
ஓசை கேட்டு
எட்டிப் பார்க்குமுன்
விடை பெற்றுப் போய்விடுகிற
ஜூலை மாத மழை போல்
தவ்விச் சென்று விடுகிறது உன் முகம்
பின்னும் பெருமழைக்கான தோரணையில்
இடியும் மின்னலும்
சடசடவெனத் தூறலும் சிதற
வேக வேகமாகப் போய்
வாசல் கொடியில் இருந்து
சுருட்டி எடுத்து வந்து
உலர்த்த இடமும் காணாது
ஈரமும் தொலைக்காது
மூலையில் குவிந்து குமுறும் துணிமணிகளாய்க்
கூடுதல் புழுக்கத்தில்
பரிதவிக்க விடுகிறாய்
நின்றுவிட்ட மழையாய் …
ஏதோ கோபத்தில் பேசிவிட்ட
ஒற்றைச் சொல்லுக்கு
மொத்தமாய் உன்னைத் திரட்டிக்கொண்டு
தப்பிக்க முடியாதபடிக்கு
வெறித்து நோக்குகிறாய்
வீதி கொள்ளாத வெள்ளமாய் –
என்னுள் வாங்கி நிரப்பி வைத்துக் கொண்டு
உனக்காகவே
வடிந்து கரைந்து போய்க் கொண்டிருக்கிறேன் !

மழையும், மங்கையும் ஒன்றே என்பதை பிரதிபலிக்கும் கவிதை.
“வடிந்து கரைந்து போய்க்கொண்டிருக்கிறேன்” நீங்கள்,
நாங்கள்
சில நாட்கள் விடிந்ததும் கரைந்து போவதே வழக்கம்.
படிக்கும்போது அப்படியே இங்கேயும்.
நல்லாவே வாசிக்க வச்சிட்டீங்க.!!
காலத்திற்கேற்ற கவிதை
ஆஹா. மழையும் கவிதையும் அபாரம்
அற்புதமான கவிதை
அருமை, வெறித்து நோக்கினால் கூட பரவாயில்லையே… நிம்மதி பறித்து விலகினால் இன்னும் வலிக்கிறதே.