திருமணத்துக்குப் பெண்…/கோகுல் பிரசாத்

உறவுக்காரப் பையனுக்குத் திருமணத்துக்குப் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவனுக்கு ஒரே அண்ணன். அவருக்குத் திருமணமாகிவிட்டது. இருவருமே நல்ல பணியில் இருக்கிறார்கள். இதுபோக, இவர்களது தந்தை இன்னமும் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார். ஆளுக்கொரு வீட்டைப் பாகம் பிரித்துக் கொடுத்தாலும் மேலும் இரண்டு வீடுகள் மிச்சமிருக்கும். ‘பெத்த’ கை என்பதைச் சுட்டுவதற்காக விலாவரியாகச் சொல்கிறேன்.

மேட்ரிமொனி வழியாக ஒரு வரன் வந்திருக்கிறது. குடும்பத்தில் எல்லோருக்கும் பெண்ணைப் பிடித்துவிட்டது. பெண் வீட்டாரைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். பெண்ணின் தாயார்தான் முன்னின்று எல்லாவற்றையும் பேசியிருக்கிறார். தந்தை சீனுக்கே வரவில்லை. பெண்ணுக்கு இரண்டு அக்காக்கள். அவர்களுக்கு அதிகம் படிப்பில்லை என்றாலும் கஷ்டப்பட்டு எப்படியோ கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். இளைய மகள் மட்டுமே பட்டதாரி. ஐ.டி. வேலை.

ஜாதகப் பலன்கள், திருமணப் பொருத்தம் என இரண்டு பக்கமும் எல்லாமே திருப்தியாக அமைந்து மேற்கொண்டு பேசும்போது தங்களால் பெரிய அளவில் சீர் செய்ய முடியாது எனத் தாயார் சொல்லியிருக்கிறார். பெண்ணைப் பிடித்திருக்கிறது, மகன் விரும்பிவிட்டான் என்பதால் இவர்களும் எதையும் கட்டாயப்படுத்திக் கேட்கவில்லை. சம அந்தஸ்து இல்லாவிட்டால் என்ன, பெண்ணும் மகனும் சம்பாதித்துப் பிழைத்துக்கொள்வார்கள் என மாப்பிள்ளை வீட்டார் நினைத்திருக்கிறார்கள்.

அதற்குப் பிறகு, பெண்ணின் தாயார் ஒவ்வொன்றையும் தோண்டித் துருவி குற்றம் கண்டுபிடிக்கத் தொடங்கியிருக்கிறார். பெண்ணுக்குப் பணியிட மாற்றம் அமைவதில் சிக்கல் எழலாம், மாப்பிள்ளை மாறுவாரா, இவர்களது நான்காவது வீடு லோன் வாங்கிக் கட்டப்பட்டிருக்கிறதே, அதைத் தன் பெண்தான் சம்பாதித்து அடைக்க வேண்டுமா, பெற்றோர் இளைய மகனுடன் இருப்பார்களா அல்லது தனிக்குடித்தனத்துக்கு அனுமதிப்பார்களா போன்ற வில்லங்கமான கேள்விகள். இவர்கள் எல்லாவற்றையும் பொறுமையாக எடுத்துரைத்த பின், பெண்ணுக்கு மாப்பிளையைவிட சம்பளம் அதிகம், அதனால் பெண் தயங்குகிறாள் என அடுத்த குண்டை வீசியிருக்கிறார். இது தேறாது எனச் சலித்துப்போய் அடுத்த வரனைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண் இவனது அலுவலகத்தில், இவனுக்கு ஜுனியராகச் சேர்ந்திருக்கிறார். இந்தப் பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறோமே எனச் சந்தேகம் எழுந்திருக்கிறது. மேட்ரிமொனியில் தேடி, புகைப்படத்தைக் கண்டுபிடித்து சந்தேகத்தை உறுதிசெய்திருக்கிறான். தன்னைவிடக் கூடுதல் சம்பளம் வாங்குவதாகச் சொன்னார்களே, இவள் எப்படி தனக்குக் கீழ் பணி செய்பவளாக இருப்பாள்? அந்தப் பெண்ணிடம் நேரடியாகவே விசாரித்திருக்கிறான்.

அவளுக்கு இவனை யாரென்றே தெரியவில்லை. இப்படியொரு வரன் வந்த தகவலையே அவளது அம்மா தெரியப்படுத்தவில்லையாம்.

“நான் ஒருத்திதான் வீட்ல சம்பாதிக்கறேன். என்னைக் கட்டிக்கொடுத்துட்டா அப்புறம் என்னாகும்னு அவங்களுக்கு பயம். இதுவரை நாலஞ்சு வரனை இதே மாதிரி சாக்கு போக்கு சொல்லி எங்கம்மா தட்டிக்கழிச்சிருக்கு” என்று அழுதிருக்கிறாள். இவனுக்குச் சங்கடமாகிவிட்டது.

“எங்கம்மா உசிரோட இருக்கற வரை எனக்கு கல்யாணம் ஆகாது.”

2 Comments on “திருமணத்துக்குப் பெண்…/கோகுல் பிரசாத்”

  1. இது கதையல்ல, எனக்குத் தெரிந்த பல நடுத்தரக் குடும்பங்களில் இன்று நிலவும் உண்மைநிலை தான். பெண்ணைப் பெற்றவர்கள் புரியும் சூழ்ச்சிகள்..
    அப்பப்பா!

Comments are closed.