கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

                                            (3)

முருகன் தான் அப்பாவின் இஷ்ட தெய்வம்.. “முருகா முருகா” என்று அடிக்கடி அவர் மெய்மறந்து விளிப்பதைக் கேட்க எனக்கு ரொம்பவே பிடிக்கும்… ஒவ்வொரு சனிக்கிழமையும் முருகனுக்கு

“ஓம் அசிந்த்யசக்தயே நம:
ஓம் அநகாய நம:
ஓம் அஷோப்யாய நம:”

என்று சுப்ரமணிய சகஸ்ரநாமாவளி சொல்லி பூஜை பண்ணுவார். பூஜை முடிந்து கந்தர் அனுபூதியும் கந்தர் சஷ்டி கவசமும் அப்பாவும் அம்மாவும் அக்காவும் சேர்ந்து பாராயணம் செய்வார்கள்.. அதன் பிறகு பிரசாத நெய்வேத்தியம், கற்பூரம் நீராஞ்சனம், தீர்த்தவாரி, பிரதட்சணம், நமஸ்காரம்..

அந்த வயதில் எனக்கு இதுக்கெல்லாம் பொறுமை இருக்காது.. ஆனால் சனிக்கிழமை எப்போது வரும் என்று ஆவலாகக் காத்துக் கொண்டிருப்பேன்.. காரணம் அம்மாவின் கைவண்ணத்தில் தயாராகும் பிரசாதம்.. ஒரு வாரம் இனிக்க இனிக்க சக்கரைப் பொங்கல்.. இன்னொரு வாரம் சுண்டக் காய்ச்சிய பால் பாயசம்.. சில சமயம் சேமியாப் பாயசம்.. கூடவே எல்லா வாரமும் உளுந்து வடையும் உண்டு.. சஷ்டி போன்ற விசேஷ நாட்களில் சில சமயம் நெய் மிதக்க மிதக்க அரவணை (கேரளாவில் பிரசித்தம்.. சபரிமலையில் பிரசாதம்) தயாரிப்பாள்.. அன்று பஞ்சாமிருதமும் சேர்ந்துக் கொள்ளும்.. எல்லாமே அவ்வளவு ருசி.. அதன் இனிப்பும் சுவையும் இன்னும் கூட நாக்கில் மிச்சம் இருப்பது போன்ற உணர்வு.. எப்போது அப்பா பூஜையை முடிப்பார்.. எப்போது தட்டில் பிரசாதம் விழும் என்று நான் தவம் கிடப்பேன்.. கந்தர் அனுபூதியையும் கந்தர் சஷ்டி கவசத்தையும் அவர்கள் பாராயணம் செய்யும் போது.. அதை இயற்றிய அருணகிரிநாதர் மேலேயும் தேவராய சுவாமிகள் மேலேயும் எனக்குக் கோபமாக வரும்.. எதற்காக அவர்கள் இவ்வளவு நீளமாக இயற்றியிருக்கிறார்கள்? சுருக்கமாக இருந்தால் நான் சீக்கிரம் பிரசாதம் சாப்பிடலாமே.. குழந்தைத்தனம்.. இப்போது நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.. ஹும்.. அது ஒரு வசந்த காலம்..

அப்பாவுக்கு திருப்புகழ் ரொம்பவே பிடிக்கும்.. அக்கு வேறு ஆணி வேராக அலசி ஆராய்ந்து விளக்கம் சொல்வார்.. திருப்புகழ் பற்றி அப்பா பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது.. ஆழ்ந்து விடுவார்..

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால்..

பித்துக்குளி முருகதாஸ் அவர்களை சென்னை செல்லும் ரயிலில் சந்தித்தோம் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா?

சில நிமிடங்கள் பேசிய உடனேயே பித்துக்குளி முருகதாஸ் அவர்களுக்கு அப்பாவுடன் ஒரு வித நெருங்கிய பரிச்சயம் ஏற்பட்டு விட்டது.. காரணம் இருவருக்கும் இருந்த முருக பக்தி..

பல காலம் பழகியவர்கள் போல் பேச ஆரம்பித்து விட்டார்கள்.. அப்பாவுடன் நான் ஒட்டிக் கொண்டிருந்தாலும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று சத்தியமாக எனக்கு அப்போது புரியவில்லை.. ஆனால் சில வருடங்கள் கழித்து புரிந்துக் கொள்ளக் கூடிய வயதில் அப்பாவிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டேன்..

ரயில் கிளம்பி அரை மணி பயணத்தில் மணியாச்சி ஜங்ஷனை அடைந்தது..

ஐந்து நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட வேண்டும்..

ஆனால் ரயில் கிளம்பக் காணும்.. கால் மணியானது.. அரை மணியானது..

அப்போது தான் ஒருவர் வந்து சொன்னார்..

போகும் பாதையில் விபத்து.. அதனால் ரயில் கிளம்ப குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும்..

”எதுக்கு இந்தப் பெட்டிக் குள்ள அடைஞ்சு கிடக்கணும்? வாங்களேன்.. வெளில காத்தாட உட்காரலாம்”

முருகதாஸ் அவர்கள் சொன்னதும் அப்பாவும் அதை ஆமோதித்து எழுந்தார்.. கூடவே நானும் தான்..

இதற்குள் முருகதாஸ் அவர்களின் உதவியாளர் மடக்கு கோரைப் பாயுடன் விரைந்து எங்கள் போகிக்கு எதிரே நடைமேடையில் பரப்பினார்.. அப்போதெல்லாம் ரயில் நடைமேடை இலை போட்டு பந்தி விரிக்கும் அளவுக்கு சுத்தமாக இருக்கும்.. முருகதாஸ் அவர்களும் அப்பாவும் பாயில் அமர்ந்து கொண்டனர்..

பூர்வ ஜென்மத்து பந்தம்.. இவர்கள் சந்திப்பில் தெரிந்தது..

அப்பாவைப் பற்றி.. பூர்வீகத்தைப் பற்றி.. வேலையைப் பற்றி.. குடும்பத்தைப் பற்றி விசாரித்தார் முருகதாஸ்..

பிறகு தன்னைப் பற்றியும் சொன்னார்..

கோயம்புத்தூரில் பிறந்த அவருக்கு இளமைப் பிராயம் தொட்டே இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்பட்டிருக்கிறது.. இன்னது என்று புரியாமல் எதையோத் தேடி அலைந்திருக்கிறார்.. அப்போது தான் உயர்திரு பிரம்மாநந்த பரதேசியின் பார்வையில் பட்டு அவருடைய சீடரானார்.. கூடவே சங்கீதமும் ஹார்மோனியமும் அவருடைய தமக்கையிடமிருந்து கற்றுக் கொண்டார்.. (இவருடைய ஹார்மோனியம் வாசிப்பில் பாட்டின் ஒவ்வொரு வார்த்தையும் வாய்ப் பாட்டு போல் நமக்குத் தெளிவாகக் கேட்கும்)

சிறு வயதில் கிட்டிப்புல் விளையாடும் போது இடது கண்ணில் அடிபட்டு பார்வை இழந்து.. அதற்காக பிற்காலத்தில் போட்டுக் கொண்ட கறுப்புக் கண்ணாடி அவருடைய முத்திரை ஆகி விட்டது..

பெசண்ட்நகரில் அவர் ஆதரித்து வந்த அநாதை இல்லத்தைப் பற்றி குறிப்பிட்டார்.. முடிக்க வேண்டிய பல இறைபணிகளைப் பற்றி குறிப்பிட்டார்..

இது எல்லாமே சில வருடங்களுக்குப் பிறகு அப்பாவிடம் நான் கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்கள்..

எனக்கு பித்துக்குளி முருகதாஸ் முதலில் அறிமுகமானது..

“பச்சை மயில் வாகனனே – சிவ
பாலசுப்ரமணியனே வா – இங்கு
இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே..
கொச்சை மொழி ஆனாலும் – உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன்
சர்ச்சையெல்லாம் அழிந்ததப்பா – எங்கும்
சாந்தம் நிறைந்ததப்பா”

அப்பா முருகதாஸின் பாடலை ஸ்பூல் டேப்பில் ஓடச் செய்த போது நான் கேட்ட முதல் பாடல்.. பாடல் வரிகள் அப்போது மனதில் பதியவில்லை.. ஆனால் அந்தக் குரல் என்னை ஈர்த்தது.. என்னவோ பண்ணியது..

அதிலிருந்து எங்கள் வீட்டில் முருகதாஸ் அவர்களின் பாட்டு ஒலிக்கும் போதெல்லாம் நான் டேப் ரெகார்டரின் முன் ஆஜர் ஆகி விடுவேன்..

ஊத்துக்காடு வெங்கடகவியின் பாடல்களை இவர் பாடினால் மெய் மறந்து நிற்காதவர் கிடையாது..

ஆடாது அசங்காது வா கண்ணா, அலைபாயுதே கண்ணே.. பால்வடியும் முகம்.. இன்னமும் ஒலித் தட்டிலும், யு-டியூபிலும் அவர் குரலில் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. அதுவும் லேசாக சோர்வடையும் போதெல்லாம் இவரின் பாட்டுக்கள் தான் என் மனதை ஊக்குவிக்கும் டானிக்..

”ஆதி பராசக்தி.. அன்னை ஆதி பராசக்தி” என்று அவர் பாடும் போது கண்களை மூடிக் கொண்டு கேட்டால் நிஜமாகவே அந்த பராசக்தி நம் கண் முன் தோன்றுவாள்..

“வேல் முருகா வேல் முருகா வேல்.. வெற்றி வேல் முருகா வேல் முருகா வேல்” என்று அவர் பாடக் கேட்கும் போது குமரன் நம் மனதில் உடனே புகுந்து விடுவான்..

“ஓம் நம: சிவாய சிவாய நம: ஓம்” என்று அவர் பாடும் போது சிவபெருமான் நம் கண் முன் ஆனந்த தாண்டவம் ஆடுவான்..

“ஆடாது அசங்காது வா வா கண்ணா.. ஆனந்தக் குழலூதி வா வா கண்ணா” என்று அவர் அழைக்கும் போது கண்ணன் நம் முன் சிரித்த முகத்துடன் குழலூதி நர்த்தனமாடுவான்..

பித்துக்குளி முருகதாஸ் அவர்களைப் பற்றிய ஒரு முக்கியமான செய்தி.. இவர் தன்னை “நான்” என்றே அழைத்துக் கொள்ள மாட்டார்.. “இவன்” என்று தான் அழைத்துக் கொள்வார்.. இதை அவருடைய பல நிகழ்ச்சிகளில் நான் கவனித்திருக்கிறேன்..

“நான்” என்ற அகந்தை அழிந்தால் மனிதன் மேம்படுவான்.. இது அவரே ஒரு நிகழ்ச்சியில் சொன்னது..

ஒவ்வொரு பாட்டுக்கு முன்னும் அவர் எளிய மொழியில் சொல்லும் தத்துவ விளக்கங்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடம்.

ரயில் சென்னை வந்து சேரும் வரை முருகதாஸ் அவர்களும் அப்பாவும் நிறைய பேசிக் கொண்டிருந்தார்கள்..

சென்னையில் தன் குடிலுக்கு வரும்படி அப்பாவை அவர் அழைத்தார்..

ஆனால் அன்று இரவே கல்கத்தாவுக்கு ரயிலேற வேண்டிய நிர்பந்தம்.. முடியாமல் போனது..

அதற்கு பிறகு கல்கத்தா சங்கரா ஹாலில் கச்சேரிக்கு வந்தபோது அப்பாவுடன் அவரை சந்தித்தேன்.. அப்பாவைப் பார்த்ததும்.. “மணியாச்சி ஜங்ஷன்.. மறக்க முடியுமா?” என்று அன்யோன்யப் பட்டார்..

அப்பா பணி ஓய்வு பெற்ற பிறகு நாங்கள் 1979ல் கல்கத்தாவிலிருந்து சென்னை வந்தோம்.. ஓரளவு செட்டில் ஆவதற்குள் மூன்றே வருடங்களில் நாங்கள் எதிர்பாராத தருணத்தில் அப்பா எங்களை விட்டுப் பிரிந்து விட்டார்..

அதன் பிறகு நான் சென்னையில் இருந்தாலும் சங்கீத சாம்ராட், கலைமாமணி, குரு சுராஜாநந்தா விருது, மதுர கான மாமணி, சங்கீத நாடக அகாடமி விருது, தேசிய கலாச்சாரக் கழகம் வழங்கிய தியாகையர் விருது என்று பல பல விருதுகளைப் பெற்ற பித்துக்குளி முருகதாஸ் அவர்களை மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை..

ஆனால் அவருடைய தெய்வீகக் குரல் இன்றும் எங்கள் இல்லத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது..

அதில் நாங்கள் முருகனையும், கண்ணனையும், சிவனையும், ஆதி பராசக்தியையும் தரிசிக்கிறோம்.

                                                                 (சந்திப்பு தொடரும்)

One Comment on “கடந்து போன சந்திப்புகள்/S L நாணு”

Comments are closed.