அது அப்படித்தான்/வவேசு

கானகக் குதிரைகள்
மேய்ந்து கொண்டிருந்தன.
நாடகப் பாணியில்
நாலைந்து முறைகள்
கம்பீரமாகக் கனைத்தன;

ஒருநாள்
மேலொருவன் ஏறி அமர்ந்தான்.
இதெல்லாம் சுமையா என
இயல்பாய் இருந்தன.

முகத்தில் படர்ந்து
வாயைக் கட்டிய
கடிவாளத்தை
அணிகலன் என்று ஆனந்தப்பட்டன.

உண்ணக் கொள்ளும்
உறைந்து நின்று கொண்டே
உறங்க ஒரு லாயமும்
கிடைக்கும் மகிழ்ச்சியில்
கிறங்கிக் கிடந்தன.

பரந்த வெளியில்
எதிரில் குதிரைமேல் வேறொருவன்.
முதுகில் அமர்ந்த இருவருக்கும்
மூண்ட சண்டையில்
தமக்குள் சண்டை ஏதுமில்லாமலே
குதிரைகள் இரண்டும்
செத்து மடிந்தன.

One Comment on “அது அப்படித்தான்/வவேசு”

Comments are closed.