கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

                                               (4)

கும்பகோணம் டிகிரி காப்பி ரொம்பவே பிரசித்தம். ஆனால் அவர் எங்கள் வீட்டுக்கு வந்தபோதெல்லாம் “திருநெல்வேலி டிகிரி காப்பி கொண்டாம்மா” என்று உரிமையோடு கேட்டார்..

நாங்கள் கல்கத்தாவில் ஜதின் தாஸ் ரோடில் குடியிருந்தோம் (வீட்டு எண் 36/3).. எங்கள் வீட்டிலிருந்து இரண்டாவது கட்டிடம் தான் “டாகா ஹவுஸ்”.. அடுக்கு மாடி குடியிருப்பு.. அதுவும் முன் பக்கம் பின் பக்கம் என இரண்டு பிரிவுகளாக.. கொஞ்சம் வசதியானவர்கள் குடியிருந்த விஸ்தாரமான வீடுகள்.. அநேகமாக மார்வாடிகள்.. சில வங்காளிகள்.. இரண்டு மூன்று தமிழர்களும்..

முன்பக்கப் பிரிவில் கீழ் தளத்தில் ஒரு மார்வாடி குடும்பம்.. முதல் தளத்தில் பார்த்தசாரதி ஐயங்கார்.. அப்பாவின் நெருங்கிய நண்பர்.. புரூக் பாண்ட் கம்பெனியில் உயர் பதவியில் இருந்தார்.. நல்ல உயரம்.. காற்றில் ஆடுவது போல் ஒல்லியான தேகம்.. நல்ல கலர்.. தலையில் தர்மத்துக்கு ஒட்டிக் கொண்டிருக்கும் சில வெண் கம்பிகள்.. நெற்றியில் நீளமான சிவப்புக் கோடு.. உதட்டில் புன் சிரிப்பு.. அலுவலகம் போகும் போது கோட் சூட் அணிந்து, டை கட்டி கம்பீரமாக இருப்பார்.. மீதி நேரம் பளிச்சென்று வேஷ்டி.. அநேகமாக லைட் கலர் சிலாக்.

பொழுது போக்காக அப்பா ரேடியோ டேப்ரெக்கார்டர் ரிப்பேரிங் செய்வார்.. எல்லாம் நண்பர்கள் வட்டத்துக்காக.. ஒரு முறை தன் க்ரண்டிக் ஸ்பூல் டேப் ரெக்கார்டரில் ஏதோ கோளாறு என்று பார்த்தசாரதி மாமாவும் அப்பாவை சந்திக்க வந்தார்.. அப்படி ஆரம்பித்த சந்திப்பு நாளடைவில் ரொம்பவே நெருங்கிய ஆத்மார்த்த நட்பாக மாறி விட்டது..

இருவருக்குமிடையே இருந்த பொது விஷயம் ஆன்மீகம்.. கர்நாடக சங்கீதம்.. அப்பாவுக்கு மதுரை மணி ஐயர் பேவரைட் என்றால் பார்த்தசாரதி மாமாவுக்கு செம்மங்குடி சீனிவாச ஐயர்.. சங்கீதத்தைப் பற்றியும் ஆன்மீகக் கருத்துக்களையும் இருவரும் விவாதிப்பதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்..

சங்கீதம் மட்டுமல்ல.. பாசாங்கில்லாத வாழ்க்கையின் கண்ணோட்டங்கள் பல இருவருக்கும் ஒத்துப் போனதும் இவர்கள் நட்புக்கு கான்க்ரீட் தளம் அமைத்தன..

இந்த சமயத்தில் தான்.. கல்கத்தா வைஷ்ணவ சமாஜம் என்று நினைக்கிறேன்.. பத்து நாட்களுக்கு ஹரிகதா காலட்சேப நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார்கள்.. தியாகராஜா அரங்கில் நடப்பதாக ஏற்பாடு..

அதுவும் பக்த ராமதாஸ், தியாகராஜ சரித்திரம், நந்தனார் சரித்திரம், வெள்ளி கல்யாணம், ஸ்ரீநிவாச கல்யாணம், சீதா கல்யாணம், ருக்மணி கல்யாணம், ஐயப்ப சரித்திரம் என்று பத்து நாட்களுக்கும் வேறு வேறு தலைப்பு..

அப்போதெல்லாம் தொலைகாட்சி, அலைபேசி என்ற எந்த இடஞ்சல்களும் இடையூறுகளும் இல்லாத காரணத்தினால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரங்கம் நிரம்பி வழியும்.. இதற்கு முன் துப்புல் லெஷ்மிநரசிம்ஹன் அவர்களின் உபன்யாசம், சங்கரன் நம்பூதரி அவர்களின் பாகவத சப்தாகம் என்று பல நிகழ்ச்சிகள் ஏற்பாடாகி சிறப்பாக நடந்து முடிந்திருந்தன..

ஆனால் முதல் முறையாக ஹரிகதா காலட்சேபம் அப்போது தான் ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று நினைவு..

அமைப்பாளர்கள் ஜரூராக ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தனர்..

அப்போது தான் ஒரு பிரச்சனை வந்தது..

ஹரிகதா உபன்யாசகர் முக்கியமான செய்தி ஒன்றை அனுப்பினார்..

“நாங்க தங்க ஹோட்டல்லாம் வேண்டாம்.. நான், பின் பாட்டு பாடற என் தம்பி, மிருதங்க வித்வான், தம்பூரா போடறவர் அப்புறம் என் மகன்.. எல்லாரையும் ஒண்ணா ஒரு வீட்டுல தங்க வெச்சா நன்னா இருக்கும்.. அதுவும் தனி வீடெல்லாம் வேண்டாம்.. வீண் செலவு.. உங்கள்ள யாரோட வீட்டுலயாவது தங்க வெச்சுருங்கோ.. அது தான் உத்தமம்”

இதைக் கேட்டவுடன் அமைப்பாளர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள்.. காரணம் ஏற்கனவே அவர்கள் தங்க தனி வீடு ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள்.. சாப்பாட்டுக்கு ஒரு சமையல்காரரையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.. இப்போது போய் இவர் எல்லாம் மாற்றுகிறாரே என்ற குழப்பம்..

யார் வீட்டில் அவர்களைத் தங்க வைக்க என்ற கேள்வியும் எழுந்தது..

விவாதங்களுக்குப் பிறகு யாரோ பார்த்தசாரதி மாமாவின் வீட்டை சிபாரிசு செய்ய காரியதரசி உடனே அவரைத் தொடர்பு கொண்டு விவரம் சொன்னார்.. இதைக் கேட்டதும் பார்த்தசாரதி மாமாவுக்கு ரொம்பவே சந்தோஷம்..

“அதுக்கென்ன.. பேஷா நம்மாத்துலயே தங்கலாமே.. தளிகையும் நம்மாத்துலயே நடக்கட்டும்”

ஏற்கனவே கூறியது போல் பார்த்தசாரதி மாமாவின் வீடு விஸ்தாரமாக இருக்கும்.. பெரிய ஹால் கம் டைனிங்.. மூன்று பெரிய ரூம்கள்.. அட்டாச்ட் பாத்ரூம்.. காத்தோட்டமான சமையலறை.. பெரிய பால்கனி என்று வீடு ரொம்பவே அழகாக இருக்கும்..

மறுநாளே பணியாட்களை அழைத்து வீட்டை சுத்தப் படுத்த ஏற்பாடு செய்து விட்டார்.. அவர்கள் தங்க இரண்டு அறைகளை ஒதுக்கி விட்டார்.. ஒரு அறையில் ஹரிகதா உபன்யாசகரும் அவர் மகனும்.. இன்னொரு அறையில் அவர் தம்பியும், மிருதங்கக் கலைஞரும் தம்பூரா கலைஞரும்..

பார்த்தசாரதி மாமாவின் பார்யாள் பூமா மாமி வித விதமாக தளிகை செய்ய திட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.. நடு நடுவில் எங்கள் வீட்டுக்கு வந்து என் அம்மாவிடமும் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தாள்..

குறிப்பிட்ட நாளில் அந்த ஹரிகதா உயபன்யாசகர் குழுவோடு வந்து இறங்கினார்..

யார் அவர்?

படத்தைப் பார்த்து நீங்களே கண்டு பிடியுங்களேன்..

                                                             (சந்திப்பு தொடரும்)

One Comment on “கடந்து போன சந்திப்புகள்/S L நாணு”

Comments are closed.