திரையில் மின்னும் பேரிளம் பெண்கள்../சீனிவாசன் நடராஜன்

செம்பியன் மாதேவியை மையப்படுத்தி ஒரு நாவலை வாசித்துப் பார்த்தால், நாவல் எழுதிய ஆசிரியரின் சமகாலத்தில் நிகழ்ந்து வந்த சமூக அவலங்களை புரிந்து கொள்ள முடியும்.

பிராமணர்கள் மட்டும் அல்லாது பல இனக்குழுக்கள் மத்தியிலும் இளம் வயதில் திருமணம் செய்வது பழக்கத்தில் இருந்தது. அப்படி திருமணம் செய்து கொண்டவர்களில் ஆண் இறந்து போனால் பெண்ணுக்கு மொட்டை அடித்து கைம்பெண்ணாக விட்டுவிடுவது அந்தகாலத்துப் பழக்கம். இதை பலரும் எதிர்த்து எழுதியும் பேசியும் வந்த காலகட்டத்தில்தான் கல்கி நாவல் எழுதுகிறார்.

குறிப்பாக, ‘பொன்னியின் செல்வன்’ நாவல் கதை களத்தில் கைம்பெண் வளர்த்த பிள்ளை ‘மதுராந்தகன்’ என்ன ஆகிறார் என்பதை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்.

நாவலின் இறுதி அத்தியாயங்களில், செம்பியன் மாதேவி தன் மதியூகத்தால் அனிருத்த பிரம்மராயருடன் இணைந்து, ‘சேந்தன் அமுதன்’தான் உண்மையான கைம்பெண் வளர்த்த பிள்ளை என்று தெரிய வரும் பொழுது, நமக்கு கல்கி சொல்ல வருவது ஓரளவு புரிகிறது.

செம்பியன் மாதேவி கதாபாத்திரத்தை நாவலின் அச்சாணியாக வைத்து கதை களத்தை சுழற்றுகிறார் என்று வைத்துக் கொண்டால், எந்த அளவிற்கு கல்கி அவர்கள் வாழ்ந்த காலத்தில் சமூக அவலங்களை எதிர்க்கிறார் என்பது புரியவரும்.

இப்படி ஒரு கோணத்தில் நான் பொன்னியின் செல்வனை அணுகிப் பார்க்க நினைத்தபோது, வேறொன்றும் எனக்குத் தோன்றியது.

நந்தினி, குந்தவை, மணிமேகலை, ஆதித்த கரிகாலன், சேந்தன் அமுதன், மதுராந்தகன் என்று இவர்களுக்கான வயதை ஆங்காங்கே அழகாகச் சொல்லிச் செல்கிறார், கல்கி. எனக்குத் தெரிந்து, இவர்கள் யாருக்கும் இருபதில் இருந்து இருபத்து ஐந்து வயதுக்கு மேல் இல்லை.

சஞ்சய் லீலா பன்சாலியுடைய படங்களை எல்லாம் பார்த்தால், கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகையர் அல்லது நடிகர், அந்தந்த கதாபாத்திரத்திற்கு சரியான வயதோடு, திரையில் மிக அழகாக பொருந்திப் போவதை நாம் பார்க்க முடியும். ‘பாகுபலி’யில் கூட வயதுக்குத் தகுந்த நடிகர் – நடிகை கதாபாத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பார்கள்.

தமிழில் எடுக்கப்படும் திரைப்படங்களில், குறிப்பாக சரித்திர படங்களில் ‘பொன்னியின் செல்வன்’ போன்ற நாவல்களை பின்புலமாக கொண்ட படங்களில் நடிப்பவர்களை தேர்வு செய்யும் பொழுது, அதிலும் பெண் கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் பொழுது வயது என்ற காரணியை வசதியாக மறந்து போகிறார்கள், இயக்குநர்கள்.

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக வரும் பொழுது நந்தினி, குந்தவை இருவருமே ஐம்பது அல்லது அதற்கும் மேலே வயதுடைய பெண்களாக காட்டப்படுவது எதற்காக என்று புரியவில்லை.

பெரிய பழுவேட்டறையர் வயதில் இருந்து சரி பாதிக்கும் கீழே இருப்பவர், நந்தினி. அவருடைய ஓரிரு வயது மூத்த, குந்தவை. எப்படிப் பார்த்தாலும் ஐஸ்வர்யா ராய் ஐம்பதை தாண்டியிருப்பார் என்று தோன்றுகிறது, தோற்றத்தில்.

அப்படியானால் நாவலில் சொல்லப்படும் அடிப்படை புரிதல், இளம் வயதில் திருமணம், ஓரளவு வளர்ந்த பருவத்தில் வீரம், அதன் பிறகு பட்டம் சூடி கொள்வது, நாட்டை ஆள்வது என்ற வயதை ஒத்த கருதுகோள்கள் எப்படி திரைக்கதையில் மையப்படுத்தப்பட்டிருக்கும் என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

பேரிளம் பெண்கள் நடிக்க வருவது வசூலை அள்ளித் தருமா ? என்ற கேள்வியும் இருக்கிறது. எதற்காக இவர்கள் இப்படி மூத்த அல்லது மூப்படைந்த நடிகையர்களை தேர்வு செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

எப்படி இருப்பினும், அடிப்படையான ‘பொன்னியின் செல்வன்’ கதைக்களம் வயதான பெண்களைச் சுற்றி அமைந்திருக்கிறது என்று வைத்துக்கொண்டால், அது இளம் கதாபாத்திரங்களையும் முப்படையச் செய்துவிட்டது, திரையில். இன்னும் ஒரு 50 ஆண்டுகள் கழித்து வேறொரு மொழியில் இந்தக் கதையைப் புரிந்து கொண்டு படம் எடுப்பார்கள்.அப்போது கதாபாத்திரங்களின் வயதை ஒத்த நடிகையர் தேர்வு இருக்கும் என்று நம்புகிறேன்.

சீனிவாசன் நடராஜன்.
13.7.2022.

One Comment on “திரையில் மின்னும் பேரிளம் பெண்கள்../சீனிவாசன் நடராஜன்”

  1. நாவல் வேறு திரைப்படம் வேறு; இரண்டும் வெவ்வேறு ஊடகங்கள். ஒன்றின் விதிமுறை இன்னொன்றுக்குப் பொருந்தாது. வாசகனின் மனப்பாங்கு வேறு, சினிமா ரசிகனின் எதிர்பார்ப்பு வேறு.

    இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் படமெடுக்க வந்தார் மணி ரத்னம் என்றா எண்ணுகிறீர்கள்?

Comments are closed.