கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

                                           (8)

”அடுத்த மாசம் ஒரு பத்து நாள் ஆபீசுக்கு லீவு போட வேண்டியிருக்கும்”

பார்த்தசாரதி மாமா சொன்னவுடன் அப்பா புரியாமல் பார்த்தார்..

“எதுக்கு?”

“கும்பகோணத்துல ஒரு கல்யாணம்.. அப்படியே கும்பகோண கோயில்கள், ஸ்ரீரங்கம், சுவாமி மலை, எல்லாம் ஒரு விசிட் அடிச்சிட்டு வந்துரலாம்”

அப்பா கொஞ்சம் தயங்கினார்..

“அதெல்லாம் தெரியாது.. நான் ஏற்பாடு பண்ணிடறேன்.. நான், பூமா, நீங்க, உம்ம பார்யாள்.. நாலு பேரும் கண்டிப்பாப் போறோம்”

பார்த்தசாரதி மாமா தீர்மானமாகச் சொன்னார்..

அப்பா தயங்கியதற்குக் காரணம் எனக்கு பள்ளிக் கூடம்.. அண்ணாவுக்குக் கல்லூரி.. அக்கா எம்.பி.பி.எஸ். முடித்து ஹவுஸ்-சர்ஜனாக இருந்ததால் அநேகமாக கல்லூரி ஹாஸ்டலில் தான் இருப்பாள்..

ஆனால் அதிருஷ்டவசமாக பார்த்தசாரதி மாமா சொன்ன தேதியில் அக்காவுக்கு ஏதோ விடுப்பு.. அதனால் “நான் பார்த்துக்கறேன்.. நீங்க போயிட்டு வாங்கோ” என்று கூற..

திட்டமிட்டபடி நால்வரும் கிளம்பி விட்டார்கள்..

அவர்கள் திரும்பி வந்த பிறகு அப்பாவிடம் நான் கேட்டுத் தெரிந்துக் கொண்டது..

உண்மையில் பார்த்தசாரதி மாமா அப்பாவை அழைத்துக் கொண்டு போன காரணம்..

கோவில் விசிட்டுக்காக மட்டும் இல்லை..

ஸ்ரீரங்கத்தில் எம்பார் அவர்களைச் சந்திக்கவும் தான்..

எம்பார் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கிறார்கள்.. அப்போது ஆன்மீகம், வாழ்க்கை அனுபவங்கள் என்று நிறைய பேசியிருக்கிறார்கள்..

எம்பாரின் தயவில் ஸ்ரீரங்கம் ரங்கராஜப் பெருமாளை அருகில் சென்று தரிசனம் செய்திருக்கிறார்கள்..

கிளம்பும் போது எம்பார் அப்பாவுக்கு திருப்புகழ் மற்றும் சித்திரத் திருப்பாவை புத்தகங்களைக் கொடுத்தார்..

சித்திரத் திருப்பாவை புத்தகத்தில் ஒரு பக்கத்தில் பாசுரமும் எதிர்பக்கத்தில் அந்த பாசுரத்துக்கு ஏற்ற வண்ண ஓவியமும் இருக்கும்.. ஓவியத்தைப் பார்த்தாலே அந்த பாசுரத்தின் விளக்கம் புரிந்து விடும்..

அந்தப் புத்தகம் இன்னமும் என்னிடம் இருக்கிறது.. ஆனால் என் புத்தகக் குவியல்களில் மேய்ந்தும் அவசரத்தில் சிக்கவில்லை.. சிக்கினால் பதிவிடுகிறேன்..

இந்த விஜயத்தைப் பற்றி அப்பா பல நாட்கள் சிலாகித்துக் கொண்டிருந்தார்..

அதன் பிறகு சில வருடங்களில் அப்பா பணி ஓய்வு பெற்று கல்கத்தாவிலிருந்து நாங்கள் சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்டோம்.. பார்த்தசாரதி மாமாவும் பணி ஓய்வு பெற்று சென்னை வந்து விட்டார்..

சென்னை வந்த புதிதில் நாங்கள் ராஜா அண்ணாமலைபுரம் மூன்றாவது மெயின் ரோடிலும் (வீட்டு எண் 38) பார்த்தசாரதி மாமா மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் தன் சொந்த வீட்டிலும்..

பார்த்தசாரதி மாமா.. அப்பா..

இவர்கள் நட்பு சென்னையிலும் நீடித்தது.. அடிக்கடி சந்தித்தார்கள்.. சங்கீதமும் மற்ற விஷயங்களும் அலசினார்கள்..

இப்படியிருக்க திடீரென்று ஒரு நாள் எங்கள் ராஜா அண்ணாமலைபுரம் வீட்டுக்கு முன்னால் வெள்ளை நிற அம்பாசிடர் கார் வந்து நின்றது..

யாராக இருக்கும் என்று நாங்கள் யூகிப்பதற்குள் கார் கதவைத் திறந்து கொண்டு எம்பார் அவர்கள் இறங்கினார்.. கூடவே சற்று குட்டையாக வழுக்கைத் தலையுடன் வெள்ளை சட்டை.. வெள்ளை வேஷ்டி.. வெள்ளை செருப்பு.. கையில் ஒரு தோல் பையுடன் ஒருவர் இறங்கினார்..

நாங்கள் அவசரமாக வாசலுக்குச் சென்று வரவேற்றோம்..

எம்பார் சிரித்தபடி..

“என்ன.. மெட்ராஸ் வந்து அட்ரஸ் கொடுக்கலைன்னா.. என்னால கண்டு பிடிக்க முடியாதுன்னு நினைச்சீரா? உம்மை அவ்வளவு லேசுல விட்டுருவேனா? அதான் தேடிப் பிடிச்சு வந்துட்டேன்”

வீட்டுக்குள் வந்து உட்கார்ந்தவுடன் முதல் வேலையாக..

“திருநெல்வேலி டிகிரி காப்பி ரெடி பண்ணும்மா”

என்று அம்மாவிடம் அன்பாக உத்தரவு போட்டு அம்மாவின் காப்பி புராணத்தை வந்தவரிடம் விவரித்தார்..

கல்கத்தாவிலிருந்து வந்த பிறகு சென்னை வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று அப்பாவிடம் அவர் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே அம்மா மணக்க மணக்க காப்பி கொண்டு வந்தாள்..

அதை ருசித்து சாப்பிட்டபடி..

“இவர் யார் தெரியுமோ? சினிமா தயாரிப்பாளர்.. இவா தெய்வீகத் திருமணங்கள்னு சினிமா எடுக்கப் போறாளாம்.. ஒரு வாரமா நம்ம ஹரிகதை சென்னைல நடந்துதே.. அதைக் கேட்டிருக்கார்.. வள்ளி கல்யாணம், சீனிவாச கல்யாணம்.. இதைப்பத்தி கதை விவாதத்துக்கு விவரம் வேணும்னு கேட்டார்.. நான் விவரம் சொல்றதை விட என் ஹரிகதையைக் கேளுங்கோ.. உங்களுக்கு வேணுங்கறது கிடைச்சுரும்னு சொன்னேன்.. ஹரிகதையை எங்க கேட்கறதுன்னார்.. அப்பத்தான் நீர் சென்னைக்கே வந்துட்டீர்னு யார் மூலமாவோ கேள்விப்பட்டது ஞாபகம் வந்தது.. உடனே பார்த்தசாரதியை டெலிபோன்ல பிடிச்சு உம்ம விலாசத்தை வாங்கிட்டேன்”

ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்..

“உம்ம கிட்ட வள்ளி திருமணம், சீனிவாச கல்யாணம் ரெகார்டிங் இருக்கோல்யோ.. அதை இவருக்கு உடனே ரெகார்ட் பண்ணிக் கொடும்.. புது ஸ்பூல் டேப் கொண்டு வந்திருக்கார்.. என்ன.. பண்ண முடியும் தானே?”

எம்பார் கேட்டு முடியாது என்று சொல்வதா?

“தாராளமாப் பண்ணலாம்.. ஆனா ஒவ்வொண்ணும் ரெண்டு மணி நேரம்..”

“அதுக்கென்ன.. ஹரிகதை புரோக்ராம் நேத்தோட முடிஞ்சாச்சு.. இன்னிக்கு வேற வேலை எதுவும் கிடையாது.. நாளைக்குத் தான் ஊருக்குக் கிளம்பறோம்.. அதனால இருந்து வாங்கிண்டே போறோம்”

அப்பா ரெகார்டிங் வேலையை முடக்கி விட..

எம்பார் வழக்கம் போல் சகஜமாகப் பேச ஆரம்பித்தார்..

தன்னுடைய இளமைப் பிராயம்.. அவர் அப்பாவிடம் ஹரிகதையும் சங்கீதமும் கற்றது..

அவருடைய முதல் ஹரிகதை நிகழ்ச்சியை கடைசி வரிசையில் அமர்ந்து கேட்ட அவர் அப்பா..

“பரவாயில்லை.. என் பேரைக் காப்பாத்திருவான்”

என்று சொன்னாராம்.

உண்மையில் அவர் அப்பாவையே மிஞ்சி ஹரிகதையின் அத்தாரிட்டி என்று தன்னை ஆளுமைப் படுத்திக் கொண்டார் எம்பார்..

இதற்குள் அம்மா கேசரி, இட்லி, தேங்காய் சட்னி, மிளகாய்ப் பொடி என்று தயார் செய்து பரிமார..

ருசித்து சாப்பிட்டார்கள்..

அவர் கேட்காமலே இன்னொரு டோஸ் காப்பியும் அம்மா கொண்டு வந்து நீட்ட..

“அடாடா.. இது தான் ரங்கராஜன் அருள்.. கேட்காமலே மறுபடியும் தேவாம்ருதம் கிடைக்கறதே”

முகமலர்ந்து சிரித்தார்.. அந்த சிரிப்பைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. மனதுக்கு நிம்மதியையும் நிறைவையும் கொடுக்கும் தெய்வீகச் சிரிப்பு..

ரெகார்டிங் முடிந்து கிளம்பும் போது உடன் வந்தவரிடமிருந்து ஒரு தொகையை வாங்கி அப்பாவிடம் நீட்டினார் எம்பார்..

“ஐயோ.. இதெல்லாம் எதுக்கு? உங்களுக்கு நான் பண்றது கைங்கர்யம்”

“எனக்குப் பண்றது கைங்கர்யம்.. சரி.. ஆனா இது எனக்காகப் பண்ணலையே.. இதோ இந்த மனுஷருக்குத் தானே பண்ணியிருக்கீர்.. இவா இதை வெச்சு சம்பாதிக்கப் போறா.. அதுக்கு இது சின்ன மூல தனம் தான்.. வாங்கிக்கும்”

கட்டாயப் படுத்தி பணத்தை வாங்கிக் கொள்ளச் சொன்னார்..

அன்று கழிந்த அந்த ஐந்தாறு மணிநேரங்கள் ரம்யமான தருணங்கள் மட்டுமல்ல.. வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமும் கூட..

அது தான் எம்பார் அவர்களை நான் கடைசியாகப் பார்த்தது..

காரணம் விரைவிலேயே அப்பாவின் காலம் முடிந்து விட்டது.. அதன் பிறகு எம்பார் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.. ஒரு முறை சென்னை தொலைக்காட்சியில் அவருடைய ஹரிகதை நிகழ்ச்சியைப் பார்த்ததாக ஞாபகம்..

தனக்கென்று தனி பாதை அமைத்து ஹரிகதைக் கலையைப் பிரபலப் படுத்தியதில் எம்பார் அவர்களுக்கு பிரதான இடமுண்டு..

ஆனால் சங்கீத கலாநிதி உட்பட பல விருதுகளைப் பெற்ற எம்பார் குடும்பத்திலிருந்து ஹரிகதை கலையை யாரும் தொடரவில்லை என்பது ரொம்பவே வருந்தத் தக்க விஷயம்.. அவருடைய தம்பி எம்பார் ரகுநாதன் முயற்சித்து பிறகு கைவிட்டு விட்டார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்..

எம்பார் அவர்களுடைய ஒரே சிஷ்யர் திரு. கல்யாணபுரம் அர்வாமுதன் அவர்கள் தான்.. அவரும் மகா பண்டிதர்.. தொடர்ந்து உபன்யாசங்கள் செய்து வருகிறார் என்பது ரொம்பவே ஆறுதலான விஷயம்..

எம்பார் அவர்களைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் போது ஒன்று இரண்டு அத்தியாயங்களில் முடித்து விடலாம் என்று தான் நினைத்தேன்.. ஆனால் நினைவலைகள் தொடரத் தொடர.. அத்தியாயங்களும் நீண்டு விட்டன..

வாழ்க்கையில் சில சந்திப்புகளால் நாம் புனிதப் படுவோம்..

எம்பார் அவர்களை நாங்கள் சந்தித்ததும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்..

                                                     (சந்திப்பு தொடரும்)

One Comment on “கடந்து போன சந்திப்புகள்/S L நாணு”

Comments are closed.