
ஒரு கிராமத்திற்கு வந்த புதிய மனிதன் அங்கிருந்த சூஃபி ஞானியைப் பார்க்கச் சென்றான். "ஐயா! நான் இந்த ஊருக்கு குடிபெயர்ந்து வரலாமா என்று யோசிக்கிறேன் - இங்குள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள்?" என்று கேட்டான். அதற்கு அந்த சூஃபி ஞானி "நீ எங்கிருந்து வருகிறாய், அங்கே என்ன வகையான மக்கள் வாழ்கிறார்கள் என்று சொல்?" என்று வினவினார். "அவர்கள் எல்லோரும் கொள்ளையர்கள், ஏமாற்றுக்காரர்கள் பொய்யர்கள்" புதிய மனிதன் பதிலிறுத்தான்.
சூஃபி ஞானி புன்னகைத்தவாறே கூறினார் “இவ்வூரில் வசிப்பவர்களும் அதே மாதிரியான மக்கள்தாம்.அதனால் இங்கு நீ வருவதைப் பற்றி தீர யோசித்து முடிவு செய்!” ஞானியின் பதிலைக் கேட்டு குழப்பத்துடன் சென்ற அம்மனிதன் பிறகு திரும்பி வரவே இல்லை.
சில காலம் சென்றபின், மற்றொரு மனிதன் அந்த கிராமத்திற்கு வந்து அதே கேள்வியை சூஃபி ஞானியிடம் மறுபடியும் கேட்டான் “நான் இங்கு வந்து தங்கியிருக்க எண்ணுகிறேன் – இந்த ஊரில் இருக்கும் மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்ல முடியுமா?” சூஃபி ஞானி அவனிடம் திரும்பக் கேட்டார் ” நீ இப்போது இருக்கும் இடத்தில் என்ன வகையான மக்கள் வாழ்கிறார்கள்? எனக்கு சொல்!” அதற்கு அம்மனிதன் பணிவுடன் பதில் சொன்னான் “ஓ, அவர்கள் கனிவானவர்கள், மென்மையானவர்கள், இரக்கமுள்ளவர்கள், பழகுவதற்கு இனியவர்கள். நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன்.” அதைக் கேட்ட சூஃபி ஞானி புன்னகையோடு கூறினார் “இங்கு வாழ்பவர்களும் அதேமாதிரியான மனிதர்கள்தான்! நீ தாராளமாக இங்கே வந்து எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வசிக்கலாம்.”
