
நாடெங்கும் பொன்னியின் செல்வன் பற்றியே பேச்சு. திரைப்படம் டீஸர் வெளிவந்ததும், பொ. செல்வன் அலையாகவே மாறிவிட்டது.
ஆனந்த விகடன்-னில் இருந்து விலகி, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கியை தொடங்கி, 1950 ல் பொன்னியின் செல்வனை எழுதத்தொடங்கினார். பொன்னியின் செல்வன் தொடரால், கல்கி லட்சக்கணக்கில் விற்று, அதிகமாக விற்பனையாகும் இதழாக திகழ்ந்தது.
1952வில் பேரலையாக மாறி, மக்களை ஆட்கொண்டது, பொ. செ !
உடனேயே திரைப்படத்துறையினர், அக்கதையை வட்டமிடத்தொடங்கினர். எம்ஜிஆர் தானே வந்தியத்தேவனாகவும், எஸ் எஸ் ஆரை ஆதித்த கரிகாலனாகவும், ஜெமினியை பொன்னியின் செல்வனாகவும், ரங்காராவை பழுவேட்டரையராகவும், பதமினியை குந்தவையாகவும், வைஜயந்திமாலாவை நந்தினியாகவும் பேசி வைத்திருந்தார். அதற்கான முயற்சியில் இறங்கி, பிறகு பின்வாங்கினார்.
1955-56 காலகட்டத்தில் மீண்டும் பொன்னியின் செல்வன் அலை வீச, இந்த முறை ஜெமினி எஸ் எஸ் வாசன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை படமாக்க முனைந்தார். சந்திரலேகா, அவ்வையார், போன்ற பிரம்மாண்ட படங்களை எடுத்த அவராலேயே முடியாமல் போனது.
அவரும், ஜெமினி கணேசனை வந்தியத்தேவனாகவும், பதமினியை குந்தவையாகவும், வைஜயந்திமாலாவை நந்தினியாகவும்தான் மனதில் இருத்தியிருந்தார்.
ஆனால் பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க முடியாமல் போனதால், பொன்னியின் செல்வனை போன்று ஆங்கிலத்தில் மிகவும் புகழ் பெற்ற — The Count of Monte Cristo என்கிற Alexandre Dumas-சின் சரித்திர புதினத்தை, வாசன் படமாக தயாரித்தார்.
அந்தப்படம்தான் 1958ல் வெளியான வஞ்சிக்கோட்டை வாலிபன்.
இந்தப்படத்தில், வந்தியத்தேவன் குந்தவை, மற்றும் நந்தினியின் சாயை, முறையே ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் வைஜயந்தி மாலா ஆகிய பாத்திரங்களுக்கு இருக்கும்.
பொன்னியின் செல்வனை படமாக்க முடியவில்லை என்கிற ஏக்கத்தை, ”கண்ணும் கண்ணும் கலந்து — நடன காட்சியில் தீர்த்து கொண்டார் ஜெமினி வாசன்.
பதமினி பாடி ஆட, ”சாதுர்யம் பேசாதேடி” — என்று வைஜயந்திமாலா அவரோடு மல்லுக்கு நிற்க, சபாஷ் சரியான போட்டி என்று வீரப்பா சிலாகிப்பார்.
இந்த காட்சிக்கு inspiration குந்தவை-நந்தினி மோதல்தான். பத்மினி, வைஜயந்தி இருவருமே. குந்தவை-நந்தினியை தான் பிரதிபலித்ததாக அப்போது ரசிகர்கள் பேசிக்கொண்டார்கள்.
