மார்ஸல் ப்ரூஸ்ட்../கோகுல் பிரசாத்

இன்று ஃபிரெஞ்சு எழுத்தாளர் மார்ஸல் ப்ரூஸ்ட்டின் பிறந்தநாள். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவர் தனது நாற்பதாவது வயதில்தான் எழுதத் தொடங்கினார். மத்திம வயதில் எழுதத் தொடங்கி மிகச்சிறந்த இலக்கிய ஆக்கங்களைப் படைத்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ப்ரூஸ்ட் அவர்களுள் ஒருவர்.

நாவலாசிரியனாகவே அறிமுகமாக வேண்டும் என்கிற விருப்புறுதி மார்சல் ப்ரூஸ்ட்டை ஆட்டிப்படைத்தது. இருபத்து நான்காவது வயதிலிருந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு தோல்விகளுக்குப் பிறகு தனது 38வது வயதில்தான் நாவலின் முதல் வரைவையே எழுதி முடித்தார். ஏழு தொகுதிகள் கொண்ட In Search of Lost Time காவியத்தின் இறுதி மூன்று பாகங்களைத் திருத்தம் செய்வதற்குள் செத்தும் போனார். அவை வெளியானதைப் பார்க்கக்கூட அவர் உயிருடன் இல்லை.

அதனால், ‘வந்தா ஹீரோங்க’ என அடம்பிடிக்கக்கூடாது. கதாநாயகன் ஆகும்வரை அமெரிக்க மாப்பிள்ளையாக சிறுகதைகள் எழுதவோ கதாநாயகனுக்கு நண்பனாக அல்லது சாகப் போகிற துணை நடிகைக்கு அண்ணனாகக் கவிதைகள் பாடவோ கூச்சப்பட வேண்டிய அவசியமில்லை. முயற்சி எடுப்பதே முக்கியம்.

ஆனால், கதாநாயகன் ஆகும்வரை ப்ரூஸ்ட்டின் நிலைமை இன்னமும் கவலைக்கிடமாக இருந்தது. அவர் ‘க்ளாப்’ அடித்துக்கொண்டிருந்தார். ஆமாம், பத்திரிகைகளுக்கு இலக்கிய விமர்சனங்கள் எழுதி அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டார். அதை மற்ற விமர்சகர்கள் குதறியெடுத்துவிட்டனர்.

*

‘In Search of Lost Time’ இரண்டாயிரம் பக்க நாவல் என்பதால் ஏகப்பட்ட கதாபாத்திரங்களும் துணைக்கதாபாத்திரங்களும் உடையது. ஆனால், அதன் மையக் கதாபாத்திரத்திற்கு (கதைசொல்லி- narrator) பெயரில்லை. இந்நாவலை ஃபிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த சி.கே.ஸ்காட் மான்கிரிஃப் என்பவர் ஒரு பிரிட்டிஷ் உளவாளி. இரண்டாம் உலகப் போரின் போது முசோலினியின் ஃபாசிஸ்ட் ஆட்சியை ஒற்றறிந்து கொண்டிருந்தவர். இந்நூலுக்கு ஸ்காட் வைத்த தலைப்பு ‘Remembrance of Things Past’. அதை ஷேக்ஸ்பியரின் கவிதை வரியிலிருந்து எடுத்தாண்டிருந்தார்.

‘When to the sessions of sweet silent thought
I summon up remembrance of things past,
I sigh the lack of many a thing I sought,
And with old woes new wail my dear time’s waste’

லூகி பிராண்டெல்லோவின் நாடகங்களையும் (Six Characters in Search of an Author) இவர்தான் மொழியாக்கம் செய்திருக்கிறார். 1992ம் ஆண்டு வரை ஸ்காட் வைத்த தலைப்பே புழக்கத்தில் இருந்தது. அதற்குப் பிறகுதான் அதை ‘In Search of Lost Time’ என D.J. Enright மாற்றினார். ஜேம்ஸ் ஜாய்ஸையும் வர்ஜினியா வூல்ஃபையும் ப்ரூஸ்ட்டின் நாவல் வெகுவாக பாதித்திருப்பதை அறியலாம். அதை அவர்களே பதிவும் செய்திருக்கிறார்கள். இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘உச்சக்கட்ட பாலியல் இன்பத்தைப் பல மணி நேரங்கள் தொடர்ச்சியாக அனுபவித்தது போலிருந்தது’ என்கிறார் வூல்ஃப்.

ப்ரூஸ்ட்டைப் பற்றியும் நாவல் பற்றியும் அவ்வப்போது சின்னச் சின்னக் குறிப்புகள் எழுதியிருக்கிறேன். முழுமையான விமர்சனம் எழுத வேண்டும். அதற்கு முன் நாவலின் சில நூறு பக்கங்களையேனும் மொழிபெயர்க்க வேண்டும்.

ப்ரூஸ்ட் கதையின் முதல் தமிழ் மொழியாக்கம் தமிழினியில்தான் வெளியானது. இதுவரை அவரது மூன்று சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (பின்னூட்டத்தில் இணைப்புகள்). என்றாவது ஒருநாள், ப்ரூஸ்ட் சிறப்பிதழ் வெளியிட வேண்டும் என்கிற விருப்பமும் உள்ளது.