
‘பூமர் அங்கிள்’ என்றொரு வார்த்தைப் பிரயோகம் சமூகவலைத்தளத்தில் இப்போது வந்தாலும் வந்தது. பலரும் தங்களை ‘யூத்தாக’ காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
என்னைப் பொறுத்த வரை வயதிற்கும் மனதிற்கும் தொடர்பேயில்லை. எப்போது வேண்டுமானாலும் மரணம் வரட்டும் என்கிற சலிப்பிற்கு இடையேயும் கல்லூரி மாணவன் மாதிரி நான் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பேன். மொக்கை ஜோக் அடித்துக் கொண்டிருப்பேன், அது நெருங்கிய வட்டமாக இருந்தால்.
சாலையில் போகும் போது ஓர் அழகான இளம்பெண்ணைப் பார்க்க நேரும் போது இளைஞனின் மனநிலையுடன்தான் அவளைப் பார்ப்பேன். ‘ஏன் அவள் என்னைப் பார்க்காமல் கடந்து போகிறாள்?” என்று திகைப்புடன் யோசிக்கும் சமயத்தில் மட்டுமே என் வயது நினைவிற்கு வரும். இதையெல்லாம் சும்மா ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். இதையே பிடித்துக் கொள்ளாதீர்கள்.
oOo
வாலிப வயோதிகர்கள் தங்களை யூத்தாக காட்டிக் கொள்ளும் போக்கில் இளைஞர்கள் செய்யும் அத்தனை அசட்டுத்தனங்களையும் அயோக்கியத்தனங்களையும் ஆதரித்து மழுப்பக்கூடாது. அவர்கள் சரியாக வழிநடத்தப்பட வேண்டியவர்கள், அனுதாபம் காட்டப்பட வேண்டியவர்கள் என்பதெல்லாம் வேறு.
ஒருவன் நவீன ரக பைக்கில் இந்தியச் சாலையில் 250 கி.மீருக்கும் அதிகமான வேகத்தில் போகிறான் என்றால் அவன் பைத்தியம் என்று அர்த்தம். அவனை ஹீரோவாக கொண்டாடும் ஒரு கூட்டம் இருக்கிறது என்றால் இளையதலைமுறையினர்களில் பலர் பைத்தியக்காரர்களாக இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். நம்முடைய சாலைகளோ, போக்குவரத்தோ அதற்கு லாயக்கானதல்ல. அப்படியே சில சாலைகள் இருந்தாலும் ஓட்டுபவனுக்கு அதற்கான தகுதி இல்லை.
ஒருவர் பைக் ரேஸராக ஆக விரும்பினால், அதற்கான பயிற்சிகளில் பாதுகாப்புடன் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட துறையில் பிரகாசிக்க முயல்வதுதான் தான் சரியான சிந்தனை. முறையான பாதை.
மாறாக சைலன்ஸர் இல்லாத பைக்கில் உரத்த சத்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, மற்றவர்களை பயமுறுத்திக் கொண்டு, தனக்கும் சரி, சாலையில் செல்பவர்களுக்கும் சரி ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஒருவன் செல்கிறான் என்றால் அவன் உடனடியாக மனநல சிகிச்சைக்கு அனுப்பப்பட வேண்டியவன் என்றே பொருள். கடுமையாக இருந்தாலும் இதுதான் கசப்பான உண்மை.
துரதிர்ஷ்டவசமாக நம் இளைஞர்கள் பலருக்கு கொண்டாட்டம் என்றால் என்னவேன்றே தொியவில்லை. மற்றவர்களுக்கு இடையூறும் எரி்ச்சலும் தருவது போல் ‘ஓ’வென்று குடிபோதையில் கத்துவதையே கொண்டாட்டமாக நினைக்கிறார்கள். இதற்குப் பெயர் கும்பல் கலாசாரம். கொண்டாட்டம் அல்ல.
ஓர் இளைஞன் அந்த வயதுக்குரிய கொண்டாட்டங்களில் ஈடுபடுவதில் தவறே கிடையாது. ஆனால் அது எந்தவொரு சக மனிதருக்கும் பாதிப்பும் இடையூறும் ஏற்படுத்தாத வகையில் செயல்படும் மனமுதிர்ச்சியோடு இருக்க வேண்டும். குடிமைச் சமூகத்தின் பண்புகளோடு இயங்க வேண்டும். ஒரு பெண் தன்னைக் காதலிக்கவில்லை என்கிற காரணத்திற்காக ஆசிட் அடிப்பது, தலையில் கல்லைப் போட்டு கொல்வது எல்லாம் காட்டுமிராண்டித்தனம்.
oOo
சிங்கிள் டீ குடிப்பதற்காக நவீன ரக பைக்கில் அதியுச்ச வேகத்தில் செல்பவன் இன்று ஹீரோவாக பார்க்கப்படுகிறான் என்றால் நாம் முதிர்ச்சியடைய வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
இதன் எதிர்முனையில் “பார்த்துப் போ ராஜா. கை, காலை உடைச்சுக்காத. மத்தவங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாதே” என்று கரிசனத்துடன் எச்சரிக்கை செய்பவர்கள் ‘பூமர் அங்கிள்’களாக பார்க்கப்படுவார்கள் எனில் நம் சமூக மனோபாவத்தின் அடிப்படையிலேயே ஏதோவொரு பொிய கோளாறு உள்ளது.
