கடந்து போன சந்திப்புகள்/SL நாணு

                                          (7)

எம்பார் என்ன சொல்லப் போகிறார் என்று அவரையே அப்பா ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்..

“நாளைலேர்ந்து பத்து நாள் ஹரிகதை வைபவத்தை ஆரம்பிக்கப் போறேன்.. இந்த பத்து நாளும் நீர் அதை ரெகார்ட் பண்ணணும்.. ஏன்னா எங்கிட்ட நான் கதை சொல்றேங்கறதுக்கு எந்த சாட்சியும் இல்லை.. நாளைக்கே நான் ஹரிகதை நிகழ்ச்சிலாம் பண்ணியிருக்கேன்னு சொன்னா என் பேரனோ பேத்தியோ நம்ப வேண்டாமா?”

எம்பார் சொன்னதைக் கேட்டு அப்பா சற்று யோசித்தார்..

“என்ன யோசிக்கிறீர்?”

“அதில்லை..”

“எதுவும் இருக்க வேண்டாம்.. நீர் ரெகார்ட் பண்ணறீர்.. இல்லைன்னா என் பேரன் பேத்திகளுக்கு யார் பதில் சொல்றது?.. மானம் போயிரும் சுவாமி”

“அதுக்கில்லை.. ரெகார்ட் பண்ணணும்னா அங்க ஹால்ல பர்மிஷன் வாங்கணும்.. நிகழ்ச்சி நடத்தறவா சம்மதிக்கணும்”

“நிச்சயமா சம்மதிப்பா.. சம்மதிக்கலைன்னா நான் ஹரிகதை பண்ண மாட்டேன்னு சொல்லிருவேன்..”

“ஐயையோ.. அதெல்லாம் வேண்டாம்”

“சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்.. நான் அவா கிட்டப் பேசிடறேன்.. இந்த பத்து நாளும் ஹரிகதையை நீர் ரெகார்ட் பண்ணறீர்.. நீரும் ஒரு காப்பி வெச்சுக்கும்”

சொன்னது போலவே எம்பார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டார்..

பார்த்தசாரதி மாமா புது ஸ்பூல் டேப் ஏழெட்டு வாங்கி வந்தார்..

தினம் அவருடைய கிரண்டிக் டேப் ரெகார்டர் நிகழ்ச்சி நடக்கும் தியாகராஜா ஹாலுக்கு காரில் போய் விடும்..

அந்த பத்து நாட்களும் மாலையில் கொஞ்சம் சீக்கிரம் கிளம்ப அப்பா அலுவலகத்தில் விசேஷ அனுமதி பெற்றிருந்தார்..

அலுவலகத்திலிருந்து வந்து உடனே தயாராகி தியாகராஜா ஹாலுக்குச் சென்று ரெகார்டிங் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை கவனித்து தயாராகக் காத்திருப்பார்..

அன்றைய ஹரிகதை முடிந்ததும் டேப்ரெகார்டர் எங்கள் வீட்டுக்கு வந்து விடும்.. மறு நாள் காலையில் அலுவலகம் கிளம்புவதற்கு முன்னால் பார்த்தசாரதி மாமா வாங்கி வந்திருந்த புது ஸ்பூல் டேப்பில் அதை பிரதி எடுத்து விடுவார்..

இதே போல் பத்து நாட்களும் பதிவு செய்து ஸ்பூல் டேப்புகளை மொத்தமாக எம்பாரிடம் நீட்டிய போது ஒரு குழந்தையைப் போல் சிரித்தார்..

“என் மானத்தையே காப்பாத்திட்டீர்”

ஹரிகதை நிகழ்ச்சி நடந்த பத்து நாட்களும் அரங்கம் நிரம்பி வழிந்தது.. ஒவ்வொரு நாளும் மக்கள் பக்தி ரசத்தில் ஆழ்ந்தார்கள்.. அப்போதைய நாட்டு நடப்புகளை எம்பார் கதையில் இணைத்துக் கூறுவதை வெகுவாக ரசித்தார்கள்.. அடிக்கடி அவர் உதிர்க்கும் ஹாஸ்யத்தில் வாய் விட்டுச் சிரித்து உளம் மகிழ்ந்தார்கள்.. இறுதி நாளில் “ஐயோ.. முடிந்து விட்டதே.. இன்னும் சில நாட்கள் நீடித்திருக்காதோ” என்று ஏங்கினார்கள்..

இதற்கிடையில் ஏற்கனவே சொன்னது போல் அந்த ஞாயிற்றுக் கிழமை தனது பரிவாரங்களுடன் எங்கள் வீட்டுக்கு எம்பார் விருந்துக்கு வந்திருந்தார்.. பார்த்தசாரதி மாமாவும் பூமா மாமியும் கூட வந்திருந்தார்கள்..

எங்கம்மா சிவகாமியைப் பற்றி

இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்..

சமையலில் அம்மாவின் கைப்பக்குவமே தனி.. அதுவும் எத்தனைபேராக இருந்தாலும் சளைக்காமல் விருந்து தயாரித்து விடுவாள்..

நாங்கள் ஜதின் தாஸ் ரோடு வீட்டுக்கு வருவதற்கு முன்னால் ராஷ் பிஹாரி அவென்யுவில் குடியிருந்தோம் (வீட்டு எண் 192ஸி). அது நான்கு தளம் கொண்ட குடியிருப்பு.. அந்த கட்டிடத்தின் சொந்தக் காரர் டாக்டர் பால்.. அந்தக் கட்டிடத்தில் நிறைய தமிழர்கள் குடியிருந்தார்கள்.. பிரபல நாட்டிய மேதை திருமதி சித்ரா விஷ்வேஸ்வரனின் பெற்றோர்கள் கூட அந்தக் கட்டிடத்தில் சில காலம் குடியிருந்ததாக அம்மா கூறக் கேட்டிருக்கிறேன்..

இப்போதிருப்பது போல் அந்தக் காலத்தில் கேட்டரிங் வசதியெல்லாம் கிடையாது.. அந்தக் கட்டிடத்தில் இருக்கும் தமிழர்கள் வீட்டில் பிறந்த நாள், காது குத்தல் என்று எந்த விசேஷமென்றாலும்.. அவர்கள் அம்மாவிடம் தான் தஞ்சம் புகுவார்கள்.. எத்தனை பேர்.. என்ன மெனு என்று திட்டமிடுவதிலிருந்து எல்லாம் அம்மா தான்.. மற்றவர்கள் காய் நறுக்குவது, அம்மி, ஆட்டுக்கல்லில் அரைத்துக் கொடுப்பது (மிக்ஸி, கிரைண்டரெல்லாம் இல்லாத பொற்காலம்) போன்ற உதவிகள் செய்ய அம்மா தனியாக முழு விருந்து சமையலையும் முடித்து விடுவாள்.. வடை, ஸ்வீட் உட்பட.. அதுவும் எல்லோரும் விரும்பி சாப்பிடும் படி அவ்வளவு ருசியாக.. எல்லாம் நட்புக்காக.. உண்மையிலேயே அந்தக் கட்டிடத்தில் இருந்தவர்களெல்லாம் ஒரு குடும்பமாகத் தான் இருந்தார்கள்..

எம்பார் வந்திருந்த அன்றும் அம்மாவே தனியாக விருந்து தயாரித்து விட்டாள்..

சாப்பிடும்போது எம்பார் வாய் திறக்கவே இல்லை.. ஒரு வேளை தன் சமையல் பிடிக்கவில்லையோ என்று அம்மாவுக்குக் கவலை.. ஆனால் எல்லாம் விரும்பிக் கேட்டு சாப்பிட்டார்கள்.. சாப்பிட்டு முடிந்து தாம்பூலம் போட்டுக் கொண்டே எம்பார் சொன்னார்..

“அமிர்த்தம் கிடைக்க தேவையில்லாம பார்க்கடலைக் கடைஞ்சவா.. அதுக்கு பதிலா இந்தாத்துக்கு வந்திருந்தா சிவகாமி அம்மையார் கையால தேவாம்ருதம் கிடைச்சிருக்கும்”

இதைக் கேட்ட பிறகு தான் அம்மாவுக்கு டென்ஷன் குறைந்தது.. தான் சமைத்து மற்றவர்கள் திருப்தியாகச் சாப்பிடுவது தான் அம்மாவுக்கு பேரானந்தம் ஆயிற்றே.. அதுவும் எம்பாரே இதைச் சொன்னதும் அம்மாவின் கண்கள் கலங்கி விட்டன..

ஹரிகதா மேதை.. சாஸ்திரங்களும், வேதாந்தங்களும், இதிகாசங்களும், புராணங்களும் வெகு சரளமாக உபன்யாசிக்கும் மேதை.. மமதை இல்லாமல் ஒரு சாமான்யனின் திறமையை பாராட்டுவது என்பது தெய்வ குணம்.. எம்பார் சுவாமி எங்கள் கண்களுக்கு அவர் அடிக்கடி உச்சரிக்கும் ரங்கராஜனாகத் தான் தெரிந்தார்..

ரங்கராஜன் என்றவுடன் எம்பார் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது..

“திருப்பதில பெருமாள் லட்சமும் கோடியுமா சம்பாதிக்கலாம்.. ஆனா அவனால அனுபவிக்க முடியாது.. குபேரனுக்கு வட்டி கொடுத்தே மாளாது.. அனுபவிக்க எங்க ரங்கராஜன் தான்.. காலம்பர துயில் எழுந்திருக்க-றதுலேர்ந்து ராத்திரி தாலாட்டு வரை.. அந்த ராஜ உபசாரம் யாருக்குக் கிடைக்கும்?”

எம்பார் தன் பரிவாரங்களுடன் ஊருக்குக் கிளம்பிய போது எல்லோருக்கும் மனது கொஞ்சம் கனமாகத் தான் இருந்தது..

அடுத்த சில மாதங்களில் பார்த்தசாரதி மாமா ஒரு திட்டத்துடன் வந்தார்..

                                                 (சந்திப்பு தொடரும்)

One Comment on “கடந்து போன சந்திப்புகள்/SL நாணு”

Comments are closed.