சத்தியமங்கலம் புத்தகத் திருவிழா /கால சுப்பிரமணியம்

சொந்த ஊரில் நடக்கிறதே என்பதற்காக சத்தியமங்கலம் புத்தகத்திருவிழாவில் நேற்றும் இன்றும் நாளையும் என்று 3 தினங்களுக்கு மட்டும் சுமார் 60 மேற்பட்ட புத்கங்களுடன் கடைவிரித்தேன். நேற்று அதை விரிப்பதற்கு உதவி செய்தவர் காலவெளிக்கதை என்ற அறிவியல் நூலை ரூ.50 கொடுத்து வாங்கினார். ஒரு பெரியவர் (பலர் கேட்டும் கொடுக்காமல் ஒரே ஒரு பிரதி என்று வைத்திருந்த) தியானதாராவை ரூ.100க்கு வாங்கினார். அவ்வளவுதான். இன்று ஒன்றுமில்லை. நாளையும் இராது. காட்சிக்கு வைக்கிறேன். ஏதும் விற்காது என்று நண்பர்களான விழாக்குழுவுக்குச் சொல்லிவிட்டுத்தான் வைத்தேன் என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் பல ஆண்டுகளாக அவர்கள் மிக ஆர்வத்துடன் இந்த விழாவைக் கட்டியெழுப்பி வருகிறார்கள். பேச்சாளர்களை அதிகம் அழைக்காமல் எழுத்தாளர்களை மாலை உரைகளுக்கு அழைக்கிறார்கள். இத்தனைக்கும் தமிழ்நாட்டு நகராட்சிகளிலேயே அதிகம் படித்தவர்கள் உள்ளது சத்தி என்று கூகுள் தகவல் தருகிறது. நாளை நாஞ்சில் நாடன் நிறைவுரை ஆற்ற வருவார். கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிவிட்டேன் என்று வள்ளலாரைப்போல் (இதிலாவது) பாவிக்க வேண்டியதுதான்.
ஆனால் கொஞ்சமாவது விற்கும் என்று தருமபுரியில் ஏமாந்து ஒசூர் புத்தக விழாவுக்குச் சென்ற தமிழினி வசந்தின் நிலை தான் ………. இருபது ஆண்டுகளாக இல்லாத மழையாம் ஒசூரில். ஒரு ஈ காக்காய் பறக்கவில்லையாம். சரி, கோவை திருவிழா வரை இருநாள் டூர் (20, 21) தலைக்காடு, சிவசமுத்திரம், கொள்ளேகால் என்று செல்லலாம் என்றுள்ளோம்.

நிற்க. பிரமிள் படைப்புகள் – பிரதிகள் – மிகக் குறைவாகிக் கொண்டே வந்ததால், பெருந்தொற்றுக்கு முன்பே கேட்டிருந்த வெளிநாட்டவர் ஐந்தாறு பேருக்கு. நானே துணிந்து முயன்று பார்சல் கட்டி அனுப்பிவிடுவது என்று மீண்டும் அவர்களுக்கு அறிவித்தேன். பாரிசிலிருந்து நெற்கொழுதாசன் கேட்டதொகைக்கு அதிகமாகவே அனுப்பிவைத்தார். சுவிட்சர்லாந்திலிருந்த ஜெய ராஜா (ஜெய சாந்தி) வுக்கு வேறு புத்தகங்கள் கேட்டிருந்ததையும் சேர்த்து அனுப்பினேன். பாரிஸ் உடனே சென்றுவிட்டது பார்சல். சுவிஸ் செல்லத்தான் சில நாட்கள் தாமதமாகியது. எனவே இப்போது வெளிநாட்டுக்குப் பார்சல் எப்படி அனுப்புவது என்பதையும் கற்றுக்கொண்டேன்…..

வாழ்க வளமுடன்
(எதிரில் கடை போட்டிருப்பவர் வேதாத்திரி தியான மையத்துக்காரர். எனவே பழக்க தோஷம்….