
பிரமிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை : (பிரமிள் நூலகம் மயன் – இன்றைய பதிவிலிருந்து)
———————————————
தேடல் – விளாடீமர் நபக்கவ்
——————————————-
தொட்டில் ஒரு அகாதத்திற்கு மேல் அசைகிறது. இருபுறமும் எல்லையற்றுக் கிடக்கிற ஒரு இருளில் தோன்றும் ஒளி வெடிப்பு இந்த உயிர்வாழ்வு என உபதேசிக்கிறது பொதுப்புத்தி. இருபுறமும் ஒரே வகை இருளின் இரட்டையே எனினும், தன்னைத் தோற்றுவித்த திசையிலுள்ள முன்னோடி அகாதத்தை நோக்குகிற அமைதியுடன் மனிதன் (மணிக்கு நாலாயிரத்து ஐநூறு இதயத்துடிப்புகள் என்ற வேகத்தில்), எதிர்வருகிற முடிவின் அகாதத்தை நோக்குவதில்லை… இயற்கையோ எனில், நடுவே தோன்றுகிற அசாதாரணமான தரிசனத்தை ஏற்றுக்கொள்கிற அதே உறுதியுடன் அதற்கு இருபுறமும் உள்ள இருண்ட சூன்யங்களையும் ஒரு மனிதன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறது. இதன்படி, அழியாதவன், முதிராதவன் என்று இருவருக்குமே பேரானந்தம் தருகிற கற்பனா சக்தி கட்டுப்படுத்தப்பட்டாக வேண்டும் – ஆனந்தமாக வாழ்வை அனுபவிக்க வேண்டுமானால், ரொம்பவும் ஆனந்தப்பட்டு விடக்கூடாது.
இந்த நிலைமையை எதிர்த்து நான் கிளர்ச்சி செய்கிறேன். எனது கிளர்ச்சியை வெளியுலகுக்குக் கொண்டு சென்று இயற்கைக்கு எதிராக ஒத்துழையாமை செய்கிற முனைப்பு தோன்றுகிறது. எனது வாழ்வின் இருபுறமும் உள்ள அமானுஷ்யமான இருளிலே மிக மங்கிய தனது தனி மானுட மினுக்கங்களையேனும் கண்டுபிடிக்க, மீண்டும் மீண்டும் எனது மனம் பிரமாண்டமான யத்தனங்களைச் செய்துள்ளது. என்னையும், தட்டித்தட்டி சிராய்வற்ற என் முஷ்டிகளையும் காலாதீதத்தின் சுதந்திர சாம்ராஜ்யத்திலிருந்து பிரிக்கிற காலச்சுவரில் மூடியுள்ள கதவு இந்த இருள் என்ற நம்பிக்கையை, உடலெங்கும் கண்றாவியாக சாயம் தீட்டிக் கொண்டுள்ள எந்தக் காட்டுமிராண்டியுடனும் நான் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நினைவுகள் பரிதாபமாகச் சுருங்குமளவுக்கு நான் எண்ணங்களின் வழியில் பின்னோக்கி, காலச் சிறையினுள்ளிருந்து தப்பிக்க ஏதும் ஒரு ரகசிய வழி இருக்கிறதா எனத் தேடி, பிரதேசங்களுக்கு யாத்திரை மேற்கொண்டேன். நான் கண்டறிந்ததுவோ, வெளியேற வழியற்ற ஒரு கோள வடிவான சிறையே காலம் என்பதைத்தான். தற்கொலையைத் தவிர எல்லாவித வழிகளிலும் முயன்று பார்த்தாயிற்று. நான் ஒரு சம்பிரதாயமான ஆவி என்று தோன்றுவதற்காக, இன்னான் என்ற எனது அடையாளத்தைக் கழற்றி வைத்துவிட்டு, எனது கருவுக்கு முந்திய பிராந்தியங்களினுள் பதுங்கி நுழைய முயன்றிருக்கின்றேன். ரோமன் ரோடுகளில் தூதுவக் குதிரை வீரர்களாகவும் திபேத்தின் லாஷாவில் மரங்களினடியிலேயே வீற்றிருந்த ரிஷிகளாகவும் தங்களுடைய சென்ற ஜன்மங்களை நினைவுகூர்கிற விக்டோரியன் பாணி நாவலாசிரியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் போன்றோரது சகவாசங்களை நான் தாங்கி ஏற்றிருக்கிறேன். எனது மிகப் பழைய கனவுகளிலிருந்து திறவுகோல்கள், தடயங்கள் கிடைக்குமா என்று துருவித் தேடி இருக்கிறேன் – இவ்விடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லி விடவேண்டும் – காமார்த்தக் குறியீடுகளைக் கிறுக்குத்தனமாகத் தேடும் பார்வையும் இயற்கை அளித்த மூலைப் பொந்துகளில் இருந்து தங்களுடைய பெற்றோரின் காமலீலைகளை ஒட்டுப்பார்க்கிற கசப்பான சிறு கருக்களும் உலவுகிற பாமரமான, அலங்கோலமான, அடிப்படையில் ஐரோப்பாவின் இருண்ட காலத்துக்கு உரிய ஃபிராய்டின் உலகத்தை நான் நிராகரிப்பவன்.
முதல் பார்வையில் அளவற்றதாகத் தோன்றிய காலம், ஒரு சிறை தான் என்ற பிரக்ஞை எனக்கு ஆரம்பத்தில் தோன்றவில்லை.
(An opening passage of an Autobiography Speak Memory by Vladimir Nabokov)
படிமம், வர்ஷருது / Winter 1981. (ஆசிரியர் : பிரமிள் / கால சுப்ரமணியம் பதிப்பு)

