புல்வெளி காமராஜன் கவிதைகளை முன்வைத்து சில குறிப்புகள்-

தமிழ்க்கவிதை உலகில் காலத்திற்கு தனி இடம் உண்டு.கவிதைகள் பெரும்பாலும் காலத்தின் சாட்சிகளாகத் தொடர்ந்து இயங்குகின்றன. சங்கக் கவிதைகளில் இடம்பெறும் பெரும்பொழுதும்,சிறுபொழுதும்காலக்குறியீடுகள் தானே.தமிழ்க் கவிதைகளில் காலம் தொழிற்படும் இடங்களை அடையாளம் காண்பதன் மூலம் கவிதைகள் சுட்டும்வாழ்க்கை அனுபவங்கள் ஒவ்வொரு காலத்திலும் மாற்றத்திற்குள்ளாகின்றன என்பதை உணரமுடியும்.காலம் ஒரு இடமாககாட்சியளிக்கிறது எனக் கூறுகிறார் நகுலன். ஞானக்கூத்தன் கவிதைகளில் காலத்தின் முக்கியத்துவத்தை கூற வந்த கவிஞர் ஆனந்த், ஞானக்கூத்தனின் கவிதைகளில் அனுபவம் வெளிப்படும் தளங்களில் ஒன்றான காலத்தை அடையாளம் காண்கிறார்.மனுஷ்யபுத்திரனின்"நினைவூட்டல்களின் காலம்"மிக முக்கியமான கவிதை.இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
காலம்முக்காலங்களையும் உணர்த்தும்ஒருபொதுச்சொல்.இப்பொதுச் சொல் கவிதையில் இடம் பெறும் போது நம் வாழ்க்கைப் பாடுகளும் , வாழ்க்கைப் பாடங்களும் காட்சித் துணுக்குகளாய் கண்முன் விரிகின்றன. புல்வெளி காமராசன் கவிதைகளில் காலம் எங்ஙனம் வினை புரிகிறது என்பதை முன்னிறுத்துவதே நம் நோக்கமாகும்.
காஞ்சிபுரம்இலக்கிய வட்டத்தைதோற்றுவித்தவர்களில்ஒருவரான புல்வெளி காமராஜன் தான் நடத்திய இதழின் பெயரை அடைமொழியாக கொண்டு அறியப்படுபவர். தீவிர வாசகர்களில் முன்னணியில் நிற்பவர். தமிழ் படைப்பு வெளி குறித்து அவதானிப்புடன் பேசும் ஒரு சிலரில் முக்கியமானவர். அவரின் கவிதை குறித்த பார்வையை "இருண்மைக் கவிதைகளின் அரசியல்’’ எனும் நூல் மூலம்அறியலாம். "விதைக்குள் விருட்சம்’’ எனும் ஹைக்கூ தொகுப்பு அவரது மிக முக்கிய பங்களிப்பு .’விற்காத பிரதிகள் வழியே பேசுபவன்" அவரது அண்மைத்தொகுப்பு. "எந்த கூண்டிலும் சிக்காத இலக்கிய பறவை" எனும் காஞ்சிபுரம் இலக்கிய வட்டம் குறித்த அவரது நூலில் கவிதை குறித்த தன் பார்வையை இப்படி பதிவு செய்கிறார்.
' கவிதையில் என்ன சொல்லலாம்? எப்படி சொல்லலாம்? என்ற வரன்முறை ஏதுமில்லை.தன்கொள்கையை,நிலையை,உணர்வை,உணர்ச்சியை,ஏக்கங்களை,காதலை, காமத்தை, எதிர்கொள்ளும் சமூகத்தை இப்படி சூரியனுக்கு கீழே உள்ள எதையும் சொல்லலாம்'.
அவரது கவிதையின் பாடுபொருள்கள் அவரது நோக்கு நிலையை புலப்படுத்துகின்றன. அந்த நோக்குநிலை அவரது பலம். காலம் பற்றிய குறிப்பு 'சூழல்'கவிதையில் மறைமுகமாக இடம்பெற்றிருக்கிறது. மூன்று தலைமுறை புகைப்படங்கள் கவிதையில் இடம் பெறுகின்றன. முதல் தலைமுறையாகிய தாத்தாவின் புகைப்படத்தில் ''தாத்தா அமர்ந்து இருக்கிறார், பாட்டி நிற்கிறார்". அடுத்த புகைப்படத்தில் "அம்மாவும் அப்பாவும் சரிசமமாக" அமர்ந்திருக்கும் காட்சியும், அதற்கடுத்த புகைப்படத்தில் "நானும் என் மனைவியும் நின்று கொண்டிருக்கிறோம்" என்று அவர் எழுதும்போது தலைமுறைகளின் ஊடாக நிகழ்ந்த பண்பாட்டு மாற்றம் பதிவாகிறது.தாத்தா காலத்து ஆண்–பெண் இன வேறுபாடு அப்பா காலத்தில் தகர்ந்து போய் இருப்பதை காட்டுகிறது. ஆனால் என்னதான் மாற்றம் நிகழ்ந்து இருந்தாலும் குடும்பம் எனும் சட்டகத்துக்குள் வாழ்க்கைச் சக்கரம் ஓடுவதாக கவிதை முடிகிறது.குடும்பங்களுக்கு வெளியேயும்ஆகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை என்பததைக்குறிப்பால் உணர்த்துவதாகக் கருத இடமுண்டு.மேலும் புகைப்படம் என்பது காலத்தை நிலை நிறுத்தும் ஒரு ஊடகமாக இந்தக் கவிதையில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
'டாலர் வேலி' எனும் கவிதை வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் உறவினர் மரணங்களுக்கு கூட வர இயலாத நிலையை சுட்டிக்காட்டுகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் நிகழும் மரணங்களின் போது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வேலைகளில் இருக்கும் ஒருவன் வீடு திரும்ப நீண்டகால இடைவெளியாகிவிட்டது.
“வீடு
கல்லறையானபின்
உயர் பூச்செண்டு
வைத்து
வீடியோஎடுத்துக்கொள்ள
அனுப்பி வைத்தது
டாலர்வேலி.”
உறவுகளை எல்லாம் தொலைத்த பின் வீடியோ எடுத்துஎன்னசெய்வது?இழப்புகளை வீடியோவால் ஈடுசெய்ய முடியுமா என்ன?
கிராமத்து பின்னணியில் கால மாற்றத்தையும் வாழ்க்கை மாற்றத்தையும் ஒருசேர சொல்லும் கவிதை 'பூம் பூம் மாட்டுக்காரன்',. தன் வாழ்க்கை மாற்றத்தையும் பூம் பூம் மாட்டுக்காரன் வாழ்வின் சரிவையும் கவிஞர் கவிதையில் மிக வெற்றிகரமாக கையாள்கிறார். வாலிபப் பருவத்தில் அவர்பார்த்த பூம்பூம் மாட்டுக்காரன் தன் பை நிறைந்து மகிழ்வோடு வீடு திரும்பும் காட்சியும், கவிஞர் வேலை தேடும் காலங்களில் அவன் மாடு இறந்துவிட 'அவன் வறுமை பூப்பெய்திய து'என எழுதுகிறார். கடைசியாய் பணி நிறைவு பெற்று இவர் வீடு திரும்பியபோது அவன் மளிகை கடை ஒன்றில் இரவு காவலனாக நிற்கும் காட்சி வருகிறது. பூம் பூம் மாட்டுக்காரன் வாழ்க்கையில் காலம் விளையாடிய விளையாட்டுமிகத்துல்லியமாக படம்பிடித்துக் காட்டப்படுகிறது .'மனிதனாய்'கவிதை பூம் பூம் மாட்டுக்காரன் இடத்தில் பலூன்காரனை வைத்துப் பார்க்கிறது. ஆனால் கவிதையின் முடிவு மட்டும் வேறு.
புல்வெளி காமராஜன் கவிதைகளில்காலம்மனிதர்களைபகடைக்காய்களாக உருட்டுவது போல் தோன்றுகிறது. 'வெந்தவாழ்வு'கவிதை காலி மனையில் பட்டம்மாள் வைத்திருந்த இட்லி கடை ஆட்சி மாற்றத்தால் எப்படி இல்லாமல் போகிறது என்பதை விவரிக்கிறது. ஆட்சி மாற்றம் எப்படி வறியவர்களின் வாழ்க்கையை சிதைக்கிறது என்பதற்கு வெந்த வாழ்வு ஒரு சாட்சி.இட்லி கடைகள் இருந்த இடத்தில் நவநாகரீக உணவகங்கள் தோன்றுவதன் மூலம் அதிகாரவர்க்கத்தின் துணையோடு பெரு வணிகர்கள் கிராமங்களில் அன்றாட வாழ்க்கைப் பாடுகளை எதிர்கொள்ளும் பட்டம்மாக்கள் காலிமனைகளிலிருந்து வெளியேற்றப்படும் போது அவர்களின் வாழ்வு வெந்த வாழ்வுதான்.
இவற்றை தாண்டி
சமையலறையில்
வெளிநாட்டு
ஸ்டீமர் குக்கரில்
ஆவியாகிக் கொண்டிருக்கின்றன
“விலை உயர்ந்த
இட்லிகளும்
வீழ்ந்துவிட்ட
பட்டம்மாவின் வாழ்வும் “
“துரத்திவந்தன”,”இருந்தது”,”மாறியது”என இறந்தகாலத்தை குறிப்பிட்டபடி தொடங்கும் கவிதை “ஆவியாகிக் கொண்டிருக்கின்றன”எனும் நிகழ்காலக் கூற்றில் முடியும்போது பட்டமாக்களின் துயரங்கள் முடிவுறுவதில்லை எனும் எதார்த்தத்தை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
மனிதர்களை வைத்து மனிதர்களை பேசும் கவிதைகளைப் போல’நாற்காலி’ கவிதையில் நாற்காலியை முன்வைத்து மனித வாழ்வுக்கும் நாற்காலிக்குமானதொடர்பை பேசும்போது காலகாலமாய் நாற்காலியின் பயன்பாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். நாற்காலியின்பழமை சுட்டப்படும் போது இறந்த காலமும் இயைந்தபடி வருவது இயல்பு.
"பழைய நாற்காலி
…………………….
தாத்தாவின்
வாழ்வையும்
சுமந்த நாற்காலி
தாத்தாவின் அப்பா
என
பரம்பரையே
படுத்திருந்த
நாற்காலி"
என நாற்காலியின் பழம் பெருமைகளை பேசிவிட்டு,
"இன்றைக்கும்
அதை நான்
பார்த்து விட்டுதான்
வருகிறேன்
'ஏலக் கடையில்'
காலமாற்றத்தால் நம்மோடு புழங்கிய நாற்காலி, வாழ்வின் வளர்சிதை மாற்றங்களுக்கு சாட்சியாக இருந்த நாற்காலி இன்று ஏலக்கடையில் என மெல்லிய அதிர்வோடு கவிதை முடியும்போது ஒரு மெல்லிய வலி கவிஞர் உள்ளத்தைத் தாக்குவதை உணர முடிகிறது.நாற்காலியின் இடமாற்றம்'பழையன கழிதல்'என எடுத்துக்கொள்ள முடியவில்லை. இவரது சில கவிதைகளில் குறிப்பிட்ட கால அளவு இடம் பெறுகிறது. சிதிலமாகி கொண்டிருக்கும் ஒரு அம்மன் கோவிலை படிப்படியாக சித்தரிக்கும்'நம்பிக்கை'கவிதையில்,
“பத்து வருட முன்பு
பெய்த மழைக்கு
சுற்றுச்சுவரை இழந்திருந்தது.
…………….
குருட்டு பூசாரியும்
போன வருட தொடர் பேதியில்
செத்தே போனான்.”
“பத்து வருடம்”,”போன வருடம்” என இறந்த கால அளவுகள் குறிப்பிடும் கவிதை
“எல்லாம் இழந்தும்
இன்னும் நம்பிக்கையோடு
வீதியை பார்த்துக் கொண்டிருக்கிறாள்
‘அம்மன்’
என நிகழ்காலத்தில் நிறைவுறுகிறது.
நிகழ்காலம் நிதர்சனங்களை விமர்சனம் செய்யும் கவிதைகளில் ஒன்றான 'நாங்கள்'கவிதையில் சமகால கல்விச் சூழலை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கி நாம் பண்பாட்டுத் தளத்தை இழந்து நிற்பதற்கு மெக்காலேயே காரணம் எனக் கவிதை குற்றம் சாட்டுகிறது.கவிதை எங்கும் நிகழ் காலத்தை குறிக்கும் சொற்கள் நிறைந்து கிடக்கின்றன 'திட்டமிடாதவற்றில் திட்டமிடுபவள்' எனும் கவிதை, நிகழ்காலத்தை மறைமுகமாகக் காட்டும் அழகிய சொல்லோவியம் 'முரண்',"நிமிடங்களைத் . திருடுபவர்கள்" போன்ற கவிதைகளிலும் காலத்தின் இருப்பு பதிவாகி இருக்கிறது.
'விற்காத பிரதியின் வழியே பேசுபவன்' தொகுப்பில் இடம்பெற்ற பெரும்பாலான கவிதைகளில் எழுதப்பட்ட ஆண்டு கவிதையின் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது.1997 விருந்து தொடங்கி 2012 வரையிலான கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கவிதைகள் பொதுவான விஷயங்களை கவனப்படுத்துவதால் எழுதப்பட்ட ஆண்டிற்கும் கவிதைகளின் பாடுபொருளுக்குமான நேரடித் தொடர்பு புலப்படவில்லை.2009 -ல் வெளியான முள்ளிவாய்க்காலில் மரணித்த மனிதர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் 'அக(த்)தீ' கவிதை மட்டும் விதிவிலக்கு.
பல்வேறு கால இடைவெளிகளில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதைகளில் காலம் வெளிப்படையாகவும் உள்ளீடாகவும் இயங்கும் கவிதைகள் உண்டு. கவிதைகளில் இடம் பெறும் காலம் தன்னியல்பானது. வலிந்து திணிக்கப்பட்டதல்ல.
காலம் கவிதையின் பாடுபொருளைத் தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்று என்றாலும் பெரும்பாலான கவிதைகளில் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களின் குரலாகவே கவிஞரின் குரல் வெளிப்பட்டிருக்கிறது. அடித்தட்டு மக்களின் அவல வாழ்வு காலப்போக்கில் நிகழ்ந்த சமூக அரசியல் மாற்றங்களால்,அதிகாரம் இடம் பெயர்வதால் எப்படி மேலும் மேலும் அழிவுக்குள்ளாகிறது என்பதை சொல்லும் புல்வெளி காமராஜன் கவிதைகளை வாசிக்க நேரும் எவரும் தங்களை மறு வாசிப்பிற்கு படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.
-
நூல் பெயர்:’விற்காத பிரதியின் வழியே பேசுபவன்’
நூல் ஆசிரியர்:புல்வெளி காமராசன்
வாண்டர்லஸ்ட் பதிப்பகம்
காஞ்சிபுரம் ,2020
தொடர்புக்கு:9585667824
