
கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ் வித்தியாசமான ஒரு த்ரில்லர் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். முதலில், வித்தியாசமான கதைக் களன், சிறப்பான நடிப்பு, மிரட்டும் இசை, சூழலுக்கேற்ற லைட்டிங் (ஒளியமைப்பு) என்று சுமார் 80 நிமிடங்கள், கிட்டத்தட்ட ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைக் கொடுத்த ரத்னம் கூத்தபிரான் – எழுதி, இயக்கியவர் – அவர்களுக்கு வாழ்த்துகள்!
‘கூடு விட்டுக் கூடு பாய்தல்’, ‘பேய்’ பிடித்து ஆட்டுதல், பழி வாங்கத் துடிக்கும் பிசாசுகள் போன்ற அமானுஷ்ய படைப்புகளில் ஒரு ‘த்ரில்லிங்’ அனுபவம் இருக்கும். திரைப் படங்களில் இந்த அனுபவத்தை, இன்றைய தொழில்நுட்பங்களின் உதவியால் மிகச் சிறப்பாகச் செய்ய முடியும். ஆனால், அதே அனுபவத்தை, மேடையில் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல; சில நேரங்களில் நகைப்புக்கு இடம் கொடுத்துவிடும் அபாயம் உண்டு!
அப்படிப்பட ஒரு கதையை – ‘மனசு’ என்று சொன்னாலும் – ஆவியாகவோ, கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையாகவோ இருந்துவிட்டுப் போகட்டும் – மேடையேற்றி அதில் வெற்றியும் பெற்றிருக்கும் ‘சீதாபதி’ நாடகக் குழுவினருக்குப் பாராட்டுகள்!
இது ஒரு காதல் கதை, பேய் பழிவாங்கும் கதை, ஒரு சிவபக்தையான சாமியாரிணியின் எதிர்காலக் கணிப்பு சரியானதா என்பதைச் சொல்லும் அமானுஷ்யக் கதை அல்லது எல்லாமும் கலந்த ஒரு மாய யதார்த்தக் கதை என எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள், நாடகம் பார்ப்பவர்களை ஈர்க்கும் வித்தியாசமான கதை என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
சீதா, ரகுபதி இல்வாழ்க்கையில், கல்லூரியில் ஒரு தலைக் காதலாய் சீதாவை விரும்பிய சீதாபதி புகுந்து விளைவிக்கும் குழப்பங்களே கதையின் மையச் சரடு. வழக்கமான முக்கோணக் காதல் கதையிலிருந்து என்ன வித்தியாசம் என்று கேட்பவர்களுக்காக – சீதாபதி இறந்த பிறகு இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான்! சீதாபதியினால் ரகுபதி, சீதா இருவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கு என்ன முடிவு என்பதாய் நாடகம் சொல்லப்படுகிறது!
சீதாபதியாக ரத்னமும், ரகுபதியாக விக்னேஷும், சீதாவாக சுவாதியும் தேர்ந்த நடிப்பால், நாடகத்தை தூக்கி நிறுத்துகிறார்கள்! ரகுபதியாகவும், சீதாபதியாகவும் மாறி மாறி டயலாக் பேசிக்கொண்டே மேடையில் நடிக்கும் விக்னேஷுக்கு ஒரு சபாஷ்! மேடையில் தனித்தும், விக்னேஷுடனும் காதல், கோபம், அச்சம், வருத்தம், சலிப்பு, வெறுப்பு என சிறப்பாக நடிக்கும் சுவாதிக்கு விருது கிடைத்ததில் வியப்பே இல்லை!
சீதாபதியும், ரகுபதியும் தோன்றும் காட்சிகளில் இசை, ஒளியமைப்பு, ரத்னம், விக்னேஷ் இவர்களின் நடிப்பு எல்லாமே சிறப்பு. இந்தக் காட்சிகளில் இயக்குனர் ரத்னம் அவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கவை!
விஸ்வஜித் காட்சிகளுக்கேற்ப இசையால் மிரட்டியிருக்கிறார். நாடகத்தின் வெற்றியில் இவருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. குறிப்பாக சீதாபதி, ரகுபதி இருவரும் தோன்றும் காட்சிகளில், லைட்டிங் எஃபெக்டுடன், இசையும் சேர்ந்து மிரட்டியிருக்கிறார்கள்!
இன்னும் சிறிது அழுத்தமான வசனங்கள் (மலர், டாக்டர், இன்ஸ்பெக்டர் பேசும் வசனங்கள்), தெளிவான க்ளைமேக்ஸ் (சீதாபதி ஏன் எப்படி மாறினார்?) எனச் சில மாற்றங்களைச் செய்தால், மேடையில் நம்பர் ஒன் த்ரில்லராக வலம் வரலாம்!
நாடக மேடையில் இப்படி ஒரு களத்தை எடுத்து நாடகமாக்குவது ஒரு சவால்தான். வித்தியாசமான முயற்சியும் கூட! அதற்காகவே கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ் குழுவிற்கு பாராட்டுக்கள்!
