கடந்து போன சந்திப்புகள் 13 – எஸ்.எல்.நாணு

“கடந்து போன சந்திப்புகள்” / – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

கடந்து போன சந்திப்புகள் (2)/எஸ்.எல்.நாணு – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

கடந்து போன சந்திப்புகள்/ S L நாணு – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

கடந்து போன சந்திப்புகள்/SL நாணு – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

கடந்து போன சந்திப்புகள் (10) /S L நாணு – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

கடந்து போன சந்திப்புகள்/S .L.  நாணு – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

திருவல்லிக்கேணி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது கம்பீரமாக அருள் பாலிக்கும் பார்த்தசாரதி பெருமாள்.. அடுத்து முண்டாசுக் கவிஞன்.. அதன் பிறகு அங்கிருக்கும் லாட்ஜுகள்..

”லாட்ஜ் என்றாலே திருவல்லிக்கேணி தான்” என்று விளம்பரம் பண்ணக் கூடிய அளவுக்கு அன்றைய காலத்தில் அங்கே லாட்ஜுகள் மண்டிக் கிடந்தன.. (இப்போதும் அவ்வளவு லாட்ஜுகள் உள்ளனவா என்று தெரியவில்லை) திருவல்லிக்கேணி லாட்ஜுகளில் அன்று புரண்டு எழுந்த பலர் இன்று பிரபலங்களாக கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர் என்பது உலகறிந்த விஷயம் தான்..

திருவல்லிக்கேணியைப் பற்றி நான் வியாசம் எழுதப் போவதில்லை.. அங்கேயே பிறந்து வளர்ந்த ஜன்ம சாபல்யத்துடன் அதற்கான ஆஸ்தான வித்வான்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.. நான் பிறந்தது கல்கத்தாவில்.. இருப்பது திருவல்லிக்கேணியில் அல்ல..

திருவல்லிக்கேணி காவல் நிலயத்தைத் தொட்டு இருக்கும் தெருவின் இடது சாரியில் “வசந்தா மேன்ஷன்” என்று ஒரு லாட்ஜ் இருந்தது.. (இப்போதும் இருக்கிறதா என்று ஆராயவில்லை). அதில் அறை எண் பதிமூன்றில் என் உறவினர் கண்ணன் (நம்ம கவிஞர் விஸ்வநாதன் தான்) தன் நண்பர்களுடன் தங்கியிருந்தார்..

ராஜா அண்ணாமலைபுரம் மூன்றாவது பிரதான சாலையில் இருந்த எங்கள் வீட்டுக்கு கண்ணன் அடிக்கடி வருவார்.. என் அப்பாவுடன் மணிக்கணக்கில் இலக்கியமும் அரசியலும் விவாதித்துக் கொண்டிருப்பார்.. சில சந்தர்ப்பங்களில் விவாதம் நள்ளிரவையும் கடந்து தொடரும்..

அதே போல் நானும் கண்ணன் தங்கியிருந்த மேன்ஷன் அறைக்கு அவ்வப்போது விஜயம் செய்வதுண்டு..

கண்ணனுடன் அவரது அறையில் (அறை கொஞ்சம் விஸ்தாரமாக இருக்கும்) எங்கள் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ரகு, அவர் சித்தப்பா மகன் சுரேஷ், ஜெமினி என்று செல்லப் பெயர் கொண்டவர் மற்றும் கல்யாணசுந்தரம் தங்கியிருந்தார்கள்.. எல்லோருமே கண்ணனின் பால்ய நண்பர்கள்.. (அல்லது பால்யத்திலிருந்து நண்பர்கள்..)..

கல்யாணசுந்தரம் ஒவ்வொரு வருடமும் நாற்பத்தெட்டு நாள் விரதம் இருந்து சபரி மலைக்கு விஜயம் செய்வார்.. கொஞ்சம் ஆச்சார சீலர்..

இதே லாட்ஜில் தான் ஆசிரியர் சாவி அவர்களுக்கு ரொம்பவே நெருக்கமான பாரிவள்ளல் (சிறந்த நிருபர், மைக் மோகன் போன்ற நடிகர்களுக்கு அவர் தான் பி.ஆர்.ஓ) என்பவர் அப்போது தங்கியிருந்தார்.. கண்ணன் அடிக்கடி அவரைப் பற்றி கூறுவார்.. ஆனால் ஒரு முறை கூட நான் சந்தித்ததில்லை.. ஆனால் பத்திரிகைகளில் அடிக்கடி “பாரிவள்ளல்” என்ற பெயரை பார்த்திருக்கிறேன்..

சரி விஷயத்துக்கு வருகிறேன்..

ஒரு முறை கண்ணனின் அறைக்கு நான் சென்ற போது ஒல்லியாக ஒருவர் அமர்ந்திருந்தார்..

பார்க்க கொஞ்சம் குள்ளமாகப் பட்டது.. அடர்த்தியில்லாத கரு கரு முடி.. நெற்றியில் திருநீரு பட்டை.. நாலணா நாணயம் அளவுக்கு குங்குமம்.. முகத்தில் அமைதி.. உதட்டில் சிரிப்பு.. கழுத்தில் உத்திராட்சம் போன்ற மாலை.. வேஷ்டி.. அரைக்கை சட்டை..

ஆள் பார்க்க ரொம்பவே சாதாரணமாக இருக்கவே ஒருவேளை ஊரிலிருந்து அவர்கள் யாரையாவது பார்க்க உறவுக்காரர் வந்திருக்கிறார் என்று நினைத்தேன்..

ஆனால் அந்த நினைப்பு எவ்வளவு அபத்தம் என்று கண்ணன் பேச ஆரம்பித்தவுடன் புரிந்தது..

“இது யார் தெரியுமா? சோமு.. வீரமணி சோமு.. பாடகர் வீரமணியோட அண்ணா”

எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யமாக இருந்தது..

எவ்வளவு ஆன்மீகப் பாடல்களுக்கு சொந்தக் காரர்.. தம்பி வீரமணியின் கணீர் குரலில் இவருடைய பாடல்கள் நமது செவிகளுள் ஊடுருவி நம்மை ஆட்கொள்வதை மறக்க முடியுமா?

“இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்

இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண வந்தோம்”

என்று வீரமணி கணீர் குரலில் ஆரம்பித்தாலே எல்லோருக்கும் பரவசம் ஏற்படும்..

கண்ணன் என்னை அவரிடம் அறிமுகப் படுத்தினார்,,

“அப்படியா ரொம்ப சந்தோஷம்”

என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.. இவ்வளவு எளிமையாகவும் ஒரு சாதனையாளரால் இருக்க முடியுமா?

அவர் அதிகம் பேசவில்லை.. ஒரு வேளை கூச்ச சுவபாவமோ என்று கூட தோன்றியது..

ஆனால் ஐயப்பன்.. பாட்டு என்று பேச்சு ஆரம்பித்தவுடன் மனம் திறந்தார்..

கல்யாணசுந்தரம் ஒவ்வொரு வருடமும் சபரிமலைக்கு விஜயம் செய்வார் என்று குறிப்பிட்டிருந்தேனே.. சோமு அவர்களின் யாத்திரைக் குழுவில் தான் அவர் இணைந்துக் கொள்வாராம்.. அந்தப் பழக்கத்தில் சோமு அவர்கள் அடிக்கடி இவர்கள் அறைக்கு வருவாராம்.. இவர்களும் டி.பி.கோவில் தெருவில் இருக்கும் அவர்கள் வீட்டுக்குப் போவார்களாம்..

“புதுசா ஒரு பாட்டு போட்டிருக்கேன்.. பாடட்டுமா?”

சோமு அவர்கள் கேட்டபோது குழந்தையின் குதூகலம்..

“கேட்கக் காத்திருக்கோம்”

கோரஸாக ஒலித்தது.

“பார்த்தசாரதி – நான் பார்த்தசாரதி” என்ற பாடலைப் பாடினார்.. கேட்கவே ஆனந்தமாக இருந்தது.. இனிமேல் தான் இந்தப் பாடல் பதிவாகப் போகிறது என்றார்.. (இந்த பாடலுக்கான லிங்கை யாராவது அனுப்பி வைத்தால் தன்யனாவேன்)

தம்பி வீரமணியைப் பற்றி பேசும்போதெல்லாம் அவர் முகத்தில் பெருமிதம்..

வீரமணி சோமு இரட்டையர்களாக இரண்டாயிரம் ஆன்மீகப் பாடல்களுக்கு மேல் ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள்.. எல்லாம் சோமுவின் பாடல் வரிகளில்..

மஹாராஜபுரம் சந்தானம் அவர்கள் முருகன் பெயரில் வெளியிட்ட ஆல்பமும் இவர் வரிகளில் தான்.. டி.எம்.எஸ்., எஸ்.பி.பி., எஸ் ஜானகி, ஜெயசந்திரன், உன்னிகிருஷ்ணன், நித்யஸ்ரீ மஹாதேவன் என்று பலர் இவருடைய வரிகளைப் பாடியிருக்கிறார்கள்.

நான் அவரை சந்தித்த அந்த சமயத்தில் ஏற்கனவே “பக்தி இசை மாமணிகள்” “அருள் இசை மாமணி” போன்ற விருதுகளை சோமு அவர்கள் பெற்றிருந்தார்..

இதைத் தவிற பின்னாளில் “ஐயப்ப அருள் செல்வர்”, “வாழ் நாள் சாதனையாளர் விருது”, “கலைமாமணி” போன்று பல விருதுகள் பெற்றாலும் அவர் என்றுமே தன்னை முன் நிறுத்திக் கொள்ளவில்லை என்று தான் எனக்குப் பட்டது..

தம்பியின் மறைவுக்குப் பிறகும் “வீரமணி சோமு” என்று அழைப்பதில் தான் அவருக்கு பெருமிதம்..

அவர் தன்னை முன் நிறுத்திக் கொள்ளா விட்டாலும் தன் மகனை முன் நிறுத்தினார்..

இனிய நண்பர் வீரமணி ராஜு இன்று உலகம் முழுவதும் ஆன்மீக அருள் இசையைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்..

அறை எண் பதிமூன்றில் சோமு அவர்களை சந்தித்த அந்த சில மணிநேரங்கள்.. என் வாழ்நாளில் மறக்க முடியாத ஆன்மீக அமுதம்..

உங்களிடம் பகிர இன்னும் சில சந்திப்புகள் இருக்கின்றன.. ஆனால் கொஞ்சம் நினவலைகளை தூசு தட்ட வேண்டியிருக்கிறது.. சம்பந்தப் பட்டவர்களுடன் சில விஷயங்கள் ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.. காரணம் இது கற்பனையல்ல.. உண்மை.. உண்மையை கலப்படமில்லாமல் உண்மையாகப் பதிவு செய்வது தான் தர்மம்..

விரைவில் இந்தப் பதிவுகளை புத்தகமாகக் கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது. அதில் மீதி சந்திப்புகளை இணைத்து விடுகிறேன்..

இது வரை என்னை ஆதரித்த உங்கள் அனைவருக்கு என் நன்றி..

மீண்டும் சந்திப்போம்..

3 Comments on “கடந்து போன சந்திப்புகள் 13 – எஸ்.எல்.நாணு”

  1. சிறந்த ஐயப்ப பக்தர். உருகி உருகிப் பாடிப் பழகியே கவிதை பொழியும் அருமைக் கவிஞரே திரு. சோமு அண்ணா. எளிமையும் துடிப்பும் மிக்கவர் இந்த எண்பது வயதிற்கும் மேலான இளைஞர்.

    தரமான பதிவுக்கு நன்றி அன்புநாணா.

  2. சரணம் ஐயப்பா. நமஸ்காரங்கள். அடியேன் கல்யாணசுந்தரம் மதுரையிலிருந்து. என்னுடைய ஆருயிர் நண்பர் கவிஞர் விஸ்வநாதனையும் அடியேனையும் ஆசிர்வதிக்க திரு சோமு அண்ணா அடிக்கடி எங்கள் அறைக்கு வருவது வழக்கம். ராஜுவும் வருவான். சோமு அண்ணா ஸ்ரீ ஐயப்பன் சொரூபம்.

  3. சோமு அண்ணா குருவுக்கும் குருவானவர். சதாசர்வ காலமும் ஸ்ரீ ஐயப்பன் சிந்தனையில் மூழ்கி திளைத்திருப்பவர். அருமை தம்பி வீரமணி ராஜுவும் ஐயன் அருள் பெற்ற சிறந்த தெய்வீக பாடகர். சோமு அண்ணா அடியேனுக்கு பாசமுள்ள தகப்பனார் ஸ்தானம். அடியேனுடைய ஸஷ்டியப்தபூர்த்திக்கு வந்து கங்கா ஜலம் கொண்டு வந்து ஆசிர்வதித்தார். சரணம் ஐயப்பா. பசுமையான நிணைவுகள்.

Comments are closed.