இறைவனும் மனிதனும்/இராஜேஸ்வரன் ஆ

காதல் இல்லை காதல் இல்லை
கடவுளின் படைப்பில் காதல் இல்லை

காமத்தைப் படைத்தான் இறைவன்- அதனைக்
காதலாய்த் திரித்தான் மனிதன்

நிர்வாணம் தந்தான் இறைவன் – மறைக்க
நெடும்துகில் நெய்தான் மனிதன்

காய் கனி கொடுத்தான் இறைவன் – பசிக்கு
காரமாய்ச் சமைத்தான் மனிதன்

வாழ் நிலம் கொடுத்தான் இறைவன் – சொந்த
வசதிக்குப் பிரித்தான் மனிதன்

ஆறுகள் கொடுத்தான் இறைவன் – நீரை
அணையிட்டுத் தடுத்தான் மனிதன்

மழைமரம் நட்டான் இறைவன் – ஆனால்
மரம் வெட்டி அழித்தான் மனிதன்

காற்றினைக் கொடுத்தான் இறைவன்- வானில்
கசடுகள் இறைத்தான் மனிதன்

தீயினைக் கொடுத்தான் இறைவன் – அதனைத்
தீமைக்கு வளர்த்தான் மனிதன்

எத்தனை எத்தனை மாற்றம் – இவற்றால்
இம்மியும் உண்டோ ஏற்றம்?!

வழியினில் மனிதனை நிறுத்தினேன் – மறித்து
விழியினில் நோக்கியே வினவினேன்

“இறைவனைப் பகைக்கும் முறைமை – செய்ய
எவரடா தந்தார் உரிமை?”

ஏறிட்ட மனிதன் சிரித்தான் – தெளிவாய்
எல்லோருக்கும் பதில் இறுத்தான்

“எல்லாம் படைத்தவன் அவனடா – அந்த
இறைவனைப் படைத்தவன் நானடா !!”

One Comment on “இறைவனும் மனிதனும்/இராஜேஸ்வரன் ஆ”

Comments are closed.