20 வருடங்கள் கடந்தும்…./ராம் ஸ்ரீதர்

20 வருடங்கள் கடந்தும் சிரிப்பை விடாது பரப்பும் “பஞ்ச தந்திரம்” திரைப்படம்:
கமல் – கிரேஸி மோகன் கூட்டணி ‘அபூர்வ சகோதரர்கள்” திரைப்படத்தில் பெரிய வெற்றியுடன் ஆரம்பித்து, பிறகு இந்தக் கூட்டணியில் வந்த எல்லாப் படங்களும் மிகவும் அருமையானவை. சிரித்து, சிரித்து நம்மை மகிழ வைப்பவை ; உதாரணமாக மைக்கேல் மதன காம ராஜன், அவ்வை ஷண்முகி, பஞ்சதந்திரம், வசூல் ராஜா ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.
இதில் 2002-ம் ஆண்டில் வெளிவந்த பஞ்சதந்திரம் திரைப்படம் 20 ஆண்டுகளை சமீபத்தில் கடந்துள்ளது.
இப்போதும் பஞ்சதந்திரம் ரசிகர்கள் மத்தியில் நிரம்பிக்கிடக்க காரணம், அது எடுத்துக்கொண்ட நகைச்சுவை களம் மிகமுக்கிய காரணம். பஞ்சதந்திரம் கதைக் களத்தின்படி, வெவ்வேறு மொழிகளைப் பேசும் 5 நெருங்கிய நண்பர்கள். இந்த ஐவரையும் இணைக்கும் புள்ளி, அவர்களது நட்பு!
இணைபிரியாத அந்த ஐவர் குழு, தாங்கள் செய்யாத ஒரு கொலையை தாங்கள் தான் செய்துவிட்டதாக எண்ணி, அதிலிருந்து வெளிவர நினைத்து நகைச்சுவை கலந்து அல்லாடுவதுதான் கதைக்களம்.
கிரேஸி மோகனின் வசனங்களைப் போல் இப்படத்தின் இசையமைப்பாளர் தேவாவின் இசையும் கைகொடுத்தது. இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் முணுமுணுக்கப்படுகிறது. பஞ்ச தந்திரம் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று மிகப்பெரும் வசூல் சாதனைப் படைத்தது.
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காமெடி படத்தை இனி நினைத்தாலும் எடுக்க முடியாது எனும் அளவுக்கு நகைச்சுவையால் இந்தப் படத்தை நிரப்பி எடுத்திருப்பார்கள். படத்துக்கு வசனம், கிரேஸி மோகன். திரைக்கதை, நடிகர் கமல்ஹாசனும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும்!
பஞ்சதந்திரம் எவ்வளவு பெரிய வெற்றி என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கமல் எப்போதுமே தன்னையும் தான் சார்ந்த துறையான சினிமாவையும் தன் படங்களின் மூலம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடிய நபராகவே இருந்து வருகிறார் என்பதை யாரும் மறுக்கமுடியாது. இதற்கு பல படங்களை நாம் உதாரணம் சொல்லலாம் என்றாலும், அதில் முக்கியமானது பஞ்சதந்திரம்.
நடிகர்கள் ஜெயராம் – யூகி சேது – நாகேஷ் – ஸ்ரீமன் – மணிவண்ணன் ஒருபக்கம் என்றால், நடிகைகளில் சிம்ரன் – தேவயானி – ரம்யா கிருஷ்ணன் – சங்கவி – ஊர்வசி என நடிகைகள் பட்டியலும் படத்தில் உண்டு. எல்லோருக்கும் அவர்களுக்கான அளவில் முக்கியத்துவம் கொடுத்து, நல்ல ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்திருப்பார்கள்.
இந்தப் படத்திற்கு முன் வந்திருந்த ஆளவந்தான் திரைப்படம், கமலுக்கு வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியையே கொடுத்திருந்தது.
மேலும் பஞ்சதந்திரம் வெளிவந்த சமயத்தில்தான், நடிகர் கமல்ஹாசன் தனது மனைவி சரிகாவை பிரிந்தார். இதனால் தனிப்பட்ட வாழ்விலும் சவாலான காலகட்டத்தில் அவர் இருந்தார்.
பஞ்சதந்திரம் படம் வெளியாகையில், கமல் கொடுத்த பேட்டியொன்றில் “படத்தைப் பற்றி வெளிவரும் எல்லா விஷயங்களுமே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்திருந்தாலும், இந்தப் படம் என் முகத்தில் எப்போதும் புன்னகையை வரவழைத்தது. என்னை அமைதிப்படுத்தத் தேவையான விஷயமாக படம் உள்ளது” என்று பேசியிருந்தார்.
பெரும்பாலான சினிமாக்களில் காமெடி என்றாலே டபுள்-மீனிங் இல்லாமல், உடல் சார்ந்த கேலிகள் இல்லாமல் எதுவும் வருவதில்லை. ஆனால் ஒரு முழு நீள காமெடி படமான பஞ்சதந்திரத்தில், டபுள்-மீனிங் காமெடிக்களே இருக்காது. எல்லாமே நினைத்து, நினைத்து சிரிக்க வைக்கும் சூழ்நிலை நகைச்சுவைகள் தாம்.
இந்தப் படத்தின் மகத்தான வெற்றி இப்போது 20 வருடங்கள் கழித்து, அதே ஜெயராம், யூகி சேது, ஸ்ரீமன், ரமேஷ் அரவிந்த் நால்வர் கூட்டணியுடன் சமீபத்தில் வெளியாகி வசூலில் பல சாதனைகளை முறியடித்து தூள் கிளப்பிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தின் பிரமோஷனுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
நகைச்சுவையில் இந்தப் படம் மறக்க முடியாத ஒரு “CULT STATUS” என்று சொன்னால் மிகையில்லை.