கடந்து போன சந்திப்புகள்/ S L நாணு

                                            (6)

எங்கள் வீட்டுக்கு எம்பார் வந்தவுடன் எல்லோருக்கும் பரபரப்பு..

முன் அறையில் அக்கா நாற்காலியை இழுத்துப் போட (சோபாவெல்லாம் வசதிப்படாத காலம்).. அண்ணா மின் விசிறி ஸ்விட்சைத் தட்ட..

“வாங்கோ.. வாங்கோ”

அப்பாவும் அம்மாவும் வாய் நிறைய உபசாரம்..

பார்த்தசாரதி மாமா தான் அவரை அழைத்து வந்திருந்தார்..

அறிமுகப் படலங்களுக்குப் பிறகு..

“காப்பி சாப்பிடுவேள்யோ?”

அம்மா தயக்கத்துடன் கேட்க..

எம்பார் பலமாகச் சிரித்தார்..

“கும்பகோணத்துக்காரன் கிட்டக் கேட்கற கேள்வியா இது? ஆனா என்ன.. காப்பில எல்.கே.ஜி.லேர்ந்து டிகிரி வரை எல்லாத்தையும் பார்த்துட்டேன்.. அதனால காப்பி லேசா அப்படி இப்படி இருந்தாக் கூட ஏத்துக்க மாட்டேன்னு நாக்கு சண்டித் தனம் பண்ணும்..”

உடனே பார்த்தசாரதி மாமா..

“கவலைப் படாதேங்கோ.. இந்த வீட்டுல எப்பவும் டபுள் டிகிரி காப்பி தான்.. அதுக்கு நான் கேரண்டி”

அவர் சர்ட்டிபிகேட் கொடுத்தவுடன் எம்பார்..

“பலே பலே.. அப்படியா? பார்த்தசாரதிப் பெருமாளே சொல்லியாச்சு.. அப்புறம் என்ன.. காப்பிய கொண்டாங்கோ”

அம்மா சமையலறைக்கு விரைந்தாள்..

எங்கள் வீட்டில் அப்போதெல்லாம் தினசரி காப்பி தயாரிப்பது என்பது பெரிய யாகம் மாதிரி தான்..

அந்தக் காலத்தில் இந்தியா காப்பி போர்டின் விற்பனை பிரிவொன்று கல்கத்தா டெல்ஹௌஸி பகுதியில் இருந்தது.. காப்பி எஸ்டேட்டிலிருந்து தருவித்த தரமான காப்பிக் கொட்டையின் நேரிடை விற்பனை சகாய விலையில் அங்கு கிடைக்கும்.. அங்கிருந்து தான் அப்பா ஒவ்வொரு மாதமும் பீபரி, பிளாண்டேஷன் என்று இரண்டு வகை காப்பிக் கொட்டை வாங்கி வருவார்.. வெளிர் பச்சை நிறத்தில்.. உகும் காப்பிக் கொட்டை நிறத்தில் (காப்பிக் கொட்டை கலர் பட்டுச் சேலை அந்தக் காலத்தில் தாய்மார்களிடையே பிரபலம்) பாலிதின் பேக்கட்டில் முழித்துக் கொண்டு.. அதைப் பார்க்கவே அழகாக இருக்கும்.. அம்மா அதைத் தனித் தனியாக சம்புடத்தில் கொட்டுவாள்.. தினமும் அதிலிருந்து சரியான விகிதத்தில் கொட்டையை எடுத்துக் கலந்து அதை வாணலியில் கிடத்தி மிதமான அடுப்புச் சூட்டில் வறுப்பாள்.. அந்த வெளிர் பச்சை நிறம் கொஞ்சம் கொஞ்சமாக கருமை நிறமாக மாறும்.. அது ரொம்பவும் கருத்து விடக் கூடாது.. லேசான கருகலில்.. (அப்படி வாணலியில் வறுபடும் போது எழும் வாசம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்). அடுப்பை அணைத்து வாணலியிலிருக்கும் காப்பிக் கொட்டையை ஒரு தட்டில் கொட்டுவாள்.. லேசாக சூடு ஆறியவுடன் அதை ஒரு கிண்ணத்தில் மாற்றுவாள்..

கையால் இயக்கும் இயந்திரம் ஒன்று உண்டு (படத்தில் காண்க).. அதில் மேல் பக்கமாக வறுத்த காப்பிக் கொட்டையை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு கைப்பிடியை சுத்தினால் அது நன்றாக அரைபட்டு.. பிரெஷ்ஷான காப்பித்தூள் மறுபக்கம் இருக்கும் துவாரம் வழியாக வந்து விழும்.. இப்படி பிரெஷ்ஷாகத் தயாராகும் காப்பிப் பொடியில் போடப்படும் டிகாக்‌ஷனில் தான் அம்மா தினமும் காப்பி தயாரிப்பாள்.. அப்பாவுக்கு அது தான் பிடிக்கும்.. இயந்திரத்தில் காப்பிப் பொடி அரைக்கும் வேலை அக்கா, அண்ணா, நான் என்று முறைப்படி மாறி மாறி வரும்..

எம்பார் வருகிறார் என்று அப்பா தெரிவித்தவுடனேயே அம்மா இந்த காப்பி யாகத்துக்குத் தயாராகி விட்டாள்.. பொங்கிய பாலில் திக்கான டிகாக்‌ஷனைச் சேர்த்து மிதமாக சர்க்கரையும் கலந்து காப்பி விநியோகித்தாள்..

டபராவில் நுரையுடன் காப்பியின் நிறத்தைப் பார்த்தவுடனேயே எம்பாரின் கண்களில் பிரகாசம்.. அதை டம்ளரில் விட்டுப் பருகப் போனவர் அதன் நறுமணத்தில் தன்னையறியாமல் “ஆஹா” என்று மெய்மறந்தார்.. ஒரு மடக்கு குடித்தவர் கண்களை மூடிக் கொண்டார்.. பிறகு ஒவ்வொரு மடக்காகக் குடித்து முடித்து அம்மாவைப் பார்த்து..

“பிரமாதம்.. பெருமாள் சொன்னது வாஸ்தவமான பேச்சு.. இது டபுள் டிகிரி காப்பி தான்.. இதுவரை கும்பகோணம் டிகிரி காப்பின்னு தானே சொல்லுவா.. இனிமே திருநெல்வேலி டிகிரி காப்பி தான்.. பேஷ் பேஷ்”

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் போல் அம்மாவுக்கு ஒரே சந்தோஷம்..

அதிலிருந்து கல்கத்தாவிலிருந்த அந்த பத்து பன்னிரெண்டு நாட்களும் எம்பார் தினமும் காலையில் எங்கள் வீட்டுக்கு ஒரு விசிட் அடித்து விடுவார்..

”திருநெல்வேலி டிகிரி காப்பி கொண்டாம்மா” என்று உரிமையோடு கேட்பார்.. இதைத் தான் எம்பாரைப் பற்றிய இந்தப் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்..

”உங்க கூட வந்திருக்கறவாளோட நீங்க ஒரு நாளைக்கு நம்மாத்துல விருந்துக்கு வரணும்.. ஆச்சாரமாத் தான்..”

அம்மா முடிப்பதற்குள்..

“அதுக்கென்ன.. வந்துட்டாப் போச்சு.. வர ஞாயித்துக் கிழமை காலம்பர இங்க தான் தளிகை”

சாதாரணமாகவே தன் கையால் ஆசை ஆசையாகச் சமைத்து மற்றவர்களுக்கு விருந்தளிப்பதில் அம்மா ரொம்பவே சந்தோஷப்படுவாள்.. அதுவும் எம்பார் சுவாமிகளுக்கு விருந்தளிப்பதென்றால் சும்மாவா? அப்போதே என்ன மெனு என்று திட்டம் போட ஆரம்பித்து விட்டாள்..

இந்த சமயத்தில் தான்..

“ஏதோ உதவின்னு சொன்னேள்.. உதவிலாம் பண்ண முடியாது.. என்ன செய்யணம்னு உத்தரவு போடுங்கோ..”

“ஓ.. அதுவா?..”

அப்பா சொன்னதைக் கேட்டு நிதானமாக ஆரம்பித்தார் எம்பார்..

                                                 (சந்திப்பு தொடரும்) 

PC – From the Fb Archives of Smt Hema Badri, Grand daughter of Shri Embar Vijayaraghava chariar