மூன்று மணி வண்டி/இலத்தூர் கி. சங்கரநாராயணன்

மலையைக் குடைந்து செல்லும் இரயில் பாதை
அலை அலையாய்
எழில் வீசும் தேயிலைச் சோலை
கலைத்தோகை விரித்தாடும் அழகுக்கிராமம்
மயில் பீலிக் கண்ணனும்
கொள்வான் பெருமோகம்

நாய்க்குடைக் கணக்காய்
பாய்முடை வீடுகள்
ஆக்கூட்டம் மேய்க்கும்
சேய்க்கூட்டம் அதிகம்
ஓய்ந்தறியாதோடும்
தெண்ணீரோடை
பாய்ந்தெதிர் கொள்ளும்
நறுமணப் பூவாடை

கைப்பிடி கிராமத்தில்
மகப்பேறு விழுக்காடு
உச்சப்படி எட்டியதெப்படி ?
வியந்தது அரசு!
செப்படி வித்தையோ? குடும்பக் கட்டுப்பாடு வீரியம் தப்படி கண்டதெப்படி ? குமுறினார் ஆட்சியர்!

மூன்று மணி இரயில் ஒன்றால்
ஈன்று பெருத்ததாம் அந்தக் கிராமம்!
சான்று வேண்டினார்
கட்டில்லாச் சனனத்திற்கு
சென்று விரைந்தனர் உடன் கவனத்திற்கு

நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து
படாத பாடுபட்டு
பெற்றார் ரயில் வசதி
ஆடிவரும் வண்டி கண்டு உவந்தனர் நன்று
ஓடிவரும் நேரமோ காலை மணி மூன்று!

பாதை ஒதுங்கும் விலங்குகள் விலக்க
காத தூரமிருந்தே
ஒலிப்பான் ஒலிக்கும்
துரித வண்டி போகும் நேரம்
துயில்வோரை எழுப்பிப் போகும்!

கணப்பொழுது கடக்கும் இரயில்-காமக்
கணப்பைக் கூட்டித்
தந்தது மையல்
வண்டி சுரங்கம் கடந்த கணமே
கிண்டிக் குதிரையை விஞ்சுமுடல் வேகம்

தூக்கம் கலைந்தபின் வந்ததோ பெரும்
ஏக்கம்தான் காமன் தாக்கம் தான்
ஆக்கபூர்வ வேலையோ ஏதுமிலை
தேக்கமிலா மகப்பேறே
பெரும்வேலை!

புகைவண்டி சில்மிஷம்
புரிந்தது அரசுக்கு
மிக அவசர மாற்றம் கண்டது இரயில் நேரம்
குகை நுழையும் புதியநேரம் காலைமணி பத்து
உவகையால் உறங்குகிறார் தம்பதிகள்
கருத்தொருமித்து.