தர்பாரில் கௌளை/மாதவ ராகவ மூர்த்தி

SakethaRaman pallavi darbar

சில வருடங்களுக்கு முன் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் பல்லவி தர்பார் மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் சாகேத ராமன் பல்லவி பாடினார். சசிகிரண் அறிமுகப்படுத்தினார். நல்ல தர்பார். T.R.Sமாமா, செங்கல்பட்டு ரங்கநாதன் ஸார் எல்லாம் முன் வரிசையில் நான் பத்தாவது வரிசையில் .

ராகம் தாளம் நடை எல்லாம் அப்போது கொடுத்து அதில் பல்லவி பாடவேண்டும். பாடினார் சாகேத ராமன்.M.R. கோபிநாத் வயலின்,நெய்வேலி நாராயணன் மிருதங்கம்.
நாலு பல்லவி பாடி அதில் பைரவி ராகத்தில் கண்டஜாதி திருபுட தாளத்தில் கண்ட நடையில் “பங்கஜ சரண, சங்கடஹரண, வேங்கட ரமண ‘ என்ற பல்லவி பாடி அசத்தி விட்டார்.

இந்துவில் இன்று 01.07.2016 மாலை 5.30 மணிக்கு பாரதீய வித்யா பவனில் சாகேத ராமன் பாடுவதாக செய்தி வர, போகலாம் என்று தீர்மானித்து நல்ல கச்சேரிக்கு ரஸித்துக் கேட்க துணைக்கு சாந்தோமில் இருக்கும் கௌரிசங்கருக்கு காலையில் போன் பண்ணி வரயா என்றேன். என் அதிர்ஷ்டம் போனமாசம் ரிடையர் ஆன அவன் வருவதாக சொன்னான்.

கணவன் ஏகாதசி அன்று வெளியே புறப்படும் பொழுது வெறும் வயிற்றில் போக வேண்டாம் என்ற கருணையில் ஒரு கோதுமை மாவு உப்புமா கிளற என் மனைவி பிரயத்தனப்பட கொஞ்சம் லேட்.

அடையாறு வரை பஸ் அதன் பிறகு ஒரு ஆட்டோ. மீட்டர் ஓர்க் ஆவல ஸார் நீங்க கொடுங்க என்று என்னை அன்போடு ஏற்றிக் கொண்டார். ஒரு அரை கிலோ மீட்டர் நானும் கேட்டுப் பார்த்தேன். அவர் சொல்வதாக இல்லை. இறங்கும் போது சரியான சண்டை இருக்கும் என்று எதிர் பார்த்தேன். நல்லவர் நான் நிர்ணயித்த 80 ரூபாயை சந்தோஷமாக வாங்கிக் கொண்டார்.

வாசலில் cliveland சுந்தரம் யாரிடமோ போனில் பேசி்க்கொண்டிருந்தார். சாகேத ராமன் அப்பா யாருக்காகவோ காத்திருந்தார். என்னை சந்திக்க வந்த நண்பரிடம் பேசிவிட்டு திரும்பினால் k.vபிரசாத்,N. குருபிரசாத் இருந்தார்கள்.
மெயின் கேட்டில் நுழைந்தேன். தோதான இடம் இல்லை. வெளியே வந்து அந்த பக்கம் இருந்த கேட்டில் நுழைந்து ஐந்தாவது வரிசையில் உட்கார்ந்தேன். முதல் பாட்டு போய்க்கொண்டிருந்தது. திரும்பி பார்த்தால் கௌரி எனக்கு பின்னால் வரிசையில் நடுவில் உட்கார்ந்து கொண்டிருந்தான். நான் வந்ததை பார்த்து விட்டு நான் அங்கு வருகிறேன் என்று அபிநயித்தான்.

பல்லவிக்கான ராக ஆலாபனை. வயலின் H.N. பாஸ்கர்,மிருதங்கம் பத்ரி சதீஷ் குமார். அவர் இன்று முதன் முதலாக டிசைனர் மிருதங்கத்தில் வாசிக்கிறாராம். ஶ்ரீசுந்தர் குமார் இன்று கஞ்சிரா. (நேற்று மிருதங்கம் வாசித்தார்).
சாகேதராமன் வெள்ளை ஜிப்பாவில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். சின்ன வயது மதுரை மணிஐயர் மாதிரி எனக்குத் தோற்றமளித்தார். அவரது இடது பக்கம் பச்சை கலர் ஜிப்பாவில் பாஸ்கர். வலது பக்கம் பத்ரி .
கௌளை ராகம் ரீதிகௌளை, மாயாமாயவ கௌளை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.

ராக ஆலாபனை முடிந்ததும். சாகேத ராமன் பேசினார். முத்துசாமி தீட்சதரின் கிருதி கௌளை ராகங்களில் பாடுவதாக சொல்லி அதற்குப் பிறகு அவர் பேசியது தமிழ் என்றாலும் என் போன்ற சாதா ரசிகர்களுக்கு தலைக்கு மேல். தாளம், நடை கதி என்பதில் உள்ள சூட்சமங்களை விளக்கினார். தாளம் போட்டுக் காண்பித்தார்.
என் வரிசையில் வந்து உட்கார்ந்த சாய், முன் வரிசையில் வந்தமர்ந்த முருகபூபதி, நாலாவது வரிசைக்கு வந்த K.V.பிரசாத் எல்லாரும் தாளம் போட்டனர்.
அனுலோமம், பிரதிலோமம் என்று சொன்னார். இரண்டு இடம் தள்ளி என்றார்,
கௌரி இரண்டு இடம் தள்ளி நகர்ந்து வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். அக்கரை சகோதரிகளின் பெற்றோர் வந்து அமர்ந்தனர். பல்லவி நரசிம்மன் ஸார் அவருக்கே உரிய கம்பீரத்துடன் முன் வரிசையில் அமர்ந்தார்.

ராக ஆலாபனைக்கு முன் விளக்கம் கொடுத்து தெய்வத்தின் கடாட்சமும், குரு அருளும் இருக்கணும். எல்லாம் இடத்துக்கு வந்து சேரணும் உங்களுக்கு பிடிக்கணும் என்றார். பல்லவி கடினமாகவும் இனிமையாகவும் இருந்தது. நான் தாளம் போட முயற்சி பண்ணவில்லை.

சாகேத ராமன் மிருந்தங்க சொல் கட்டுக்களையும் சொல்லிக் காண்பித்தார். மேல் காலம் வரை தெளிவாக இருந்தது. கௌளை, ரீதிகௌளை, கன்னட கௌளை, கேதார கௌளை எல்லாம் ராக ஸ்வரூபமாகவும் பெயராகவும் வந்தது.

பாஸ்கர் சற்றும் சளைத்தவர் இல்லை என்பதை வில்லால் நிருபித்தார். பத்ரியும் ஶ்ரீ சுந்தர் குமாரும் நேரத்தை மனதில் கொண்டு SHORT AND SWEET தனி ஆவர்த்தனம்.

சாகேத ராமன் வேண்டுதல் பலித்து எல்லாம் சரியாக இடத்துக்கு வந்தது. ஷெர்வாணி சசிகிரன் மைக் முன்னால் வந்து சாகேதராமன் பாண்டித்யத்தை பாராட்டி குழுவினரையும் பாராட்டி எல்லாரையும் இடத்திலிருந்து எழுந்து நின்று ஸ்டாண்டிங்க் ஒவேஷன் கொடுக்கச் சொன்னார்.

எழுந்து நின்று நாங்கள் செய்த கரகோஷம் ஹாலை நிறைத்தது. .சாகேத ராமன் அப்பாவும் எழுந்து நி்ன்று கைத்தட்டினார். . சந்தோஷம் முகத்தில் தெரிந்தது.

அடுத்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் இருக்கச்சொன்னார் சசிகிரண். எனக்கு வேறு ஒரு நிகழ்ச்சி கார்த்திக் ராஜகோபால் ஹாலில். வெளியே
வந்தேன். ஸ்கூட்டரில் ரெடியாக இருந்த கௌரியை கற்பகாம்பாள் மெஸ்ஸுக்கு கூப்பிட்டேன். அவன் அவசரமாக திருவான்மியூர் மருந்து வாங்க செல்ல வேண்டும் என்று புறப்பட்டான்.

நான் தனியனாய் மெஸ்ஸில் சாம்பார் வடையும் இட்லியும் சாப்பிட்டேன். சுவர் முழுவதும் படங்கள் நிறைந்திருந்தது. சுவை கொஞ்சம் குறைவுதான்.

ஆட்டோ பிடித்து அடுத்த நிகழ்ச்சிக்குப் பறந்தாலும் காதில் சாகேதராமனின் கௌளைகள்.