கோபிகிருஷ்ணன் – தேர்ந்தெடுத்த கதைகள்/ஜெ.பாஸ்கரன்

(தேர்வும் தொகுப்பும் ந.முருகேசபாண்டியன். டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை 600078. செல்: 9940446650)

“கதைகளின் வாயிலாக அறியப்படும் கோபி எதிலும் பரபரப்பு அற்றவர்; திடுக்கிடும் சம்பவங்களை வெறுத்து ஒதுக்குபவர்; போலியாக மனநிறைவு தரும் சுப முடிவுகள் குறித்து அக்கறையற்றவர்; மயிர் பிளக்கும் விவாதங்கள், செறிந்த மொழிநடையைப் புறக்கணிப்பவர். எல்லாவற்றையும் விடப் பொதுவாகக் கதைகளை முடிப்பதில் அவருக்கு விருப்பமில்லை”. பதினான்கு பக்கங்களுக்கு நீளும் தன் முன்னுரையில் தொகுப்பாளர் முருகேசபாண்டியன் குறிப்பிடும் கோபிகிருஷ்ணனின் கதைகளின் குணநலன்களை ஒரு வாசகனால் இத்தொகுப்பில் நன்கு உணரமுடியும்!

நகுலன் கதைகளில் காணப்படும் மனப்பிறழ்வு நிலைகளை, கோபிகிருஷ்ணனின் கதை மாந்தர்களிடமும் காண முடிகிறது. மனநோய் என்பது மனப் பிறழ்வு – வேறொரு மனநிலை. அதுகுறித்து எழுதுவதும், விவாதிப்பதும் கூர்மையான பார்வையையும், வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் மனோபாவத்தையும் வேண்டுவது. ஆனால், வாழ்க்கையின் நிகழ்வுகளை, மனநிலை பாதித்த ஒருவரே விவரிப்பது போல எழுதுவது – பிறழ்ந்த மனதினில் புகுந்து, அதன் பார்வையில் உலகைக் காண்பது – சற்று சிரமமானது. அதற்குத் தனி அனுபவம், பயிற்சி எல்லாம் தேவைப்படுகிறது. கோபியின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அவரது சமூகப் பணித் துறை அனுபவங்களையும் பார்க்கும்போது, இந்தத் தொகுப்பிலுள்ள கதை மாந்தர்களின் மனோநிலையை அவர் பல கோணங்களிலும் சிந்தித்துப் பிரதிபலித்திருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகின்றது.

“என் எண்ணங்களை, அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் எழுதுகிறேன். எனக்கு வாழ்க்கை இப்படி இம்மாதிரி அமைந்திருக்கிறது. உங்களுக்கு எப்படி….. என்பது போலத்தான்” என்கிறார் கோபி.

கோபியின் கதைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவரது ‘காணி நிலம் வேண்டும்’ கதையை (?நெடுங்கதை) அவசியம் வாசிக்க வேண்டும். சென்னையின் ஒண்டுக்குடித்தனங்கள், ஆரோக்கியமற்ற சூழ்நிலைகள், லாட்ஜின் குடிமகன்கள், சந்தேகங்கள், அதிர்ச்சியான சம்பவங்கள், வீட்டுக்காரம்மாளின் சலம்பல்கள், ஆண்,பெண் உறவுமுறைகளில் பிறர் காணும் சிக்கல்கள், மாறி மாறி வரும் புதுக் குடித்தனக்காரர்களின் முரண்கள், சாதி குறித்த விவரணைகள் – கோபியின் சமூகப் பார்வை நம்மை வியப்பிலாழ்த்தும்! Paranoia, tranquilizers, romance, self image, hysteria, schizophrenia, pedantry போன்ற ஆங்கிலச் சொற்களை அப்படியே எழுதிவிடுவதால், நேரடியாக உரையாடும் உணர்வு வந்துவிவதென்னமோ நிஜம் – ஆனால் எல்லோருக்கும் புரியுமா? என்ற கேள்வி எழுகிறது. கேலி, கிண்டல், பகடி, நக்கல் என ஒவ்வொரு விவரிப்பும், சமூக அவலங்களை கிழித்துத் தொங்க விடுகின்றன.

“உளவியல் மீது எனக்கு சொந்தவகையில் ஒரு வெறுப்புதான். எதற்கெடுத்தாலும் அலசல், ஆய்வு. வாழ்க்கையில் உள்ள romance செத்துதான் போய்விடுகிறது. எதையுமே சாதாரண மனிதன் அனுபவிப்பது போல் ரசனையுடன் அனுபவிக்க முடிவதில்லை. உளவியல் படிப்பு ஒரு சாபக்கேடே”. என்பதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

“மற்றவர்கள் தன்னைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டும் என்று நினைப்பவனும், தன் தோற்றத்தைப் பல பேர் ஏற இறங்கப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று எக்கச்சக்க அழகாக உடுத்திக்கொள்ளும் பெண்ணும், நடனக் கலைக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கவர்ச்சி நடனக்காரியும் மனநோய் பிடித்தவர்களே” என்கிறார் ஓரிடத்தில்.

“Double standard உள்ள அனைவரும் Schizophrenia (split personality) மனநோயாளிகளே”. என்கிறார் மற்றோரிடத்தில்.

சில இடங்களில் வாசகனுக்குப் புரியவேண்டும் என்பதற்காக, சில மனப்பிறழ்வு நிலைகளை விவரிப்பது, சோர்வைத் தருகிறது.

வித்தியாசமான வாசிப்பானுவத்தைத் தருகிறது ‘காணி நிலம் வேண்டும்’! (தொகுப்பின் முதல் கதை).

‘இனிமையான வக்கிரம்’ – மகள் வயதில் ஒரு நட்பு – child என்றே கூப்பிடுகிறார் கதை சொல்லி. அவளுடைய boy friends, வேலை மாற்றம், கர்ப்பிணியாதல், பின்னர் காஞ்சீபுரத்தில் வேலை, அங்கும் ஆண்கள் நட்பு என விரிவாகச் சொல்கிறார். தன்னையே ஒரு lousy pervert என்று நண்பர் சொல்லுவதாக முடித்து, அனைத்தும் அவரது கற்பனைகளா அல்லது உண்மையில் நடந்தவைகளா என்பதை வாசகனின் யூகத்திற்கே விட்டுவிடுகிறார்.

‘தேவதைகள் விண்ணப்பிக்கலாம்’ – வயதான முதலாளியின் சபலத்தைக் கேலி செய்கிறார்.

‘பீடி’- வாழ்வின் பல தருணங்களில் பீடி எப்படி உபயோகப் படுகிறது என்பதைப் பகடி செய்யும் கதை. ஆனாலும் ‘பீடி ஒரு சமூகக் குறியீடு. புகையிலையை நியாயப்படுத்தும் மூடத்தனம்தான். ஆனாலும் வாழ்க பீடி. குறியீடு ஒழியச் சாத்தியமில்லை’ என்று முடிக்கிறார்!

‘இழந்த யோகம்’ – சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விடுவதில் உள்ள மனச்சிக்கல்களைப் பகடி செய்கிறது. ‘கருத்தரங்கில் கணக்கில் கொள்ளப்பட்டவை’ – மனநோயாளிகளை எப்படி அணுகுவது என்பதற்கான கருத்தரங்கு பற்றியும், அதனால் ஏதும் பயனில்லை என்பதையும் பகடி செய்கிறது.

‘சிதைந்த நிலையில் ஒரு சிநேகிதி’ யில் மனதில் ஒரு தேவதை, ‘குறுக்கீடு’ கதையில், மனதில் ஒரு பேய், ‘அன்பான வனதேவதைக்கு’ கதையில் ஒரு சாத்தான் என மனப்பிறழ்வு கொண்டவர்களின் ஹாலூசினேஷன் பற்றிய விவரணைகள் – மனப்பிறழ்வு நோயாளிகளுக்கு, அது ஒரு நோய் என்பதே தெரியாது. உள்ளே தோன்றும் பிம்பங்கள், எண்ணங்கள் எல்லாவற்றுக்கும் ஓர் உருவம் அளித்து உடன் இருப்பதாய் எண்ணிக்கொள்வார்கள் – மிக சுவாரஸ்யமாக இதனை வெளிப்படுத்தியிருக்கிறார் கோபிகிருஷ்ணன் இந்தக் கதைகளில்!

பீடி, சிகரெட், ஜட்டி போன்றவை பெரும்பாலான கதைகளில் ஒரு பாத்திரமாகவே வருகின்றன!

மனப்பிறழ்வு உள்ளவர்களுக்கும், அது அல்லாதவர்களுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் – இதனை மிக எளிதாகத் தன் கதைகளில் வெளிக்கொண்டு வந்துள்ளார் கோபிகிருஷ்ணன்.