TUSITALA வுடன் நான்!/ஜெ.பாஸ்கரன்

சமோவா (Samoa) நாட்டில் (‘ஓசியானியா’ வில் ஒரு நாடு), உபோலு (Upolu) என்னும் தீவில், வைலிமா கிராமத்தில் ஆர்.எல்.ஸ்டீவன்சன் – ஸ்காட்டிஷ் கவிஞர் மற்றும் நாவல் எழுத்தாளர் – ஒரு எஸ்டேட்டை நிறுவுகிறார். சமோவா மொழியில், “டுசிடலா” (Tusitala) என்பது ‘கதை சொல்கிறவன்’, என்ற பொருளில் வருகிறது. ஸ்டீவன்சனின் வாழ்க்கையுடன் தன் வாழ்க்கையும் ஒத்துப் போவதை, என் நரம்பியல் குரு திரு கிருஷ்ணமூர்த்தி ஶ்ரீனிவாஸ் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறோம் – அவரது வாழ்க்கையின் நினைவலைகளை அந்தப் பெயரிலேயே – TUSITALA – புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள் ‘நியூரோக்ரிஷ்’ (Neurosciences India Group) நிறுவனத்தினர். சுவாரஸ்யமான தொகுப்பு. பேராசிரியர் கே.ஶ்ரீனிவாஸ் அவர்கள் வாழ்க்கையும், நரம்பியல் துறைக்கு அவர் ஆற்றியுள்ள சேவைகளும், நரம்பியல் சிகிச்சை முறைகளை ஏழை எளியவர்களுக்கும் எடுத்துச் செல்ல கட்டமைத்த இரு மையங்களும் (VHS and PHC) இளம் மருத்துவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

முப்பது வருடங்களுக்கும் மேலாக, அவரது வழிகாட்டுதலில் நரம்பியல் துறையில் நானறிந்து கொண்டவைகள், எந்த ஒரு தனி கல்லூரியோ, பல்கலைக் கழகமோ கற்றுக்கொடுத்துவிட முடியாது. நரம்பியல் மருத்துவனாக இன்றைய என் சேவைகளுக்கு ஆதாரமானவை அவரது வழிகாட்டுதல்களேயாகும். அவரது முயற்சியாலேயே, லண்டனில் குவீன் ஸ்கொயர் நேஷனல் நரம்பியல் இன்ஸ்டிடியூட்டில் மேற்படிப்பு படிக்க முடிந்தது. என் வாழ்க்கையின் பெரும் பகுதி அவரது வழிகாட்டுதலிலேயே பயணித்திருக்கிறது.

அவரது வாழ்க்கைச் சரித்திரத்தில் எனக்கும் ஒரு சிறு இடம் கிடைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். அதற்காக, நியூரோசயின்சஸ் இந்தியா க்ரூப் நிறுவனத்துக்கு நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

அவருடன் ஆன என் அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுதினேன் – அவரது 80 ஆவது பிறந்தநாளில் அனைத்து மாணவர்கள் சார்பில் அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டு, எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது, எனக்குக் கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறேன். ( என் ‘அப்பாவின் டைப்ரைட்டர்’ புத்தகத்தில் அந்தக் கட்டுரையின் தமிழ் வடிவம் இடம்பெற்றுள்ளது).

இத்துடன் TUSITALA வின் அந்தப் பக்கங்களைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்!