
( கரிச்சான் குஞ்சு பிறந்த நாள்)
இலக்கிய உலகில் படைப்பு மனத்தால் படைத்த படைப்பாளிகள் பல்லாயிரம் உண்டு. படைப்பு மனம் கொண்டவராயினும் படைப்பு ஆற்றல் மிக்கவராயினும் இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டு குருவிற்கு தாசனாக, சீடனாக இருந்து படைத்தவர்களும் உண்டு. பாரதிக்கு தாசனாக பாரதி தாசனும் பாரதி தாசனுக்கு தாசனாக சுப்ப ரத்தின தாசனும் (சுரதா) இருந்ததை இலக்கிய உலகம் நன்கறியும். தாசன்களைப் போல் பலதாசன்கள் இலக்கிய உலகில் உண்டு. கு. பா. ராஜகோபாலன் என்னும் கு. பா. ரா. கரிச்சான் என்னும் புனைப் பெயரில் எழுதினார். கு. பா. ரா. மீது கொண்ட அன்பினால் ஆர். நாராயண சாமி என்னும் இயற் பெயர் கொண்டவர் கரிச்சான் குஞ்சு என்னும் புனைப் பெயரில் எழுதினார். அவரின் முதல் புனைப் பெயர் ஏகாந்தி.
கு. பா. ரா. என்னும் பெயரிலேயே ஒரு கட்டுரைத் தொகுதியைத் தந்துள்ளார். அவரின் மற்றொரு கட்டுரைத் தொகுதி ‘ பாரதி தேடியதும் கண்டதும்’. நூற்று அறுபதுக்கும் மேற்பட்ட அவரின் சிறுகதைகள் பத்து தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இரண்டு குறுநாவல்கள், இரண்டு நாடகங்கள் எழுதி வெளியிட்ட கரிச்சான் குஞ்சுவின் ஒரே நாவல் ‘ பசித்த மானிடம்’. ஒரே நாவல் மூலமே நாவல் உலகில் ஒரு தனித்த இடத்தில் உள்ளார் கரிச்சான் குஞ்சு. 1978இல் வெளிவந்த பசித்த மானிடம் 2005இல் கவிஞர் ரவி சப்ரமணியன்
முயற்சியில் காலச் சுவடு மூலம் மறுபதிப்பு கண்டுள்ளது.
மானுடம் எப்போதும் பசித்தே கிடக்கும். பசி என்பது பொது. குடல் பசி மட்டுமல்ல குடல் பசியையும் தாண்டி மானிடத்திற்குள்ளன பல்வேறு பசிகள். பசிகளே மனிதர்களை இயக்குகின்றன. பசிகளைப் போக்கவே மனிதன் முயல்கிறான். பசியைப் போக்கிக் கொள்கிறான். பசி எதுவானாலும் வாழ்க்கைப் பசிக்கு மனிதர்கள் பலியாகிக் கொண்டே இருக்கிறார்கள். எழுத்தாளர் கரிச்சான் குஞ்சுவின் ‘ பசித்த மானிடம்’ நாவல் இதையே உணர்த்துகிறது. இந்நாவல் முழுக்க உடல் பசிக்கு இரை தேடுதல் குறித்தும் இரையாவது குறித்தும் பேசுகிறது. பணப்பசியைக் குறித்தும் பேசியுள்ளது.
கணேசன், கிட்டா என்னும் முக்கிய இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை வைத்தே நாவலை இயல்பாக நகர்த்திச் சென்றுள்ளார் கரிச்சான் குஞ்சு. கணேசன், கிட்டா என்னும் இருவரை வைத்து வெவ்வேறு திசைகளில் நாவல் பயணப் பட்டாலும் இருவரையும் ஒரு புள்ளியில் இணைத்து நாவலை முடிவுச் செய்துள்ளார். பசித்த மானுடம் மண்ணின் பசிக்கே இரையாகி விடும் என்னும் அறிவுரையுடன் பசித்த மானிடம் முற்றுப் பெறுகிறது.
கணேசன் பூணூல் போடப்பட்டு பிராமணன் ஆக்கப்பட்டவன். அவன் படிப்பதற்காகச் சென்ற இடத்தில் சிங்க ரவுத் கண்ணில் பட்டு அழைத்துச் சென்று அவனைத் தனியறையில் வைத்து நல்ல போஷாக்குடனும் செல்வ செழிப்புடனும் வளர்த்து வருகிறார். கணேசனுடன் சிங்க ரவுத் ஓரினப் புணர்ச்சிக் கொண்டிருந்ததே காரணம். அதற்கு முன்னர் வேறொரு பையனை வைத்திருந்ததாக கரிச்சான் குஞ்சு எழுதியுள்ளார். ” கணேசன் உடலைத் தவிர தனக்குச் சோறு தண்ணீர் கூட வேண்டாம் என்ற எல்லைக்குப் போய்விடடர் சிங்கம்” என்று சிங்கத்தின் பசியைக் காட்டியுள்ளார். 1980களில் வெளிவந்த நாவலிலேயே ஆசிரியர் ஓரினப் புணர்ச்சி குறித்து பேசியுள்ளது குறிக்கத் தக்கது. ஓரிணப் புணர்ச்சி குறித்து முதன் முதலில் எழுதியவர் குஞ்சுவாகவே இருக்கும் என்கிறார் கவிஞர் ரவி சுப்ரமணியன. ஓரினப் புணர்ச்சியாளர்கள் அப்போதே இருந்துள்ளனர் என்பதையும் உணரமுடிகிறது. இதுவும் மானிடப் பசிகளில் ஒன்றாகவே ஆசிரியர் பதிவுச் செய்துள்ளார்.
கணேசனுக்கு ஓரினப் புணர்ச்சி பிடிக்க வில்லை. பெண்ணுடம்பு தேவைப்படுகிறது. ” உங்ககிட்ட உண்மையைச் சொல்றேன். உங்ககிட்ட வெக்கமில்லாமை சொல்லலாமே. இப்ப எனக்கே காமவெறி தலைக்கு ஏறிவிட்டது. நான் இரவில் படும்பாடு எனக்குத் தெரியும். கிழவியோ குமரியோ பெண்களைப் பார்த்து விட்டால் எனக்கு ஆவேசம் வந்தது மாதிரி உடம்பெல்லாம் வெறி, சூடு ஏறிப்போறது” என வெளிப்படையாகவே சிங்க ரவுத்திடம் கூறி அவரின் உறவைத் துண்டித்துக் கொள்கிறான். ஒரினப்புணர்ச்சியிலிருந்து விடுபட்டுக் கொள்கிறான். கணேசனின் பசியைப் புரியச் செய்துள்ளார்.

வெளியேறிய கணேசனுக்கு சங்கரியைச் சந்திக்கும் வாய்ப்பு நேரிடுகிறது. சந்தித்த அன்றே இருவரின் பசிகளும் பரிமாறிக் கொள்கின்றன. ” ஒருவரை மற்றவர் தின்று பசியாறுவது போன்ற வேகத்துடன் தம் உடல்களையும் உணர்ச்சிகளையும் பரிமாறிக் கொண்டனர்” என்று கரிச்சான் குஞ்சு எழுதியுள்ளார். சங்கரியைத் திருமணம் செய்து கொண்டு ஜாகைச் செய்தாலும் அவள் உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். அங்கு மருத்துவம் பார்த்த லேடி டாக்டரின் பசிக்குப் பலியாகிறான் கணேசன். ” அவள் உடற்பசி அசரப்பசி ” என்றுவகரிச்சான் குஞ்சு எழுதியுள்ளார். கணேசனின் பசிக்கும் அவள் தேவைப்படுகிறாள். சங்கரி இறந்து விட லேடி டாக்டருடனே உறவு தொடர்கிறது. இருப்பினும் ” ரவுத்தின் சிறையை விடக் கொடிய சிறை இது” என்று உணர்கிறான். அச்சமயத்தில்தான் கணேசனுக்கு தொழு நோய் உண்டாகிறது. அதைத்தெரிந்த அவள் அவனைத்துரத்தி விடுகிறாள். தொழு நோயுடன் பயணித்த அவன் பார்வையற்ற கணவனை இழந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது. எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு குருடி என்றே எழுதியுள்ளார். தற்போது அவ்வாறு எழுத முடியாது. பார்வையற்ற பெண்ணின் பசியைப் போக்குகிறான். அவள் பெயர் கோதை. இதற்கிடையில் பெரிய சாமி என்பவன் கோதையின் பசியைத் தீர்த்துள்ளான்.
பார்வையற்ற கோதை தொழுநோய்க் காரன் என்று தெரிந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டாளோ என்று கணேசன் சந்தேகப் படும் போது கோதை கூறுவது உடல்பசியின் தன்மையைக் காட்டுகிறது. ” நான் அதைப் பத்தி வெத்தியாசமா நினைக்கவே இல்லை. எனக்கு இதுவே ஒண்ணும் கொறையாவும் தெரியலை. அதோட எனக்கிருந்த அஞ்சாறு வருசத்துப் பட்டினியே தெரியாம செஞ்சுட்டீங்க இந்த கொறைஞ்ச நாளுகளுக்குள்ளே” என பசியாறிய விதத்தைப் பகிர்ந்துள்ளாள் என கரிச்சான் குஞ்சு என எழுதிய விதம் பார்வையற்றவளுக்கும் உடல் பசி உள்ளது என்கிறது.
பசியெல்லாம் அடங்கிய பிறகு பிறரின் பசியெல்லாம் தீர்த்த பிறகு கணேசன் ஞானியாகி விடுகிறான். கணேசனை ஞானியாக்கியவர் பசுபதி என்னும் காவல் துறையார். உண்மையிலேயே பசுபதியே ஞானி போல் பேசுவதாக படுகிறது. கணேசனை முன் வைத்து ஒரு தொழுநோயாளி சமூகத்தில் எதிர் கொள்ளும் சிக்கல்களையும் படைப்பு மூலம் காட்டியுள்ளார்.
கணேசன் கதையை ஒரு பக்கம் கூறி வந்த கரிச்சான் குஞ்சு மற்றொரு பக்கம் கிட்டா கதையையும் கூறுகிறார். கிட்டாவின் கதை வேறு விதமாகச் செல்கிறது. கிட்டா பணக்காரன் ஆக வேண்டும் என்னும் கனவுடனே பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு பல்வேறு தொழில்கள் செய்து பணக்காரனாகுமாகி விடுகிறான். கிட்டா கதையில் பணப்பசியைக் முக்கியமாகக் கூறியுள்ளார். அவனிடத்திலும் உடல்பசி உண்டு.
கிட்டா வாழ்விலும் புகைக் கிளம்புகிறது. பகை வளர்கிறது. கிட்டா உறவுக் காரப் பெண் அம்முவை மணக்கிறான். அம்முவின் அக்கா மச்சி வேறு ஒருவனுக்கு வாழ்க்கைப் பட்டவளாக இருந்தாலும் அவளையும் வைத்துக் கொள்கிறான். கணேசனைப் பார்த்த பிறகு விவாதம் எழுந்து அம்மு கோபித்துச் செல்கிறாள். மாச்சியும் நிலையைத் தெரிவித்து விலகி விடலாம் என்கிறாள். ” மாமா நீ ரொம்பப் பெரிய பாவி, குலத்தையே கூட்டத்தையே கெடுத்து நாசமாக்கிட்ட. மன்னி, நான் எல்லலோருமே தீராத தீட்டுப் பட்டுட்டோம்” என்று மாச்சி பேசியதிலிருந்து அவர்களின் தொடர்பு நிலை புரிகிறது. தொடர்ந்து ” நானும் என் ஆத்துக்காரரும் வெளியே போறோம். சின்னதா ஒரு ஜாகை பாத்துக்கிறோம். இன்னியோட உனக்கும் பாவ விமோசனம். இத்தோட நிறுத்திக்கோ. ஐம்பதைத் தாண்டியாச்சு. இனிமே வெளையாட்டும் வேண்டாம், வெ னையும் வேண்டாம். என்னை நீ வெளையாட்டுக்குத் தான்னு தொடாம இருந்திருந்தா சத்தியமாச் சொல்றேன் நான் இப்படிச் சாக்கடையில் விழுந்திருக்கவே மாட்டன்” என்று மாச்சி பேசியதும் அவர்கள் தொடர்பை உறுதிப் படுத்துகிறது.
பசித்த மானிடம் என்னும் நாவல் ஐம்பதாண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட தாயினும் சமகால வாசிப்புக்குத் தடையாக இல்லை. மஹா சாந்தம், வரஷை, ஸ்பர்சம், போஷனை, ஜன்மம், ஜாகை போன்ற பழைய பயன்பாட்டுக் சொற்களே நாவல் ஐம்பதாண்டுகளுக்கு முந்தையது என்கிறது.
நாவல் முழுக்க பிராமனர்களைப் பற்றியே பேசுகிறது. பிராமனர்களைச் சுற்றியே நாவல் நகர்கிறது. பிராமனர்களுக்கு என்று வாழ்க்கை முறை இருந்து வந்தது. பிராமனர்களுக்கு என்று ஒரு தொழில் நெறி இருந்து வந்தது. ஆனால் இன்று நிலை மாறி விட்டது என்று பசித்த மானிடம் உணர்த்துகிறது. ” இப்பத்தான் ஐயருங்க செய்யாத தொழிலே இல்லையே. காலம் போற போக்கு. எங்கப்பாரு சொல்லிக்கிட்டே இருப்பாரு. கலி முத்தலிப் போனதுக்கு வேற அடையாளமே வேணாம். பார்ப்பானுங்க சோத்துக் கடை வைச்சிருக்கிறது ஒண்ணே போறுமுன்னு.. அது மகாபாவம்னு சொல்லுவாங்களாம். அவரு இப்ப இருந்தார்னா என்னா சொல்வாரோ, பார்ப்பான் குதிரை வண்டி வச்சிருக்கான், தாசி வீடே கதின்னு கிடக்கான், அவகிட்டே புள்ளை குட்டியெல்லாம் பெத்துக்கிறான். மாட்டு வியாபாரம் தரகுன்னா, இந்த ஊருல பார்ப்பானுங்க வைச்சதே சட்டமாயிடுச்சு. குடிக்கிறாங்க, கூத்தடிக்கிறாங்க, எனக்கு பிராம்மணங்கிட்டே எவ்வளவுக்கெவ்வளவு மரியாதையும் மதிப்பும் இருந்ததோ அத்தனையும் போயிடுச்சு. அவ்வளவுக்கவ்வளவு வெறுப்பும் கோபமும் வந்திடுச்சு ” என்று ஒரு சிறு பாத்திரத்தின் வாயிலாக பார்ப்பனர்கள் எந்தளவிற்கு தடம் மாறி உள்ளனர், தாழ்ந்துள்ளனர் கரிச்சான் குஞ்சு எழுதியுள்ளது பசித்த மானிடத்திற்கு முக்கியமானதாக உள்ளது.
கும்பகோணத்தை உரையாடலின் போது கும்போணம் என்று எழுதியுள்ளார். அழைத்து, பிழைத்து என்பதை ழகரத்தை மாற்றி ளகரத்தைப் போட்டு எழுதியுள்ளார். வழக்கில் உச்சரிக்கும் போது ழகரம் ளகரமாகி விடுமோ என்னும் எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
பொதுவாக ஒரு சில கதாபாத்திரங்களை மட்டுமே முதன்மையாக வைத்து குடும்பப் பின்னணியில் நாவல்கள் எழுதும் போக்கு ஒரு காலத்தில் இருந்தது என்பதற்குக் சான்றாக உள்ளது ‘ பசித்த மானிடம் சான்றாக உள்ளது.
ஒரே நாவலுடன் நிறுத்திக் கொண்டதால் கரிச்சான் குஞ்சுவிடம் பொது புத்தி இருந்துள்ளதைத் தவிர்க்க முடியவில்லை. அடுத்தடுத்த நாவலை எழுதும் எண்ணமிருந்தும் ஒற்றை நாவலுடனே நின்றுவிட்டது அவரின் எழுத்துப் பயணம். நாவலைக் கரிச்சான் குஞ்சு மாறி மாறி எழுதியிருந்தாலும் வாசகர்களுக்கு புரியும் வகையில் எழுதியுள்ளது சிறப்பு. நாவல் தஞ்சாவூர், கும்ப கோணம் என பயணித்து திருச்சியில் நிறைவடைகிறது. மனிதர்களின் அக உலகத்தையே தோலுரித்துக் காட்டினாலும் புற உலகத்திலேயே நாவலை படைத்துள்ளார். உடல் பசி மனிதர்களை எவ்வாறெல்லாம் செயல் பட வைக்கும் என்பதை பாத்திரங்கள் மூலம் உணர்த்தியுள்ளார் குஞ்சு. நாவல் எழுதப்பட்ட காலமான 1980கள் என்பது குடும்பங்களிலும் சமூகங்களிலும் மாற்றம் ஏற்பட்ட காலம். எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு அம்மாற்றங்களை உள்வாங்கியதன் விளைவாக பசித்த மானிடமாக உள்ளது. அனுபவங்களின் வெளிப்பாடாக உள்ளது. எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு தன் இலக்கிய வாழ்வில் ‘ பசித்த மானிடம்’ என்னும் ஒரேயொரு நாவலை படைத்திருந்தாலும் மற்ற நாவலாசிரியர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதுடன் அரை நூற்றாண்டுக் காலமாக அவருக்கான அடையாளமாக இன்றளவும் விளங்குகிறது. ” ‘பசித்த மானிடம்’ நாவலை மிகச் சிறந்த நாவலாகக் குறிப்பிட்டு இலக்கிய கூட்டங்களில் பேசியுள்ளார்” க. நா. சு. என கவிஞர் ரவி சப்ரமணியன்
‘ஆளுமைகள் தருணங்கள்’ தொகுப்பில் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் கரிச்சான் குஞ்சுவின் படைப்புப் பசி அவரை ‘ பசித்த மானிடம்’ நாவலைப் படைக்கச் செய்துள்ளது. வாசிப்புப் பசி வாசிக்கச் செய்துள்ளது. விமரிசனப் பசி விமர்சிக்கத் தூண்டியுள்ளது. மானுடம் என்றும் எப்போதும் பசித்தே கிடக்கும். பசித்த மானிடமே பயணித்தும் கொண்டிருக்கும்… அதுவரை பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சுவின் ‘ பசித்த மானிடம்’.
பொன். குமார்
