நழுவும் மாத்திரைகள்/மாதவ பூவராக மூர்த்தி

வணக்கம். என்னுடைய அவஸ்தைகள் எல்லாமே சுவையானவை. அந்த வரிசையில் இந்த வயதில் எனக்கு ஏற்படும் (தினமும்) அவஸ்தை இந்த நழுவும் மாத்திரைகள்.

ஓரளவு வயதான பிறகு நம் உணவு பழக்கங்களாலும், மன உளைச்சல்களாலும் பல வியாதிகள் நம்முடன் இணைகின்றன. சில சில சுகவீனங்கள் (ஜுரம், ஜலதோஷம், கண் காது வலி,தலைவலி, எலும்பு முறிவுகள்)அவ்வப்போது வந்து மறைவதுண்டு.
அவைகளுக்கு நாம் டாக்டர்களிடம் காட்டி மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு குணமடைந்து விடுவோம். சில சுகவீனங்கள் B P, SUGAR, CLOSTRAL நம்மோடு உடன் வாழ்பவை.

அவைகளுக்கு நம் ஜீவபரியந்தம் மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.
ஒரு வயதிற்கு மேல் பார்க்கும் சந்திக்கும் உறவினர்களையும், நண்பர்களையும் பரஸ்பரம் விசாரிக்கும் போது மாத்திரை அளவுகளை சொல்லி அவருக்கும் நமக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று பார்த்து அவரை விட நமக்கு குறைவாக இருந்தால் மனதில் சந்தோஷமும், அதிகமாக இருந்தால் வருத்தமும் வருவது தவிர்க்க முடியாது.

தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன், உணவுக்குப் பின் என அதிகமாக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் பாக்கியசாலிகளில் நானும் ஒருவன்.இதில் அவஸ்தை எப்படி என்று உங்களுக்கு தோன்றக்கூடும்.

மாதத்திற்கு ஒரு முறை டாக்டரிடம் காட்டி சோதனைக்கு பிறகு எண்ணிக்கை அளவுகள் மாற்றம் செய்து வாங்கி வரவேண்டும்.

மாதம் முழுவதற்கும் ஆன மாத்திரைகள் தனியாக வைத்துக்கொண்டு, அதிலிருந்து பத்து நாட்களுக்கு தேவையான மாத்திரைகள் டாக்டரின் Prescription படி வேளா வேளைக்கு உணவுக்கு முன், பின் என பத்து பத்து மாத்திரைகளாக பிரித்து வைத்து கொள்ள வேண்டும்.

இதில் உணவுக்கு முன் மாத்திரை ஒன்றுதான் என்பதில் ஒரு ஆசுவாசம். உணவுக்குப் பின் மாத்திரைகள் பல விதம். அதில் சில capsules, சில மாத்திரைகள் சின்னதும் பெரிதுமானவை.

நான் இரண்டு டாக்டரிடம் காட்டி மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு டாக்டர் மாத்திரையில் ஒன்று மிளகளவு. அதிலும் ஒருநாளைக்கு அரை மாத்திரை. இதை பாதியாக்க மிகவும் சிரமப்படவேண்டும்.

அந்த மிளகளவு மாத்திரை இரண்டாக்க முதல் சில நாட்கள் நான் கையால் இரண்டாக்க முடியாது. சமதரையில் வைத்து ஒரு கத்தியால் நடுவில் ஒரு அழுத்தம் கொடுத்தேன். ஒரு பாதி கத்திக்கு மிக அருகிலும், மறுபாதி சிதறி எங்கேயோ தரையில் விழுந்துவிட்டது. கண்ணாடி போட்டு கொண்டு தரையில் தவழ்ந்து தேடி எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தேன்.

அதன் பிறகு நான் வழிமுறையில் என் மனைவி பிருந்தாவின் ஆலோசனை படி மாற்றிக் கொண்டேன். அதன்படி கத்திக்கு இரண்டு பக்கமும் விரலால் பிடித்துக் கொண்டு வெட்டியதில் மாத்திரையின் இருபாதிகளும் கத்திக்கு பக்கத்தில் சமர்த்தாக இருந்தது.

இந்த பிரச்னை ஒருவழியாக ஓய்ந்தது. உணவுக்குப்பின் மாத்திரைகளை கவரிலிருந்து வெளியே எடுத்து ஒவ்வொன்றாக எடுத்து அணிவகுப்பை அலங்கரிப்பேன். பிறகு பாட்டிலில் தண்ணீர் எடுத்து விழுங்குவேன்.

மாத்திரை கீழே விழாமல் இருக்க திவானில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். அப்போதும் இந்த நழுவுதல் தவிர்க்க முடியாது. மாத்திரை எடுக்கும் போதோ, எடுத்துக்கொள்ளும் போதோ நழுவி தரையில் பாய்ந்து விழுந்துவிடும்.

உடனே திவானிலிருந்து எழுந்து குனிந்து தவழ்ந்து மாத்திரை தேடும் முயற்சியில் முயன்று தோற்றுவிடுவேன். தரையின் மொசைக் டிசைன் சுமார் வெளிச்சம் காரணம். பிறகு பிருந்தாவின் உதவிக்காக “பிருந்தா” என்று கூப்பிட்டவுடனே குறிப்பறிந்து “என்ன மாத்திரை கீழே போட்டுட்டேளா?”

“இல்லே விழுந்துடுத்து”

“இதே வேலை தினமும் நகருங்கோ. ” என்று தேடுதல் பணியில் ஈடுபடுவாள். அவளுக்கு உதவ நினைத்து அவள் அருகில் நின்றுகொண்டு நானும் தேடுவேன்.

“மறைக்காதீங்க போய் லைட்டை போட்டுட்டு போய் ஓரமா உக்காந்துங்கோ”என்றாள் எரிச்சலோடு.

சில நிமிடங்களில் “இந்தாங்கோ” என்று கையில் கொடுப்பாள். அந்த பாழாய்ப்போன மாத்திரை என் கண்ணுக்கு படாமல் அவள் கைக்கு கிடைக்கிறது.

“ரொம்ப தேங்க்ஸ் பிருந்தா உன் கைக்கு மட்டும் எப்படி கிடைச்சது?”

“ம், என் கண்ணை வச்சண்டு தேடினா கிடைக்கும்”

எனக்கு ஏற்பட்ட அவமானத்தையும், கீழே விழுந்த மாத்திரையையும் பதிலெதுவும் சொல்லாமல் விழுங்குவேன்.

என் அம்மா அவள் வயதான காலத்தில்,அவள் மறைவதற்கு முன் சில வருடங்கள், என்னுடன் இருந்தாள். தினமும் மாத்திரை சாப்பிடும் போது நழுவ விட்டு விடுவாள்.
நான் தேடிக்கொடுத்து விட்டு “அது எப்படிம்மா தினமும் மாத்திரை கீழபோடுவ? என்று சிரித்துக்கொண்டே கேட்பேன்.

அம்மா அதற்கு “உன் வயசு எனக்கு வராது, ஆனா என் வயசு உனக்கு நிச்சயம் வரும்” என்பாள்

அவள் ஆசீர்வாதம் பலித்து விட்டது. எனக்கும் வயசாகி விட்டது.

சரி எனக்கு இரவு உணவுக்கு பின் சாப்பிடும் மாத்திரை எடுக்கும் நேரம். இன்றைக்காவது மாத்திரை நழுவ விடாமல்,
பிருந்தாவின் திட்டு வாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு சந்திப்போம்.

4 Comments on “நழுவும் மாத்திரைகள்/மாதவ பூவராக மூர்த்தி”

  1. இந்த மாத்திரை அனுபவம் அப்படித்தான்
    உங்கள் தாயார் பேசியது
    எனக்கு என் தாயார் சொன்னது போல
    உணர்ந்தேன்.பாராட்டுகள்
    எஸ்ஸார்சி

Comments are closed.