கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

                                             (5)

ஆம்.. உங்களில் பலர் குறிப்பிட்டது போல் முந்தய அத்தியாயத்தில் நான் பதிவு செய்திருந்தது ஹரிகதா மேதை ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரின் புகைப் படம் தான்.. இன்னமும் அவர் இத்தனை பேருடைய மனதில் நிலைத்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது அந்த மேதையின் ஆளுமையும் வித்வத்தும் வியக்க வைக்கிறது..

மஹான் ஸ்ரீ ராமானுஜரின் பூர்வாஸ்ரம உறவினர் எம்பார் அவர்களின் வம்சாவளியில் வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் எம்பார் விஜயராகவாச்சாரியார்.. இவருடைய தாத்தா எம்பார் வரதாச்சாரியார் சாஸ்திரங்கள் கற்றரிந்ததோடு அருமையான குரல் வளமும் பெற்றிருந்தார்.. தமிழ், சம்ஸ்க்ருதம், தெலுங்கு என்று எல்லா மொழிகளிலும் பாடும் புலமை பெற்றிருந்தார்.. எம்பாரின் தகப்பனார் ஸ்ரீ ஸ்ரீரங்காச்சாரியார் ஹரிகதா நிபுணர்.. தண்டபாணி தீட்சதரின் சிஷ்யனாக வேதாந்தம் மற்றும் சாகித்யத்தில் இரட்டை சிரோண்மணியானார் எம்பார் விஜயராகவாச்-சாரியார்.. தழிம் இலக்கியம் மற்றும் இலக்கணத்தில் பட்டதாரியானார்.. கூடவே இவருடைய தந்தையிடம் இசை மற்றும் ஹரிகதா கலையைக் கற்றுக் கொண்டார்.. ஹரிகதைக்குத் தேவையாகக் கருதப் பட்ட தெலுங்கு மற்றும் மராத்தி மொழியையும் கற்றுக் கொண்டார்.. ஹிந்தியும் சேர்ந்துக் கொண்டது..

அறுபது வருடங்களுக்கு மேல் ஹரிகதா காலட்சே நிகழ்ச்சிகளை அளித்த எம்பார் இந்தியா மட்டுமல்ல அயல்நாடுகளிலும் ஹரிகதா நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்.. தன் முதல் சிங்கப்பூர் விஜயத்தின் போது கிடைத்த சன்மானம் முழுவதையும் திருவாரூர் கோவில் தேர் மற்றும் தெப்பக் குளம் சீரமைப்புப் பணிகளுக்கு அளித்து விட்டார.. மலேசியா பெட்டலிங்ஜயாவில் இருக்கும் முருகன் கோவிலுக்கு நிறைய நன்கொடை அளித்திருக்கிறார்..

தியாகராஜ சரித்திரத்தை தொடர்ந்து ஐந்து நாட்கள் ஹரிகதையாக பிரவசனம் செய்த பாகவதர்களில் இவர் ஒரு முன்னோடி.. தீவிற வைணவராக இருந்தாலும் சைவ இலக்கிய இதிகாசங்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்தார்..

ஒரு சாமான்யனும் புரிந்து கொள்ளும் விதத்தில் அவருடைய ஹரிகதை அமைந்திருக்கும்.. இது தான் எம்பார் அவர்களின் ஹரிகதையின் சிறப்பு.. அப்பப்போதைய உலக நடப்புகளையும் புத்திசாலித் தனமாக இணைத்து விடுவார்.. அதோடு நகைச்சுவை இவருக்குக் கை வந்த கலை.. ஆக மொத்தம் இவருடைய ஹரிகதை ஆன்மீகம் கலந்த ஜனரஞ்சகம்..

அவருடைய தம்பி எம்பார் ரகுநாதன் தான் பின் பாட்டு.. வழக்கமாக கடைசி தம்பி லெஷ்மி நரசிம்மன் தான் மிருதங்கம் பக்கவாத்தியம்.. ஆனால் அந்த கல்கத்தா விஜயத்தில் அவர் வரவில்லை என்று நினைக்கிறேன்..

சரி.. நம்ம விஷயத்துக்கு வருவோம்..

எம்பார் விஜயராகவாச்சாரியார் தன் குழுவுடன் பார்த்தசாரதி மாமாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்..

சற்றைக்கெல்லாம் பார்த்தசாரதி மாவின் வடக்கத்திய பணியாள் அப்பாவைத் தேடி வந்தான்..

“சாப் உங்களை உடனே கூட்டி வரச் சொன்னார்”

அப்பா கிளம்பினார்.. கூடவே நானும்..

பார்த்தசாரதி மாமா வீட்டுக்குள் நுழையும் போதே பலமான பேச்சுக் குரல்.. சிரிப்புக் குரல்..

ஹால் சோபாவில் அவர் உட்கார்ந்திருந்தார்..

பரந்த சிரித்த முகம்.. கொஞ்சம் அடர்த்தியான முடிக்கப்பட்ட குடுமி.. அழகான கண்கள்.. மூக்குக் கண்ணாடி.. நெற்றியில் நாமம்.. காதில் கடுக்கன்.. பஞ்சகச்சம்.. அங்கவஸ்திரம்.. பார்த்தவுடன் நம்மைத் தாக்கும் தெய்வீகம்.. அவர் தான் எம்பார்..

“வாங்கோ.. சகஸ்ரநாமன் தானே?”

அவர் கேட்டவுடன் அப்பாவுக்கு ஆச்சர்யம்..

“ஸ்டேஷன்லேர்ந்து வரும்போதே உம்மைப் பத்தி எல்லாம் சொல்லிட்டேன்”

பார்த்தசாரதி மாமாவின் விளக்கம்..

“உம்ம பையனா?”

என்னைப் பார்த்தார்..

“ஆமா.. ரெண்டாவது பையன்”

“என்ன படிக்கறான்?”

சொன்னார்..

“உங்க டீச்சரெல்லாம் ஒழுங்கா பாடம் எடுக்கறாளா?”

அவர் கேட்டது சத்தியமாக எனக்குப் புரியவில்லை.. ஆனால் மற்றவர்கள் சிரித்தார்கள்.. அந்த இயல்பான நகைச்சுவை ரொம்ப காலத்துக்குப் பிறகு தான் எனக்கு உரைத்தது..

“நிறைய கச்சேரி கலெக்‌ஷன்லாம் வெச்சிருக்கீராம்..?”

அப்பாவிடம் கேட்டார்..

“ஆமா.. மதுரை மணி, செம்மங்குடி, ஜி,என்,பி, செம்பை..”

“பலே பலே.. பெரிய சுரங்கமே இருக்கும் போலருக்கே..”

“நீங்க எங்க வீட்டுக்கு வரணும்”

“வராம? என்னமோத் தெரியலை.. குகனோட ஐவரானோம்னு ராமாயணத்துல சொல்லுவாளே.. அதே மாதிரி நீரும் பார்த்தசாரதியும் என்னோட ஐக்கியமாயிட்ட மாதிரி தோணறது.. எல்லாம் எங்க ரங்கராஜன் சித்தம்.. நாளைக்குத் தானே ஹரிகதை ஆரம்பம்?.. இன்னிக்கே உம்ம வீட்டுக்கு வரேன்”

இவ்வளவு பிரபலமானவர்.. கொஞ்சம் கூட தயக்கம் காட்டாமல் அழைத்தவுடன் வீட்டுக்கு வர சம்மதிப்பார் என்று அப்பா எதிர்பார்க்கவில்லை..

“ரொம்ப சந்தோஷம்”

“உம்மால எனக்கு ஒரு ஒத்தாசை ஆகணும்.. அதை உம்ம வீட்டுக்கு வந்து சொல்றேன்”

தன்னிடம் என்ன உதவி கேட்கப் போகிறார் என்று புரியாமல் அப்பாவுக்கு ரொம்பவே குழப்பம்.. ஆனால் கேட்கவில்லை..

அன்று மாலையே எம்பார் எங்கள் வீட்டுக்கு வந்தார்..

                                                              (சந்திப்பு தொடரும்)

One Comment on “கடந்து போன சந்திப்புகள்/S L நாணு”

Comments are closed.