
தன்னைத்தானே அடையாளம் கண்டு கொள்ளவோ அல்லது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவோ தான் எழுதுகிறோம். இந்த விஷயத்தில் எல்லோரையும் போலவே தான் நானும். முதலில் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். கால ஓட்டத்தில் எழுத்தின் சாயல் மாறி வேறிடத்திற்கு வந்துவிட்டேன். இதில் என்னுடைய ஆசிரியர் தி ஜானகிராமனின் பங்கும் இருக்கிறது. ஒரு வகையில் அவரை முன்மாதிரியாகக் கொண்டும் வளர்ந்திருக்கிறேன். அதன் பின் ஆசிரியராகப் பணியாற்றி என்னுடைய மாணவர்களான ஆதவன், இடைவெளி சம்பத் போன்ற மாணவர்களும் பெரிதாக வந்திருக்கிறார்கள். ஒருமுறை சைவ சித்தாந்தம் பதிப்பகம் வெளியிட்ட ‘சிலப்பதிகாரம்’ என்ற புத்தகத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கடைசியாக பதிப்பகத்தாரிடமே விசாரித்ததில் புத்தகம் “out of print” என்றார்கள். ஒரு நல்ல புத்தகத்தின் நிலை இதுவாகத் தான் இருக்கிறது. இது நடந்தது 1952-களில். அந்த காலங்களிலேயே நிலைமை அதுதான். இப்பொழுதும் மாறியதாகத் தெரியவில்லை.
முதுநிலை படிக்கும் பொழுது நகுலனின் அறைத்தோழனாக இருந்திருக்கிறேன். அவரின் மூலம் ஏராளமான ஆங்கில இலக்கிய நூல்கள் அறிமுகமாகியது. ஆங்கிலத்தில் வாசிக்கப் பழக்கப்பட்டதே அவரிடம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் படிக்கும் புத்தகங்களிலிருந்து குறிப்பெடுத்துக் கொள்வார். அதனைப் படித்திருக்கிறேன். பிற்பாடு அவருடைய படைப்புகளிலும் அந்த குறிப்புகளின் சாரத்தை உணர்ந்ததுண்டு. நகுலன் ஒரு தனிமை விரும்பி. கூட்டத்திலிருந்து விலகி இருக்கவே ஆசைப்படுவார். என்னை சந்திக்க ஏராளமான நண்பர்கள் வருவது அவருக்கு சங்கடமாக இருந்திருக்க வேண்டும். அடுத்த வருடம் அறையை மாற்றிக் கொண்டு சென்றுவிட்டார். அதன் பிறகு நாங்கள் சேர்ந்து வசித்ததில்லை.
டெல்லியில் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் புதிதாக நாடகத் துறை ஆரம்பித்த போது அவர்களுடன் இணைந்துகொண்டேன். நாடகத்துறையின் இயக்குனராக என்னை நியமித்தார்கள். எனக்கு மற்ற படைப்புகளில் கவனம் செலுத்துவதைவிட நாடகத்தில் செயல்படுவது பிடித்திருக்கிறது.
பரதன் என்றால் நடிகன் என்று அர்த்தம். அவனுக்கு நூறு பிள்ளைகள் தேவலோகத்தில் இருந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து நாடகம் போட்டார்கள். அதுவும் அரசியல் அங்கதத்துடன். அங்குள்ள ரிஷிகளுக்குக் கோவம் வந்தது. எப்பொழுதுமே ரிஷிகளுக்கு நகைச்சுவையை ரசிக்கத் தெரியாது. எல்லாவற்றையுமே தீவிரமாக அணுகக் கூடியவர்கள். எனவே நாடகம் போட்டவர்களுக்கு சாபம் கொடுத்தார்கள். “நீங்கள் பூலோகத்தில் பிறக்க வேண்டியது. அங்கே நீங்கள் பிராமணர்களாக பிறந்தாலும் அதற்கான மதிப்பு உங்களுக்கு இருக்காது” என்று சபித்தார்கள். கவனித்துப் பார்த்தால் இதிலுள்ள நுண்ணரசியல் உங்களுக்கு புலப்படும். ஆகவே அரசியல் இல்லாமல் இலக்கியம் இல்லை. எல்லாமே அரசியல் தான்.
இலக்கியத்திற்கு மொழி இல்லை. ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, ஜேர்மன் என்று எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். அவரவர் தாய் மொழியில் எழுதுவதே சிறப்பாக அமையும். ஒரு படைப்பை மொழிமாற்றம் செய்வதில் கூட பல பிரச்சனைகள் இருக்கிறது. ‘உச்சி வெயில்’ என்ற படமாக்கப்பட்ட என்னுடைய குறுநாவலான ‘மறுபடியும்’ என்ற படைப்பில் ஒரு வசனம் வரும். ஆங்கிலத்தில் மொழிமாற்றியபோது சரியாக வரவில்லை என்பது என்னுடைய அபிப்ராயம்.
“எந்தக் கடையில் பூ வாங்கினாளோ! அடுத்த வருஷமே வீட்டுக்கு வந்துட்டா…” – இந்த வார்த்தைகளை எந்த தொனியில் கூறினாலும், சொந்த மொழி கொடுக்கக் கூடிய அர்த்தத்தை வேறு எந்த மொழியாலும் கொடுக்க முடியாது.
ஒரு முறை தற்கால இலக்கியம் குறித்து ஆராய்ச்சி செய்ய ஒரு மாணவர் என்னிடம் வந்திருந்தார். அவரிடம் சில கேள்விகளைக் கேட்டேன். ஒன்றுக்கும் சரியான பதில் இல்லை. புதுமைப்பித்தனைப் பற்றியும், அவருடைய கதைகள் பற்றிய கேள்விகளுக்குக் கூட சரியான பதில் இல்லை.நவீன இலக்கியத்தில் புதுமைப்பித்தன் ஒரு முக்கியமான ஆளுமை. அவரை படித்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பிவிட்டேன். அதன் பிறகு அவர் என்னிடம் வரவில்லை. இறுதியில் அவர் தேர்வு செய்யப்பட்டு முனைவர் பட்டம் வாங்கிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். இது போல நிறைய பேர் வாங்கி இருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் பணியாற்றியபோதும் சில சுவாரஸ்யமான அனுபவங்கள் நேர்ந்ததுண்டு. வார்ஸா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதர்க்காக போலந்து சென்றேன். அப்பொழுது காலவரையற்ற ஸ்டிரைக் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் கூட கல்லூரிக்கு சென்று பாடம் நடத்தவில்லை. மாணவர்கள் என்னுடைய வீட்டிற்கே வந்து பாடம் நடத்துமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் ஏசுவின் தோழர்கள்.
- இந்திரா பார்த்தசாரதி
நன்றி: திட்டி வாசல் - முகநூலில் தகவல் : ஆர்.கந்தசாமி
