி ஒன்றில் மேலதிகாரியாகப் பணியில் இருந்தார்..

பள்ளி / கல்லூரி கோடை விடுமுறையில் கல்கத்தாவிலிருந்து சென்னை வழியாக திருநெல்வேலி அடைந்து அங்கிருந்து எங்கள் சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சிக்கு விஜயம் செய்வோம்..

அதுவும் பெரிய லெதர் பெட்டி.. ஒரு ட்ரங்க் பெட்டி.. ஹோல்டார்.. (ஹோல்டாரில் படுக்கை, துணி இத்யாதிகள் வைத்து அப்பா பேக் செய்யும் அழகே தனி), பெரிய பிரம்பு கூடை.. அதில் அம்மாவின் கை வண்ணத்தில் இட்லி, புளியோதரை, வீட்டில் தயாரித்த உருளை சிப்ஸ், தயிர் சாதம், ஊறுகாய், சப்பாத்தி, உருளை சப்ஜி.. நினத்தால் இப்போதும் நாக்கில் நீர் வீழ்ச்சி.. கூஜா போன்ற பெரிய வஸ்துவில் தண்ணீர்.. இரண்டு மூன்று டம்ளர்கள் (ஸ்டேஷனில் காப்பி வாங்க).. கிழிந்த துணி (சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்ய).. ஓரத்தில் கல்கியோ ஆனந்த விகடனோ சொருகப் பட்டிருக்கும்..

சாதாரண ஸ்லீப்பர் வகுப்பில் மற்றவர்களோடு சேர்ந்து பயணம் செய்வது ஆனந்தம்.. விசாகபட்டினம் ஸ்டேஷனில் ஆம் சத் (மாங்காய் ஜெல்லி) வாங்கி ருசிப்பது.. ரயில் கோதாவரி கிருஷ்ணா நதிகளைக் கடக்கும் போது அபூர்வமாக பாலத்தில் பயணம் செய்யும் சந்தோஷம்.. காசு வீசி எறியும் அப்பாவிக் குதூகலம்.. ஓடும் ரயிலில் கழிப்பறையை உபயோகிக்க பயந்து அப்பாவை துணைக்கு அழைத்தது.. அந்த கழிப்பறை ஓட்டை ஒரு காலணியை விழுங்கியபோது அழுதது..

இந்த சுகமான அனுபவங்களையெல்லாம் இப்போது தொலைத்து விட்டோம் என்று நினக்கும் போதே மனது கனக்கிறது..

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் இருந்த அரசாங்க குருவிக் கூட்டு குடியிருப்பில் என் பெரியப்பா மகன் இருந்தார்.. அநேகமாக அவர் வீட்டில் தான் டிரான்ஸிட் விசிட்.. இல்லாவிட்டால் ரிப்பன் பில்டிங் எதிரே இருந்த எவரெஸ்ட் ஹோட்டலில் தங்குவோம்.. (அங்கிருந்து எக்மோர் போவது சுலபம்).

அப்போது திருநெல்வேலிக்கு ஒரே ஒரு ரயில் தான் உண்டு.. அது மாலை கிளம்பி மறுநாள் காலை திருநெல்வேலி ஜங்ஷனை அடையும்..

அங்கிருந்து பஸ் பிடித்து எங்கள் ஊர் கல்லிடைக்குறிச்சியை அடைவோம்..

பஸ் நிறுத்தத்தில் இறங்கியவுடன் மண் வாசனை நாசியைத் தாக்கி கிரங்கடிக்கும்.. கூடவே தென்றலாக வருடும் மேற்கு தொடர்ச்சி மலையின் சுவாஸம்..

தயாராகக் காத்திருக்கும் மாட்டு வண்டியில் பெட்டி முதலிய சாமான்களை அடுக்கிய பிறகு அம்மாவும், அக்காவும் ஏறிக் கொள்வார்கள்.. நானும் தொற்றிக் கொள்வேன்..

அப்பாவும் அண்ணாவும் பின்னால் நடந்து வருவார்கள்.. அப்பா சிறு வயதில் உருண்டு புரண்ட ஊர்.. கால் பதித்தவுடன் அப்பாவின் முகத்தில் பளிச்சிட்ட மலர்ச்சியை அந்த வயதிலேயே என்னால் உணர முடிந்தது..

ஸ்ரீ வராக புரத்தில் இருந்த அப்பாவின் பூர்வீக வீட்டில் என் பெரியப்பாவும் பெரியம்மாவும் இருந்தார்கள்.. பெரிய வீடு.. அதுவும் அந்த வீட்டின் முன் இருந்த பெரீரீரீய திண்ணை இன்னும் என் கண் முன் விரிகிறது.. அதில் தான் பெரியப்பா சட்டை போடாமல் உட்கார்ந்திருப்பார்.. அப்பாவும் பெரியப்பாவும் அந்தத் திண்ணையில் சாய்ந்தபடி பழங் கதைகளையும், உலக நடப்புகளையும், குடும்ப விவகாரங்களையும் அலசிக் கொண்டிருப்பார்கள்.. அதில் உடன் பிறந்த பாசம், கரிசனம், அந்யோன்யம் எல்லாம் கலந்திருக்கும்.. கண் கொள்ளாக் காட்சி..

அந்த வீட்டின் கொல்லையைத் தாண்டினால் வாய்க்கால்.. (அப்போதெல்லாம் வாய்க்காலில் எப்போதும் சுத்தமான நீர் இருக்கும்).. நீஞ்சத் தெரியா விட்டாலும் முங்கி முங்கி சுகமான குளியல்.. அடிக்கடி ஆத்தங்கரை விஜயம் வேறு..

ஆதிவராஹப் பெருமாள் கோவில், சிவன் கோவில், முருகன் கோவில் என்று விடாமல் தரிசனம். நடுவில் குற்றாலம் / பாபநாசம் விசிட் வேறு..

ஆனந்தமாக பதினைந்து நாட்கள் கழித்து விட்டு மீண்டும் கல்கத்தாவுக்குப் பயணம்..

ஒரு முறை கல்லிடைக் குறிச்சியிலிருந்து கிளம்பி திருநெல்வேலி ஜங்கஷனை அடைந்து சென்னை செல்லும் ரயிலிலும் ஏறிவிட்டோம்..

அப்போது…

(சந்திப்பு தொடரும்)

2 Comments on ““கடந்து போன சந்திப்புகள்” /”

Comments are closed.