
அறிவி ஜீவி சுஜாதா வாசகர் குழு
1986 ஆம் ஆண்டு, மே திங்கள் 29 ஆம் நாள் விக்ரம் திரைக்கு வந்தது. 36 வருடங்கள் நிறைவடைந்து 37 வது ஆண்டில் காலடியெடுத்து வைத்துள்ளது. கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் முக்கியமான திரைப்படங்களில் விக்ரமும் ஒன்று…..ஸாரி……இரண்டு……
2022-ம் ஆண்டு வெளிவரும் விக்ரம் இதற்கு முந்தைய வசூல் சாதனைகளை எல்லாம் முறியடித்து, ராட்சத வெற்றி பெறும் என்ற தீர்க்கதரிசனம் போலும் சுஜாதாவிற்கு, அதனால்தான் அவருக்குப் பிடித்த (அருண் குமார்) விக்ரம் என்ற பெயரைச் சூட்டினார் என்று சொல்லலாம். அந்தப் பெயர் மீது கமல் மற்றும் இயக்குனர் லோகேஷுக்கும் கனமான ஈர்ப்பு இருந்ததால் தான் மறுபடியும் விக்ரம் என்றே பெயர் சூட்டி, முதல் படத்தில் கமல் பாடும் “நான் வெற்றி பெற்றவன், இமயம் தொட்டு விட்டவன்” என்ற வரிகளுக்கு ஏற்றாற்போல இரண்டாவது விக்ரம் படத்தில் அது சாத்தியமாகி விட்டது.
ஜேம்ஸ் பாண்ட் 007 போல் ஒரு படம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் அனைத்து நடிகர்களுக்கும் உண்டு. இதில் அந்தக்கால நடிகர்கள் இந்தக்கால நடிகர்கள் என எந்த காலவேறுபாடும் இல்லை. அப்படி கமலுக்கு தோன்றிய ஆசையின் வெளிப்பாடுதான் விக்ரம் (1986) திரைப்படம்.

சுஜாதா எழுதிய கதையின் திரைக்கதையின் அடிப்படையில் விக்ரம் எடுக்கப்பட்டது. வரிக்கு வரி அப்படியே வர வேண்டும் என்பதற்காக கமல் நிறைய மெனெக்கெட்டார் என்பது படமெங்கும் தெரிந்தது.
சுஜாதா தனது கதையில், ‘இந்தக் கதைக்கு ஆதாரமான, மிக ஆதாரமான சம்பவம் ஒரு செப்டம்பர் மாத மழை நாளில் சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் ஒரு பிற்பகலில் நடந்தது’ என்று எழுதியிருப்பார்.
இந்தக் காட்சியை சென்னை எக்மோர் மியூசியம் தியேட்டரின் முன்னால் படமாக்கினர். ஆனால், மழைக்குப் பதில் வெயில் கொளுத்தியது. சுஜாதா கதையில் மழை பெய்வதாக எழுதியிருந்ததால் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, ராட்சத விசிறிகள் வைத்து, செயற்கையாக மழையும், காற்றும் உருவாக்கப்பட்டன.
புறாவைப் பற்றிய ஒரு வரியை படமாக்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காட்சியை படமாக்கிய பின், கமல் சுஜாதாவிடம் வந்து, ‘என்ன, திருப்திதானே’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு காரணம் இருக்கிறது. சுஜாதாவின் பல கதைகளை படமாக்குகிறேன் என்று பலர் கொத்துக்கறியாக்கியிருக்கிறார்கள். இனிமே என்கிட்ட கதையே கேட்டு வராதீங்க என்று கடிந்துமிருக்கிறார். அப்படியொரு தவறு செய்துவிடக் கூடாது என்று அவர் எழுதிய டீட்டெயிலில் ஒன்றைக்கூட விடாமல் அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார் கமல். புறாவை வைத்து வெற்றிகரமாக காட்சியை முடித்த பின் சுஜாதாவிடம், திருப்திதானே என்று கேட்க, சுஜாதா, ‘குமுதத்தில் கருங்குருவி என்று எழுதியதாக ஞாபகம்’ என்கிறார். என்ன நக்கல் பாருங்கள்.
கதையைப் பாதிக்காத விஷயங்களில் அடம்பிடித்து இப்படித்தான் செய்ய வேண்டும் என்று உழைப்பை வீணடிப்பது விமர்சனத்துக்குரியது. ஒரு பெயர் பலகையை காண்பிக்கையில் அதன் மீது புறா இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன. படத்தின் கதையோ, அதன் பிடிப்போ இந்தக் காட்சியால் மாறிவிடப் போவதில்லைதானே. பிறகு ஏன் இத்தனை மெனக்கெட வேண்டும் என்ற கேள்வி சுஜாதாவின் நையாண்டியில் தொக்கி நிற்பதைப் பார்க்கலாம்.
விக்ரம் படத்தின் பாடல்கள், காட்சிகள், வசனங்கள் என அனைத்தும் இன்றும் பார்த்து ரசிக்கிற விதத்தில் உள்ளன என்பது ஆச்சரியமான ஒன்று. ராக்கெட் கடத்தல், உளவாளி, எலி கோவில், வித்தியாசமான கலாச்சாரத்தை கொண்ட சாம்ராஜ்யம், அதன் கோமாளி ராஜா, சாப்பிடுகிற உணவில் எச்சில் உமிழும் போலி சாமியார், ஒன்றுக்கு மேற்பட்ட நாயகிகள், பாலைவனம், துப்பாக்கிச் சண்டை என ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்குரிய அனைத்தும் விக்ரமில் இருந்தது.
தகவல் ; ராம் ஸ்ரீதர்
