
சமீபத்தில் அறிவியல், அறிவியலுக்கான மொழி, கணினி நிரல் எழுத – உள்ளீடு செய்வதற்கு – எளிமையான மொழி என்பவை பற்றி… பிரித்தறியத் தெரியாததனால் – சில குழப்பங்கள் ஏற்பட்டன.
உலக மொழிகளில் எழுத்துவடிவங்களில் தமிழ் ஒரு எல்லையிலும் சீனமொழி போன்றவை மறு எல்லையிலும் நிற்பவை. இடைப்பட்ட நிலையில் ஆங்கிலம் போன்றவை உள்ளன. எளிமையாக (எழுவாய் பயனிலை செயப்படுபொருள் என்று) எடுத்துக் கொண்டால், சீனமொழி சொன்மை நிலையில் தனித்தனி எழுத்துக்கள் ஓரெழுத்து ஒருமொழியாய் நின்று பொருண்மையைத் தரும் சித்திர எழுத்துக்களின் வழி வந்தது. தமிழ் வேற்றுமை விகுதிகளைக் கொண்டு பொருண்மையைப் பிறப்பிக்கும் ஒட்டுநிலை மொழி வகை. ஆங்கிலத்தில் ஆர்ட்டிக்கல், பிரிபோசிசன் என்று வந்தும் தனியே நின்றும் சொற்களை இணைக்கும் வகையான இடைப்பட்ட மொழி. எனவே தமிழ் வாக்கியத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றி எழுதமுடியும். (மாற்றிலக்கணம் தெரிந்தவர்களுக்கு இது விரியும். இன்று சசூரிய அமைப்பு மொழியியலுக்கு மேல் நோம் சாம்ஸ்கியின் மாற்றிலக்கணம் வளர்ந்துவிட்டதே பலருக்கும் தெரிவதில்லை – குறிப்பாக இன்றும் பின் அமைப்பியம். பின் நவீனத்துவம் பேசும் 90களின் தமிழ் அறிவுஜீவிகளுக்கு.).
சமஸ்கிருதம், (ஜெர்மன், ஆங்கில) இந்தோ-ஆரியன் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால் திராவிட மொழிக்குடும்பத்தின் வாக்கிய அமைப்பை ஏற்றுக்கொண்டது. ஹிந்தி போன்ற அபிப்ராம்ச மொழிகளைத்தான் பயிலச்சொல்லமுடியுமே தவிர இன்றைக்கு சமஸ்கிருதத்தை சாதாரணமானோர் யாரும் கற்கவோ, பயன்பாட்டுக்குக் கொண்டுவரவோ பெரிதும் தேவையில்லை. அதன் சிறிய இலக்கியப் பகுதிகளையும், நிறைந்த (வைதிகம், பௌத்தம், சமணம் சார்ந்த) சமய தத்துவப் பகுதிகளையும் ஆங்கில மொழிபெயர்ப்பில் வழி நன்றாகவே தெரிந்துகொள்ள முடியும். ஆய்வாளர்கள், வல்லுநர்கள் அதைக் கற்றுப் பயன்படுத்தினால் போதுமானது.
ஆனால் இன்று உலகின் பல மொழிகள் கணினி நிரல்களாக உள்ளிடப் படுகின்றன. தெளிவான எளிய இலக்கண வரையறைகளைக் கொண்ட மொழிகளை இப்படி உள்ளிடுவது எளிது. எனவே பேச்சுவழக்கு இல்லாத அந்தக் காலக் கல்வி வழக்கு மொழியான சமஸ்கிருதத்தை எளிதில் உள்ளீட்டு நிரல் செய்ய முடியும் என்கிறார்கள். (அறிவியல் மொழி என்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை). தமிழ் இன்றுவரை புழங்கிவரும் ஆதிமொழி. எனவே காலத்துக்குக் காலம் இலக்கண மாற்றங்களுக்கும் பேச்சுவழக்கின் நெகிழ்வுக்கும் உட்பட்டு வளர்ந்தது. எனவே தொல்காப்பியம், நன்னூல் போன்றவை வழி தெளிவான துல்லியமான வரையறைகள் இருந்தாலும் அவற்றை (புணர்ச்சி, தோன்றல் திரிதல் கெடுதல் விகாரங்களை) விளக்குவதில் சிலர் மாறுபாடுகளைத் தெரிவிப்பார்கள். (இன்று உள்ள பல பிழை திருத்திகளில் மொழிபெயர்ப்பான்களில் ஏன் இந்தக் களேபரங்கள் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.)
ஆங்கிலத்தின் மூலம் உலகத் தத்துவத்தையும். அறிவியலைத் தெரிந்துகொள்கிறோம். (இந்தியாவையும் – ஏன் தமிழையும் கூட – நாம் ஆங்கிலத்தின் மூலம் தான் தெரிந்துகொள்கிறோம்). ஆங்கிலேயத் தத்துவமும் அறிவியலும் அதில் ஒரு சிறு பகுதிதான்.
(சொற்பிழை, இலக்கணப் பிழை திருத்திகள், மொழிபெயர்ப்புக் கருவிகளில் இன்னும் துல்லியத்தைப் பெறவே சிலர் பாடுபட்டு வருகிறார்கள். ஆங்கிலத்தைப் போன்று ஓரளவுக்கான நிறைவையாவது தமிழ்மொழி பெற மேலும்மேலுமென முயன்றுவருகிறார்கள் என்றே சொல்லலாம். கம்ப்யூட்டேசனல் லிங்கஸ்டிக்ஸில் திறமையும் பயிற்சியும் பெற்ற தெய்வசுந்தரம் (மென்தமிழ்) போன்றவரது முகநூல் விவாதங்களைத் தொடர்நது கவனித்துவருகிறேன். அவரது வகுப்புகளையும் சிலவற்றைக் கேட்டு வியந்திருக்கிறேன். (நான் உயர்கல்வியில் இலக்கணம், மொழியியல், மொழிபெயர்ப்பியல் கற்பித்தவன் என்பதை விட தனிப்பட்ட ஆர்வத்தில் இவற்றின் எல்லா நூல்களையும் கற்பவன் என்ற முறையிலும் வல்லுநர்களின் நேர் வகுப்புகளை முடிந்தவரை கேட்டுநுகர்பவன் என்ற முறையிலும் தொடர்ந்து செயல்படுபவன். முன்பு கோவை செம்மொழி மாநாட்டில் கணினியாளர் மாநாடும் ஒருபுறம் நடந்தது. நான் ஒரு இலக்கிய அரங்குக்குப் பொறுப்பாக இருந்ததால், அதை மற்றவரிடம் விட்டுவிட்டு இந்தத் தனிமாநாட்டை அக்கறையுடன் கவனித்து வந்தேன். பிழைதிருத்திகள் அன்று ஆரம்பநிலையில் இருந்தன. அதன் நிரலிடுகையில் ஏதாவது சிக்கல் வந்தால், அதை ஒருவகையாக ஏமாற்றித் தவிர்த்து நிரல் செய்துவிடுவோம் என்றே ஒரு வல்லுநர் சொல்வதைக் கேட்டேன். கோவை வேளாண் பல்கலையில் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த கணினி மாநாட்டிலும் பார்வையாளனாக் கலந்துகொண்டிருக்கிறேன்.)
(முடிந்தால் மேலும் சொல்லலாம்)
