கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

                                             (9)

வாழ்க்கையில் சில சந்திப்புகள் அதன் தாக்கம் புரியாமலே கடந்து விடுகின்றன.. அதன் தாக்கம் உரைக்கும் போது காலம் கடந்து விடும்.. ஆஹா.. ஒரு நல்ல வாய்ப்பை இழந்து விட்டோமே என்று மனது ஆதங்கப்படும்.. அப்படிப் பட்ட ஒரு சந்திப்பைப் பற்றித் தான் இந்தப் பதிவு..

சமீபத்தில் பிரபல எழுத்தாளர் திரு. இரா முருகன் அவர்களின் முகநூல் பதிவொன்றை படிக்க நேர்ந்தது.. நான் எழுத நினைத்திருந்த ஆளுமையைப் பற்றி அருமையாகப் பதிவு பண்ணியிருந்தார்.. இரா முருகனே ஒரு ஆளுமை.. ஒரு ஆளுமையாக அந்த ஆளுமையை சந்தித்திருக்கிறார்.. ஆனால் நான் அவர் ஒரு ஆளுமை என்று புரியாத காலத்தில் ஒரு பாமரனாக (இப்ப மட்டும் பெரிய மேதாவின்னு நினைப்பா என்று நீங்கள் கேட்பதை என் செவிக்குள் புக விடாமல் தடா போட்டு விட்டேன்) அவரை சந்தித்தேன்.. அந்த சில மணி நேர சந்திப்பில் என் நினைவில் ஒட்டிக் கொண்டிருக்கும் சில விஷயங்களை பதிவு செய்ய முயல்கிறேன்..

1983ம் வருடம்.. ஏப்ரல் அல்லது மே மாதம்..

என் மாமா மகள் சீதாலெஷ்மி (இப்போது டாக்டர் சீதாலெஷ்மி விஸ்வநாத், கவிஞர் விஸ்வநாதனின் மனைவி) கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்திருந்தாள்.. (அவர் என்று எழுத ஆரம்பித்தேன்.. ஆனால் ரொம்பவே செயற்கையாகப் பட்டது.. காரணம் சிறு வயதிலிருந்தே நாங்கள் அக்கா தம்பியைப் போல் ஒன்றாக வளர்ந்தோம்).

என் அம்மா சிவகாமி சீதாலெஷ்மிக்கு சொந்த அத்தை.. அதுவும் ஒரே அத்தை.. அத்தையிடம் அவளுக்கு எப்பவும் அதீத அன்பும் பாசமும் உண்டு..

சென்னை வந்து இறங்கிய இரண்டு மூன்று நாட்கள் அத்தையுடன் சந்தோஷமாகக் கழித்தாள்..

அந்த சமயத்தில் சீதாலெஷ்மி ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டத்துக்காக கல்கத்தாவில் ஆய்வு செய்துக் கொண்டிருந்தாள்.. அவளுடைய மெண்டார் டாக்டர் ஜெகன்னாத் சக்ரவர்த்தி.. பெரிய வங்காள கவிஞர்.. அவருடைய வங்காள கவிதை நூலை “மௌன இமாலயமும் அமைதி ஆல்ப்ஸும்” என்ற பெயரில் சீதாலெஷ்மி தமிழில் மொழி பெயர்த்திருக்கிறாள்.. அருமையான தொகுப்பு..

சரி விஷயத்துக்கு வருவோம்..

ஆய்வுக்காக சில விஷயங்கள் சேகரிக்க அந்த ஆளுமையைப் பார்க்க வேண்டும் என்று சீதாலெஷ்மி விரும்பினாள்.. என்னையும் துணைக்கு வரச் சொன்னாள்.. நான் அந்த ஆளுமையின் பெயரைக் கேள்விப் பட்டிருக்கிறேன்.. அவர் ஒரு எழுத்தாளர் என்று தெரியும்.. அவ்வளவு தான்.. அதற்கு மேல் நான் முதலில் குறிப்பிட்டது போல் பாமரன் தான்..

தொலைபேசியில் அழைத்து சீதாலெஷ்மி அவரிடம் விவரம் சொல்லி சந்திக்க அனுமதி கேட்டதும்..

“ஓ.. தாராளமா வாயேம்மா.. நாளைக்கே வா.. பன்னெண்டு மணி சுமாருக்கு வந்தா சரியா இருக்கும்”

“இல்லை.. நீங்க ஓய்வு எடுத்துக்கற சமயமா இருக்கப் போறது”

“அதெல்லாம் இல்லை.. அது நான் படிக்கிற நேரம் தான்.. நீ தாராளமா வரலாம்.. அட்ரஸ் தெரியும்ல?”

ராஜா அண்ணாமலை புரத்திலிருந்து அடையாறு இந்திரா நகருக்கு நாங்கள் குடி பெயர்ந்து ஒன்றிரண்டு மாதங்கள் தான் ஆகியிருந்தன.. அப்போது என்னிடம் வண்டி கிடையாது..

இந்திரா நகரிலிருந்து சைதாப் பேட்டைக்கு பஸ்ஸில் சென்று அங்கிருந்து வேளச்சேரி வழியாகச் செல்லும் தாம்பரம் வண்டியைப் பிடித்தோம்.. கண்டக்டரிடம் இடத்தைச் சொல்லி இறக்கி விடச் சொல்லியிருந்தோம்.. ஆனால் அவர் மறந்து போய்.. நாங்கள் விசாரித்த பிறகு..

“அது போன ஸ்டாப்.. அடுத்ததுல இறங்கிக்குங்க”

இறங்கி நடந்து வந்தோம்..

தாம்பரம் மெயின் ரோடிலேயே அவர் வீடு இருந்தது.. தனி வீடு என்று தான் ஞாபகம்..

அழைப்பு மணியைத் தட்டியவுடன் கதவு திறந்தது..

கதவுக்குப் பின்னால் சிரித்த முகத்துடன் அவர் வரவேற்றார்.. கருமையும் லேசான வெண்மையும் கலந்த முடி.. நெற்றியில் சின்னதாக ஒரு சாந்துப் பொட்டு.. கழுத்தில் ஒரு சங்கிலி.. நூல் சேலை..

“வாங்க.. வாங்க..”

வாய் நிறைய வரவேற்றார்..

பின்னால் சற்று உயரமான அவர் கணவரும் சிரித்த முகத்துடன் நின்றிருந்தார்..

அந்த வீட்டுக்குள் நுழந்தவுடன் இன்னதென்று தெரியாத ஒரு இன்ப உணர்ச்சி.. ஒரு பாஸிடிவ் வைப்ரேஷன்..

எனக்கு நினைவிலிருக்கும் வரை ரொம்பவே சாதாரண வீடு தான்.. ஆனால் சுத்தமாக நேர்த்தியாக இருந்தது.. இரண்டு பெரிய அலமாரி கொள்ளாத புத்தகங்கள்.. அதை ஆராயும் பக்குவம் எனக்கு அப்போதில்லையே என்று இப்போது வருந்துகிறேன்..

“வீடு கண்டு பிடிக்க கஷ்டமா இல்லையே?”

அக்கறையுடன் விசாரித்தபடி குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்..

எங்களுக்கு எதிரே நாற்காலியில் அவரும் உட்கார்ந்து கொண்டார்..

என்னைப் பார்த்து விசாரித்தார்..

“என் அத்தை பையன்.. இவன் கல்கத்தாவுலேர்ந்து மெட்ராஸ் வந்து மூணு வருஷம் தான் ஆச்சு.. விவேகாநந்தா காலேஜ்ல படிக்கறான்”

பிறகு சீதாலெஷ்மியைப் பற்றியும் அவளுடைய ஆய்வு பற்றியும் பேச்சு நகர்ந்தது..

டாக்டர் ஜெகன்னாத் சக்ரவர்த்தியைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டார்..

“சரி.. எங்கிட்ட என்ன தெரிஞ்சுக்கணும்?”

அவர் கேட்டவுடன் தன்னிச்சையாக என் பார்வை சுவரில் இருந்த பிரேம் போட்ட போட்டோவுக்குத் தாவியது..

அதில் கணவருடன்.. இளம் வயது ராஜம் கிருஷ்ணன்..

                                                        (சந்திப்பு தொடரும்)

One Comment on “கடந்து போன சந்திப்புகள்/S L நாணு”

Comments are closed.