கடந்து போன சந்திப்புகள் (2)/எஸ்.எல்.நாணு

திருநெல்வேலியிலிருந்து சென்னை செல்லும் ரயிலில் ஏறி நாங்கள் செட்டில் ஆகி விட்டோம்.. ரயிலில் அதிக கூட்டம் இருக்கவில்லை.. எதிரே இருந்த இரட்டை இருக்கை காலியாக இருந்தது.. எட்டிப் பார்த்ததில் அந்தப் பெட்டியிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் பயணிகள் அமர்ந்திருந்தார்கள்..

செல் போன் உதயமாகாத பொற்கால

மது.. அதனால் தனித் தனி உலகுக்குள் ஆழ்ந்து விடாமல் பதினைந்து நாள் கல்லிடைக் குறிச்சி அனுபவங்களை நாங்கள் எல்லோரும் ஆனந்தமாக அசைப் போட்டு விவாதித்துக் கொண்டிருந்தோம்.. அதுவும் அந்த தாமிரபரணி குளியல்..

“பேசாம தாமிரபரணியை கல்கத்தாவுக்கு பார்சல் பண்ணி அனுப்பிடணும்”

அண்ணா தன் ஆதங்கத்தைக் கூற..

“எதுக்குடா? கல்கத்தாவுல தான் வற்றாத நதி கங்கை இருக்காளே.. என்ன.. கல்லிடைக் குறிச்சி கிராமம்.. கல்கத்தா நகரம்.. அதனால இங்க தினம் தாமிரபரணி கரைக்குப் போன மாதிரி நம்மால கல்கத்தாவுல தினம் கங்கைக் கரைக்குப் போக முடியறதில்லை.. இதுவே கல்கத்தாவைச் சுத்தி கிராமத்துல இருக்கிறவங்க ஆனந்தமா தினம் கங்கா ஸ்நாநம் பண்ணிண்டு தான் இருக்கா”

அப்பா இதைச் சொன்னதும் அதிலிருந்த நிதர்சனம் புரிந்தது..

நாங்கள் கல்லிடைக்குறிச்சியிலிருந்து மதியமே கிளம்பி விட்டதால் எல்லோருக்கும் பசி..

உடனே அம்மா கொண்டு வந்திருந்த கட்டை அவிழ்த்தாள்..

கல்லிடைக்குறிச்சி என்றதும் எல்லோருக்கும் நினைவில் வருவது அப்பளம் தான்.. ஆனால் அங்கே முறுக்கு, தட்டை போன்ற ஐட்டங்களும் ரொம்பவே பிரசித்தம்.. அதுவும் மனோகரம்.. அப்பப்பா.. இன்றைய வாலிபர்களின் வார்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்.. “வேற லெவல்”.. சென்னையிலோ மற்ற ஊர்களிலோ கிடைக்கும் மனோகரம் ஓமக்குச்சி நடசிம்மனைப் போல் ஒல்லியாக.. எப்போது வேண்டுமானாலும் ஒடிந்து விழும் நிலமையில் இருக்கும்.. அதில் அடர்த்தியில்லாத வெல்லப் பாகு பட்டும் படாமலும் ஒட்டிக் கொண்டிருக்கும்.. ஆனால் கல்லிடைக்குறிச்சி மனோகரம்.. உசிலை மணியைப் போல் இருக்கும்.. சுண்டக் காய்ச்சிய வெல்லப் பாகில் முழுதுமாக முங்கிக் குளித்து அதை உடம்பு முழுவதும் இடைவெளி விடாமல் அப்பிக் கொண்டிருக்கும்.. ஒரு முறை அதை ருசித்தவர்கள் வாழ்க்கை முழுவதும் அதற்கு அடிமையாகி விடுவார்கள்.. அதிலும் திருநெல்வேலி பக்கத் திருமணங்களில் வைக்கப் படும் மனோகரம் பருப்புத் தேங்காய் கூட்டை அபகரிக்க ரொம்பவே போட்டி இருக்கும்..

விஷயத்துக்கு வருகிறேன்.. எங்களுக்குப் பசித்தவுடன் அம்மா கட்டை அவிழ்த்து முறுக்கு, தட்டை, மாலாடு (இது திருநெல்வேலி பக்கத்து இன்னொரு ஸ்பெஷாலிட்டி.. பொரிகடலையும் சக்கரையும் நெய்யும் முந்திரியும் இணைந்த அக்மார்க் ஜுகல்பந்தி..) மனோகரம் என்று விநியோகித்தாள்..

நாங்கள் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பக்கத்து கூப்பேயிலிருந்து ஒரு குரல் கேட்டது..

“இது தானே நம்ம சீட்.. பார்த்துப்பா.. ஜாக்ருதையா இறக்கி வை..”

அந்தக் குரலைக் கேட்டவுடன் எங்கள் எல்லோர் முகத்திலும் ஆச்சர்யம்..

முந்தைய அத்தியாயத்தின் துவக்கத்தில் பதிவு செய்திருந்தேனே..

“அம்மா அம்மா தாயே..
அகிலாண்டேஸ்வரி நீயே..
அன்னபூர்ணேஸ்வரி தாயே.. – நீயே
ஆதி பராசக்தி”

இந்தப் பாடல் எங்கள் செவிகளில் ரீங்காரமிட்டன..

அவரா? அவரா?

அண்ணா தான் முதலில் எழுந்து போய் எட்டிப் பார்த்தான்..

அவன் முகத்தில் பிரகாசம்..

“அவரேதான்”

உடனே நான் துள்ளிக் குதித்துப் போய் எட்டிப் பார்த்தேன்..

எல்.பி. இசைத்தட்டு அட்டையில் பார்த்த அதே முகம்.. ஆனந்த விகடனில் ஒரு முறை பிரசுரமாகியிருந்த அதே முகம்..

”அப்பா.. அவரே தான்”

இந்த முறை அப்பா எழுந்து வந்தார்..

எட்டிப் பார்க்கவில்லை.. நேரிடையாகவே அவரிடம் போனார்..

கூடவே நானும் ஒட்டிக் கொண்டேன்..

“நமஸ்காரம்”

அவர் நிமிர்ந்து பார்த்து சிரித்தார்..

நடுத்தர வயது.. தலையில் காவித் துணியை இழுத்துக் கட்டியிருந்தார்.. நெற்றியில் பட்டை விபூதி.. நடுவில் பழைய ஐம்பது காசு அளவுக்குக் குங்குமப் பொட்டு.. லேசான சந்தனக் கீற்று.. கறுப்பு கண்ணாடி.. காதில் கடுக்கன்.. கழுத்தில் உத்திராட்ச மாலை.. காவி நிறத்தில் சட்டை வேஷ்டி.. கையில் ஏதோ தாயத்துகள்.. தோளில் ஒரு காவி நிற ஜோல்னாப் பை..

“நமஸ்காரம்”

“நான் சகஸ்ரநாமன்.. கல்கத்தாவுல இருக்கேன்.. உங்க பக்தி கானத்தோட பரம ரசிகன்”

அவர் முகத்தில் மாறாத புன்னகை..

“உட்காருங்க”

அப்பா எதிர் சீட்டில் உட்கார நானும் தான்..

அண்ணாவும் அக்காவும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்..

உண்மையைச் சொல்லப் போனால் அந்த வயதில் எனக்கு அது நிஜமா இல்லை கனவா என்று புரியவில்லை..

மறுபடியும் அவர் முகத்தைப் பார்த்தேன்..

அவரே தான்..

பித்துக்குளி முருகதாஸ்!

                                                               (சந்திப்பு தொடரும்)

One Comment on “கடந்து போன சந்திப்புகள் (2)/எஸ்.எல்.நாணு”

Comments are closed.