கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

                                          (11)

சடாரென்று ஏற்பட்டது அந்த சந்திப்பு..

எதிர்பார்க்காத இடத்தில்.. எதிர்பார்க்காத தருணத்தில்..

ஆனால் அவர் திடீரென்று வந்தவுடன் அந்த இடமே களை கட்டி விட்டது.. அந்த இடத்தில் இருந்தவர்களின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல் புத்துணர்ச்சி.. பரபரப்பு..

“போறும்.. இப்படி ஜிலேபி சுத்தறதை விட்டுட்டு மேட்டருக்கு வரியா?”

யாரு.. உங்க குரல் தானே?..

ஏதோ கொஞ்சம் பில்ட்-அப் கொடுக்கலாமேன்னு..

வேண்டாம்.. நேரிடையாக விஷயத்துக்கு வருகிறேன்..

1993ம் வருடம்..

நான் சென்னை தொலைபேசியில் வேலை பார்த்தது இந்த உலகத்துக்கே.. சரி.. சரி.. என் அன்பர்கள் வட்டத்துக்கு தெரிந்த விஷயம் தான்.. அப்ப அது பி.எஸ்.என்.எல். கிடையாது. டிபார்ட்மெண்ட் ஆப் டெலிகம்யூனிகேஷன்.. (DOT).

நான் கேபிள் திட்டப் பிரிவில் பணியில் இருந்தேன்.. நுங்கம்பாக்கம் குஷ்குமார் ரோடில்.. அதான் ஹேட்டோஸ் கிளப் இருக்கிறதே.. அந்த சந்தின் துவக்கத்தில் விஸ்வரூபியாக.. கம்பீரமாக காட்சி தரும் ஏழடுக்குக் கட்டிடம் தான்.. அங்கு தான் எங்கள் அலுவலகம் இருந்தது..

அந்த சமயத்தில் எங்களது தென் கிழக்கு மண்டலத்தின் கமர்ஷியல் பிரிவில் ஏதோ காரணத்தினால் சில வேலைகள் தேக்கம் கண்டிருந்தது.. அதை உடனடியாக முடித்துக் கொடுக்க எங்கள் பிரிவிலிருந்து என்னையும் என் மேலதிகாரி திரு. ஆராவமுதனையும் இரண்டு வாரங்களுக்கு டெபுடே-ஷனில் நிர்வாகம் அங்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்திருந்தது..

தென் கிழக்கு மண்டல அலுவலகம் அப்போது நந்தனம் ஜி.ஆர். காம்ப்ளெக்ஸில் இயங்கிக் கொண்டிருந்தது.. அன்றைய உதவிப் பொது மேலாளர் திரு. பத்மநாபன் என்று நினைக்கிறேன்..

நானும் ஆராவமுதன் சாரும் உத்தரவில் குறிப்பிட்ட நாளில் தென் கிழக்கு மண்டல அலுவலகம் சென்று திரு. பத்மநாபனிடம் ரிபோர்ட் செய்தோம்.. அவருடையது விஸ்தாரமான அறை.. கும்மென்று ஏஸி காற்று தாக்கியது..

தநல்ல சிவப்பாக.. கரு கரு முடியுடன்.. மீசையில்லா முகத்துடன்.. கண்ணாடி அணிந்து வாயில் புன்னகையுடன் சற்று ஒல்லியான பத்மநாபன் சார் எங்களை வரவேற்றார்.. கமர்ஷியல் அதிகாரியும் (பெயர் நினைவில் சிக்கவில்லை) இணைந்து கொண்டார்.. பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின்.. முடிக்க வேண்டிய பணிகளைப் பற்றி பத்மநாபன் சாரும் கமர்ஷியல் அதிகாரியும் எங்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தனர்.. அதை எப்படி செய்ய வேண்டும் என்றும் விவரித்துக் கொண்டிருக்க.. ரொம்பவே சீரியஸாகக் கழிந்த தருணங்கள்..

அப்போது சட்டென்று அறைக் கதவு திறக்கப் பட்டது..

கணக்கதிகாரியும் இளநிலை இஞ்சினியரும் பதட்டமாக உள்ளே வந்து..

“சார்.. யாரு வந்திருக்காங்கன்னு பாருங்க”

எங்கள் எல்லோர் பார்வையும் ஆவலோடு நோக்க..

“ஹாய் ஹாய்”

என்று தன் வழக்கமான ஸ்டைலில் சிரித்தபடி அவர் உள்ளே வந்தார்..

அதிக உயரமில்லை.. கொஞ்சம் நீளமான முகம்.. வலது பக்கமாக படிய வாரப் பட்ட முடி.. அடர்த்தியான மீசை.. டக் செய்யப் பட்ட முழுக்கைச் சட்டை.. காலில் பள பள ஷூ..

அவரைப் பார்த்தவுடன் நான் முதலில் சொன்னது போல் அங்கிருந்தவர்கள் உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் புத்துணர்ச்சி.. பரபரப்பு..

“வாங்க சார்.. வாங்க..”

பத்மநாபன் சார் தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து கை குலுக்கி வர வேற்றார்.. நானும் ஆராவமுதன் சாரும் கூட எழுந்து விட்டோம்..

“உட்காருங்க”

பத்மநாபன் சார் சொன்னதும் அவர் மூக்கு உறிஞ்சியபடி உட்கார்ந்தார்..

இப்போது தெரிந்திருக்குமே நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று..

இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் அதிரடி ஆட்டத்துக்கான முன்னோடி கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்கள் தான்..

“ஸாரி.. சொல்லாம திடீர்னு வந்திட்டேன்”

நாற்காலியில் சாய்ந்தபடி அவர்..

“நோ நோ.. இட் இஸ் அவர் ப்ளெஷர்”

நாங்களும் அவரைச் சுற்றி உட்கார்ந்துக் கொண்டோம்..

“ஓய்வுக்கு அப்புறம் எப்படி இருக்கு?”

பத்மநாபன் சார் ஆரம்பித்தார்..

“ஓய்வா? நோ நோ.. ஸ்போர்ட்ஸ் மேனுக்கு ஓய்வே கிடையாது.. ஏதாவது விதத்துல அவன் ஆட்டத்தோட லிங்க் ஆயிருப்பான்.. நானும் தான்”

1981ல் ஆரம்பித்து 1992 வரையிலான அவருடைய கிரிக்கெட் சகாப்தம் என்னைப் பொறுத்தவரை தீபாவளி பட்டாசு தான்.. ஸ்ரீகாந்த் பேட் செய்ய சூரியனைப் பார்த்தபடி மூக்கை உறிஞ்சியபடி மைதானத்துக்குள் வந்தாலே பார்வையாளர்கள் உற்சாகமாகி விடுவார்கள்.. அவர் ஆட்டத்தைப் பார்க்க டிவி பெட்டி முன் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்த தினங்களெல்லாம் என் நினைவுக்கு வந்தன..

“நீங்க இஞ்சினியரிங் தானே பண்ணினீங்க?”

அப்பாவியாகக் கேட்டேன்..

ஸ்ரீகாந்த் திரும்பி என்னைப் பார்த்தார்..

                                                               (சந்திப்பு தொடரும்)