ஔவையார் தனிப்பாடல்கள்/ வளவ. துரையன்

கூரிய வாளாற் குறைத்திட்ட கூன்பலா
ஓரிதழாய்க் கன்றாய் உயர்மரமாய்ச் – சீரியதோர்
வண்டுபோற் கொட்டையாய் வன்காயாய்த் தின்பழமாய்ப்
பண்டுபோல் நிற்க பலா.


குறமகள் ஒருத்தி செல்லமாக வளர்த்துவந்த பலாமரத்தை யாரோ குறும்புக்கு வெட்டிவிட்டனர். அவள் அழுதுகொண்டிருந்ததை அவ்வழியே சென்ற ஔவையார் பார்த்து அந்தப் பலா தழைக்கப் பாடிய பாடல் இது.

வாளால் வெட்டப்பட்ட இந்த வேர்ப்பலா ஓரிதழ்க் கன்றாய், உயர்மரமாய் வளர்ந்து பழம் பழுத்துப் பண்டுபோல் நிற்க வேண்டும் என்கிறது இந்தப் பாடல். ஔவையின் வாக்கு பலித்தது என்பது ஐதீகம்.

கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறமகளும்
மூழைக் குழக்குத் தினைதந்தாள் – சோழாகேள்
உப்புக்கும் பாடி புளிக்கும் ஒருகவிதை
ஒப்பிக்கும் என்றன் உளம்.


பலாமரம் பண்டுபோல் தழைத்திருக்கக் கண்ட குறமகள் ஔவைக்கு அகப்பையால் மொண்டு தினைச்சோறு போட்டாள். அத்துடன் ஔவை பொங்கி உண்ண ஒரு உழக்குத் தினையரிசியும் தந்தாள். இதனை ஔவையார் சோழவேந்தனிடம் தன் பெருமிதம் தோன்றப் பாடிய பாடல் இது. ஔவை உப்பிட்டு உணவளித்தவரையும் பாடுவாராம். ஏதும் தராமல் புளிக்கச் செய்தவரையும் பாடுவாராம்.

One Comment on “ஔவையார் தனிப்பாடல்கள்/ வளவ. துரையன்”

Comments are closed.