குரைக்கிற நாய்கள் /ப.உ.தென்றல்

மதில் மேல் அமர்ந்திருக்கும்
பூனையைப் பார்த்து
நெடுநேரமாய்க்
குரைத்துக் கொண்டிருக்கின்றன
நாய்கள்.

கால்களை உயர்த்தினாலும்
எட்ட முடியாத உயரம்.

உருட்டும் விழிகளால்
சலனமின்றி
வேடிக்கைப் பார்த்துக்
கொண்டிருக்கிறது
கிழட்டுப் பூனை.

எத்தனை நாய்களைப்
பார்த்திருக்கும்…

நினைவில் வந்து போகிறது:
“குரைக்கிற நாய்களப்
பாத்துக்கிட்டு இருந்தா
வேல நடக்காது”.

எல்லா இடத்திற்கும் பொருந்துவது.

நாய்களைக் குறைத்து
மதிப்பிட வேண்டாம்.

மனிதர்களை விட
நாய்கள்
நன்றியுள்ளவை…