கம்பனைக் காண்போம் 48 /வளவ. துரையன்

    அகமும் புறமும்

பொற்பின் நின்றன பொலிவு பொய்இலா       
நிற்பின் நின்றன நீதி மாதரார்
அற்பின் நின்றன 
அறங்கள் அன்னவர்    
கற்பின் நின்றன 
காலமாரியே                             [91]            

[பொற்பு=நல்ல குணங்கள்;பொலிவு=அழகு; அற்பு=அன்பு; காலம் மாரி=பருவ மழை]
கோசல நாட்டு மக்களின் அக பண்புகள் சிறப்பாக இருந்ததானால் அவர்தம் புற அழகுகளும் சிறந்திருந்தனவாம். நல்ல குணங்கள் அவர்களிடம் இருந்ததால் புற அழகும் நிரம்பி இருந்தது. அவர்களுடைய பொய்யில்லாத தன்மையால் நீதிகள் எல்லாம் நிரம்பி இருந்தன. அவர்களின் அன்பினால் அறங்கள் நாட்டில் நிரம்பி இருந்தன. அந்நாட்டு மகளிரின் கற்புத் திறத்தால் பருவ மழைகள் காலந்தவறாமல் பொழிந்தன.
இவ்வாறு அகப்பண்புகள் சிறந்துள்ள மக்கள் வாழும் நாட்டில் அவர்கள் வாழ்வதற்கேற்ற புறச்சூழலும் அமையுமென்பது தெரிகிறது.
இப்பாடலின் பின்னிரண்டடிகள் மகளிரையும், முன்னிரண்டடிகள் ஆடவரையும் குறிக்கும்.