பிருந்தாவின் சீனியர் சிட்டிசன். பாகம் 2/மாதவ பூவராக மூர்த்தி

வெள்ளிக்கிழமை காலை சீக்கிரம் எழுந்து வைபவ் ரெசிடென்சியில் ரூமில் குளித்துவிட்டு டிரஸ் செய்து கொண்டு ராதாவும் பிருந்தாவும் ஆளுக்கு ஒரு மாட்டுகிற பையில் நேற்று ஹோட்டலில் வாங்கிய வாட்டர் பாட்டில், பர்ஸ், துண்டு எல்லாம் எடுத்துக்கொண்டு மலை ஏற தயாரோனோம் (பஸ்ஸில் தான்).

ரூமை பூட்டிவிட்டு நடந்து கோவிந்தராஜர் பெருமாள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து,வெளியில் நின்ற ஆட்டோவில் ஏறி குளக்கரையில் ஒரு தடவை சம்பந்தி L R கோபாலன் அழைத்துப் போன, லட்சுமி நாராயணபவனில் டிபன் சாப்பிட்டோம்.

நடந்து எதிர் சந்தில் திருமலை செல்லும் பஸ் ஸ்டாப்புக்கு நடந்து போனோம். வரிசையாக நின்றிருந்த பஸ்களில் முன்னால் நின்ற, கூட்டம் இல்லாத பஸ்ஸில் முன் நின்ற கண்டக்டரிடம் திருமலா என்றேன்.

அவர்,” எக்கன்டி” என்றார்.

நான், “டிக்கெட்” என்றேன்.

“லோபலு” என்றார்.

உள்ளே போய் காற்று வருகிற சீட்டாக பார்த்து உட்கார்ந்து கொண்டோம் சிறிது நேரத்தில் பஸ் புறப்பட்டது. பிருந்தா, ‘கோவிந்தா கோவிந்தா”, என்றாள்.

கண்டக்டர் வந்து டிக்கெட் என்றவுடன்,

நான் “மூடு” ரிட்டன் டிக்கெட் என்றேன்.

அவர், “ஒன்வே ஒன்லி” என்றார்.

வழி இல்லாமல் வாங்கிக் கொண்டேன். செக் போஸ்டில் பஸ் நின்றது. லக்கேஜ்களுடன் எல்லாரையும் இறக்கி கையில் இருந்த பிளாஸ்டிக் பாட்டில்களை பிடுங்கி எறிந்து விட்டு, ஸ்கேனிங் அனுப்பினார்கள்.

நான் பஸ் நம்பரை மனப்பாடம் செய்து கொண்டேன் ஸ்கேனிங் முடிந்து சிறிது தள்ளி நின்ற போது பஸ் வந்தது எல்லோரும் அடித்துக் கொண்டே ஏறினார்கள். நாங்கள் கடைசியாக பஸ்ஸில் ஏறினோம், பார்த்தால் எங்கள் சீட்டுகளில் வேறு யாரோ மூன்று பேர் உட்கார்ந்து இருந்தார்கள். எங்கள் சீட் என்று சொல்லிப் பார்த்தோம் அவர்கள், “நாதி” என்றார்கள். பிறகு கண்டக்டர் வந்து அவர்களிடம் டிக்கெட் வாங்கி பார்த்துவிட்டு அவர்களிடம் “திகண்டி” என்றார் . பாவம் வேறு பஸ் மாறி ஏறிவிட்டார்கள்.

ஒரு வழியாக திருமலை இறங்கும் போது மணி 11 வெளியே வெளியே வந்து ஜீப் பிடித்து 150 ரூபாய் கொடுத்து உத்திராதிமடம் வாசலில் இறங்கினோம் வெளியே கூட்டமாக இருந்த செருப்புகளுடன் எங்கள் செருப்பையும் போட்டுவிட்டு நடந்து வராக சுவாமி கோவிலுக்கு போனோம். கூட்டம் இல்லை, நல்ல தரிசனம்.

வெளியே வரும்போது மணி 11:45 நிறைய நேரம் இருந்தது பக்கத்தில் இருந்த விஸ்தாரமான இடத்தில் பெரிய மரங்களில் படியில் உட்கார்ந்து பக்தர்கள் குளத்தங்கரையில் குளித்துவிட்டு துணி காய வைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் மரநிழலில் பையை தலைக்கு வைத்து படுத்திருந்தார்கள்.

ராதா தனியாக இருக்க வேண்டுமே என்று அவளுடன் உட்கார்ந்திருந்தோம் 12.15க்கு தரசன டிக்கெட், ஆதார் கார்டு, ஸ்லோகப் பையை எடுத்துக்கொண்டு பிருந்தாவும் நானும் தரிசனத்துக்கு புறப்பட்டோம்.

ராதா “நான் மெதுவா நடந்து உத்திராதிமடத்துல காத்திருக்கேன்” என்றாள்.

நாங்கள் கோபுர வாசல் வழியாக தெற்கு மாட வீதி போய் திருமலை நம்பி கோவில் கிட்ட நின்றிருந்த வாலன்டியர்கள் இடம் டிக்கெட் காண்பித்து மேலே ஏறினோம். நல்ல வெயில் பிரகாரத்தில் வெள்ளை பெயிண்ட் அடித்ததால் காலில் சூடு தெரியவில்லை அந்த சின்ன தூரம் வெய்யிலில் கால் கொதித்தது,காலை தூக்கி நின்றாடம் தெய்வமாக ஓடிப்போய் வரிசையில் சேர்ந்து கொண்டோம். வரிசையில் நிழலாக இருந்தது,வரிசையாக ஒரு பக்கம் நாற்காலி போட்டிருந்தார்கள். எல்லாம் வயதானவர்கள். வாலன்டியர்கள் “சிங்கிள் ரோ” என்று கத்திக் கொண்டு இருந்தார்கள் இருந்தும் கூட்டம் முண்டியடித்தது.

ஒரு வழியாக டிக்கெட் சரிபார்க்கும் கவுண்டருக்கு வந்தோம் கவுண்டரில் இருந்தவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் எங்கள் டிக்கெட்டை கையில் வாங்கி மேலும் கிழும் பார்த்தார் பிருந்தாவுக்கு பயம் சரி இல்லையோ என்று சொல்லிவிட போகிறாரோ கொஞ்ச நேரம் நின்றோம் பிறகு அவர் செல் போனில் பேசிக் கொண்டே ஸ்கேன் பண்ணி டிக்கெட்டை கொடுத்து விட்டார் பிருந்தாவுக்கு நிம்மதி.

மெதுவாக அந்த ஷெட்டுக்குள் போனோம் கீழே வரிசையாக போட்டிருந்த நாற்காலிகளில் உட்காரச் சொன்னார்கள் போகும்போது இடது பக்கம் வாலன்டியர்கள் பெரிய அண்டாக்களில் சாம்பார் சாதம், தயிர் சாதம் வைத்துக்கொண்டு பேப்பர் தட்டுகளில் எடுத்துக் கொடுத்தார்கள். சூடாக இருந்தது.

பிருந்தா சாம்பார் சாதம், தயிர் சாதம் வாங்கி கொண்டாள். நான் தயிர் சாதம் மட்டும் வாங்கிக் கொண்டேன். வந்து உட்கார்ந்தோம் பிருந்தாவுக்கு நல்ல பசி.

“நல்ல வேளை ஒன்னும் சாப்பிடாம வந்ததுக்கு இந்த பிரசாதம் ரொம்ப வசதி”

சாப்பிட ஆரம்பித்தேன்.
பிருந்தா, “சாம்பார் சாதம் ரொம்ப நன்றாக இருக்கு கொஞ்சம் எடுத்துகுங்கோ”
என்றாள்.

அவள் ஆசைக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டேன். நன்றாகவே இருந்தது.

கூட்டத்தில் விதவிதமான மனிதர்களை பார்த்தேன். சிலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள், சிலர் பக்கத்தில் இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள், ஒரு சிலர் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்கள். நான் இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

பிருந்தா ஸ்லோக புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருந்தாள்

மணி ஒன்னே முக்கால் ஒருவர் எழுந்து வந்து வாலன்டியர்களிடம் “இன்னும் எவ்வளவு நேரம் உட்காரவேண்டும்? ‘என்று கடுமையாக கேட்டார். டிக்கெட்டிலேயே மூன்று மணி தரிசனம் என்று போட்டிருந்தது. நான் அவரிடம் சொல்லலாம் என்று இருந்தேன். பிறகு நமக்கேன் வம்பு என்று வாளா விருந்தேன். வாலண்டியர் பொறுமையாக பதில் சொன்னார் .

எதிரில் உட்கார்ந்திருந்த பெரியவர் லைட் எரிவதை பார்த்து வாலன்டியரிடம் இதெல்லாம் Off பண்ணலாமே அநாவசியமாக கரண்ட் வேஸ்ட் என்றார். வீட்டிலும் அவர் அப்படித்தான் இருப்பார் என்று தோன்றியது .

ஒரு வயதான அம்மாள் எழுந்து கைலம்ப போனார். வாலண்டியர் உடனே அவருடன் சென்று உதவி செய்து, அவரை திரும்ப அழைத்து வந்தார். வயதானவர்களுக்கு துணையாக வந்தவர்கள் சிலர் இளம் வயதினராக இருந்தார்கள்.

பக்கத்தில் இருந்த அம்மாவுக்கு வயது 70 இருக்கும் அவர் தனியாக வந்திருந்தார் பிருந்தாவிடம் பேச்சு கொடுத்தார். மடிப்பாக்கத்தில் இருப்பதாக சொன்னார் துணைக்கு அழைத்து வரலாம் என்பது தெரியாது என்று சொன்னார். நான் கொஞ்ச நேரம் கண் மூடினேன்.

  1. 40க்கு கூட்டத்தில் ஒரு சலசலப்பு. கேட்டை திறந்து விட்டார்கள் அதுவரை வயதானவர்கள் என்று நினைத்தவர்கள் வாடி வாசலில் திறந்தவுடன் வரும் காளைகள் போல் துள்ளி குதித்து வரிசையில் தரிசனம் பண்ண முந்திக் கொண்டு போனார்கள். நானும் பிருந்தாவும் மெதுவாக போனோம்.

ரொம்ப தூரம் நடையில்லை அந்த சாலையை கடந்து Qவில் இணைந்தோம் இரண்டு சாரியாக பிரித்து விட்டார்கள். நாங்கள் வலது பக்கம் போனோம் கூட்டம் இல்லாமல், ஒருவரை ஒருவர் தள்ளாமல், மெதுவாக நகர்ந்தது.

ஒரு வழியாக வாசலை அடைந்தோம் காலில் குளிர்ந்த நீர் பட்டது அங்கு முதலே பெருமாளின் தரிசனத்தை உணர்ந்து அமைதியானோம். உள் வாசல் நுழைந்து Q வில் வலது பக்கம் மெதுவாகச் சென்று கண் குளிர தரிசனம் செய்தோம். யாரும் ஜருகண்டி சொல்லவில்லை.

தூரத்தில் இருந்தாலும் மின்சார விளக்கு இல்லாமல், தீப ஒளியில் ஸர்வ அலங்காரங்களுடன் பெருமாள் ஜொலித்தார். புனர் தரிசனப் பிராப்தி ரஸ்து என்று பெருமாள் சொன்னது போல் இருந்தது. பாதாதி கேசம் திருவேங்கடமுடையானை தரிசித்தோம். நகர மனமில்லாமல் பிருந்தா மேலும் சில கணங்கள் கண் மூடி நின்றாள். அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது.

திருப்தியுடன் வெளியே வந்து பகுளாதேவி சன்னதியை பார்க்கப் போனோம். கயறு கட்டி கதவு மூடி இருந்தது. பிறகு வரிசையில் நின்று தீர்த்தம் சடாரி எடுத்துக்கொண்டு பிரதட்சணம் வந்தோம்.

வடக்கு மூலையில் மேடை ஏறி விமான வெங்கடாஜலபதி தரிசனம் செய்தோம். உண்டிக்கு போய் காணிக்கை செலுத்தி விட்டு, யோக நரசிம்மரை பார்த்து விட்டு, மறுபடியும் வெளியே செல்லும் கூட்டத்தில் கலந்தோம்.

பிரசாத Q வில் நல்ல பிரசாதம் கிடைக்க வேண்டுமே என்று வேண்டிக்கொண்டு ஒரு வரிசையில் நின்றோம். எல்லா இடத்திலும் லட்டு தான் பிரசாதம். வாங்கிக்கொண்டு தரிசனத்தை பற்றி மெய் மறந்து பேசிக்கொண்டு வெளியே வந்தோம் .மணி மூணே முக்கால் .

லட்டு 2 ஃப்ரீயாக தருகிறார்கள் டிக்கெட்டை காண்பித்து வாங்கிக் கொள்ளலாம். பிருந்தா என்னை வெளியே நிறுத்திவிட்டு லட்டு வாங்க போனாள். நல்ல கூட்டம்.

நான் வழக்கம் போல் கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன் இது எனக்கு அலுக்காத ஒன்று. சிலர் கீழே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள், சிலர் மொட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு குழந்தை தாத்தாவின் கையை பிடித்துக் கொண்டு நின்றது. தாத்தா லட்டு வாங்க போனவர்கள் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தார். குழந்தை தாத்தாவின் கையை விட்டுவிட்டு மிக அழகாக நடனமாடியது. அது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது பெரிய நாட்டிய தாரகைகள் ஆடுவது போல் ஒரு நளினம் இருந்தது. இந்தப் பெண் பெரியவளானதும் கற்றுக் கொடுத்தால் மிகப்பெரிய நடன மங்கை ஆக கூடும் என்று என் மனதுக்கு தோன்றியது.

பாவம் பிருந்தா, கஷ்டப்பட்டு இரண்டு லட்டுகளும், எக்ஸ்ட்ரா இரண்டு லட்டும் வாங்கி வந்தாள். வழக்கப்படி உடனே கொஞ்சம் எடுத்து சாப்பிட்டோம். கொஞ்ச நேரம் பந்தலில் உட்கார்ந்து விட்டு, மேல பிரகாரம் வழியாக காத்துக் கொண்டிருக்கும் ராதாவை சந்திக்க உத்திராதிமடம் போனோம்.

வெளியில் ராதாவை காணவில்லை. நான் உள்ளே சென்று பார்த்தேன். அங்கும் இல்லை. லிப்டில் மாடியில் போய் பார்த்தேன் அங்கும் காணவில்லை. ராதா தொலைந்து விட்டாள். போன் பண்ண கையில் செல்போன் இல்லை. அது இரண்டும் அவளிடம் தான் இருந்தது.
என்ன செய்வது என்று அறியாமல் மறுபடியும் வாசலில் காத்திருந்தோம். மணி 5.

பிருந்தா ” ராதா அநேகமாக சகஸ்ர தீப அலங்கரனை சேவைக்கு போய் இருப்பாள் நீங்கள் இங்கே இருங்கள் நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று புறப்பட்டாள்.

இந்த கூட்டத்தில் எப்படி ராதாவை கண்டுபிடிப்பாள் என்று எனக்கு கவலை வந்தது.நான் பக்கத்தில் இருந்த ஹோட்டலில் ஒரு ஃபில்டர் காபி வாங்கி குடித்தேன்
கொஞ்ச நேரத்தில் ராதா வந்து விட்டாள்.

” என்ன ராதா எங்கே போனாய்? நாங்கள் கவலைப்பட்டு தேடிக்கொண்டிருந்தோம் ” என்றேன்.

” நான் மடத்தில் உள்ளே இருந்த ஒருவரிடம் சொல்லிவிட்டு தான் போனேன் நீ உள்ளே போய் விசாரிக்கவில்லையா?” என்றாள்.

” அதை நீ என்னிடம் சொல்லவில்லை சரி எப்படியோ வந்து விட்டாய்” என்றேன்.

அவள் “பிருந்தா எங்கே?” என்றாள் .
“பிருந்தா உன்னைத் தேடிக் கொண்டு போயிருக்கிறாள் வந்துவிடுவாள்” என்றேன்.

ராதா,” நான் தான் சொன்னேனே, சுவாமி தரிசனம் பண்ணாததால் உற்சவமூர்த்தி ஊஞ்சல் சேவையில் பார்த்து விட்டு வருகிறேன் என்று, நீ ஏன் கவலைப்பட்டாய்? என்றாள்.

அதற்குள் நல்ல வேளையாக பிருந்தா வந்து விட்டாள். பிறகு நாங்கள் செருப்பை தேடி போட்டு கொண்டு FREE பஸ்ஸில் ஏறினோம்.

அடுத்த ஸ்டாப்பில் நிறைய கூட்டம் வர ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை. ராம் பகிச்சா பஸ் ஸ்டாண்டில் இறங்க முற்படும் போது நல்ல வேளையாக நிறைய பேர் இறங்கியதால், எங்களால் நிதானமாக இறங்க முடிந்தது. பிருந்தா டிக்கெட் வாங்கி வர ஒரு பஸ்ஸில் ஏறி திருப்பதிக்கு வந்தோம். தரிசனம் நல்ல முறையில் ஆனதில் மனதுக்கு திருப்தியாக இருந்தது.

” மூணு மாசத்துக்கு ஒரு தடவை இப்படியே வந்து தரிசனம் பண்ணலாம் ஈஸியா இருக்கு” என்றாள் பிருந்தா.

நான் “பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து பீமாஸ் போய் இறங்கினோம் இரவு டிபன் சாப்பிட்டு ரூமில் போய் படுத்தோம்.

நாளை காலை 10 மணி டிரெயினில் சென்னை திரும்ப வேண்டும். நல்ல தூக்கம். காலையில் எழுந்து குளித்துவிட்டு பீமாஸில் போய், இட்லி வடை சாப்பிட்டு, அது திருப்பதி தரிசனத்தின் ஒரு பகுதி, பீமாஸில் சாப்பிடாமல் வந்தால் திருப்பதி யாத்திரை முடிவடையாது.

ஒன்பதரை மணிக்கு ஸ்டேஷன் போனோம் எதிரில் பெட்டியை இழுத்துக் கொண்டு போகும் போது கார் டிரைவர்கள், “திருமலா சார்,”என்றார்கள் அவர்களிடம் வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு உள்ளே நுழைந்தோம். ட்ரெயின் எத்தனாவது பிளாட்பாரத்தில் வரும் என்று தெரியவில்லை. எதற்கும் முதல் பிளாட்பாரத்தில் உட்காரலாம் ட்ரெயின் வந்தவுடன் போகலாம் என்று முடிவு செய்தோம்.

நல்ல வேளையாக முதல் பிளாட்பாரத்திலேயே வந்தது. D2 கம்பார்ட்மெண்டில் ஏறினோம். ஒரு டிக்கெட் ஒரு பக்கமும், இரண்டு டிக்கெட் இன்னொரு பக்கமும் இருந்தது. அங்கு இருந்தவர்களை ராதா மொழி தெரியாததால் கையால் சாடை செய்து மாற்றிக்கொள்ள சொன்னாள். கடைசியில் அவர்கள் தமிழில் பேசினார்கள். மூன்று பேரும் ஒரே சீட்டில் உட்கார்ந்து கொண்டோம் ட்ரெயின் சரியான நேரத்தில் புறப்பட்டது.

ஒன்று இருபதுக்கு சென்ட்ரல் வந்தது. மெதுவாக இறங்கி A2Bயில் சாம்பார் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டு, OLA பிடித்து வீட்டிற்கு வந்து சேர்த்தோம். ராதா நான்கு மணிக்கு மண்ணிவாக்கம் புறப்பட்டாள். சீனியர் சிட்டிசன் தரிசனம் பார்த்த திருப்தியில் வீட்டிற்குள் வந்து படுத்தோம் இன்னும் மூன்று மாதத்திற்கு கவலை இல்லை அதன் பிறகு பிருந்தா சீனியர் சிட்டிசனை (அதாவது என்னை) ஞாபகப்படுத்துவாள். \கோவிந்தா! கோவிந்தா.!.

நழுவும் மாத்திரைகள்/மாதவ பூவராக மூர்த்தி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

பிருந்தாவின் சீனியர் சிட்டிசன்/மாதவ பூவராக மூர்த்தி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)