
“சரி.. எங்கிட்ட என்ன தெரிஞ்சுக்கணும்?”
ராஜம் கிருஷ்ணன் கேட்டவுடன் சீதாலெஷ்மி மெதுவாக ஆரம்பித்தாள்..
“ரெண்டு விஷயம்.. ஒண்ணு.. செல்லம்மா பாரதியைப் பத்தின உங்க புத்தகம்.. என்னோட ஆய்வுல உங்க கண்ணோட்டம் ரொம்ப உதவியா இருக்கும்.. ரெண்டாவது கரிப்பு மணிகள் பத்தி..”
இதைக் கேட்டு ராஜம் கிருஷ்ணன் லேசாக சிரித்தார்..
“செல்லம்மாவைப் பத்தின புத்தகம்.. அது என்னோட கண்ணோட்டம்.. என்னைப் பொறுத்தவரை கடைசி வரை செல்லம்மா சரியாப் புரிந்துக் கொள்ளப் படலை.. அவளுடைய பல உணர்வுகள் வெளிப்படவே இல்லை.. அதுக்கு வாய்ப்பும் கொடுக்கப் படலை.. அதைத் தான் சொல்லியிருந்தேன்.. ஆனா அதுக்கே நிறைய எதிர்ப்பு.. அதனால அதைப் பத்தி மேல பேசி இன்னும் பிரச்சனையை வளர்த்துக்க நான் விரும்பலை”
இதைச் சொன்னபோது அவர் முகத்தில் கொஞ்சம் வருத்தம் தெரிந்தது..
அடுத்த சில கணங்கள் சிந்தனையுடன் மௌனம்..
அந்த மௌனத்தில் பெண்மையின் சீற்றம்.. பெண்மையின் உணர்வுகள் மதிக்கப் படவேண்டும் என்பதற்கான போராட்டம்.. ஆனால் அதை முழுதும் செயல்படுத்த முடியாத இயலாமை.. எல்லாமே பளிச்சிட்டது..
மறுபடியும் இயல்புக்கு வந்தார்..
”ம்.. கரிப்பு மணிகள்.. உனக்குத் தெரியுமா? உண்மைல கரிப்பு மணிகள் நாவல் எழுதற எண்ணமே இல்லை.. மீனவர்கள் வாழ்க்கைப் பிரச்சனையை மையமா வெச்சு ஒரு நாவல் எழுதணம்னு யோசிச்சேன்.. எப்பவுமே நான் எழுத நினைக்கிற கதை நடக்கற களத்துக்குப் போய் அந்த மக்களைப் பத்தி.. அவங்க வாழ்க்கை முறையைப் பத்தி.. தரத்தைப் பத்தி.. நேரிடையா விவரம் சேகரிச்சு எழுதறது தான் என் பழக்கம்.. ஆரம்பத்துலேர்ந்தே இப்படித்தான்..”
மீண்டும் யோசனை..
“முசிறில பொறந்தேன்.. அந்தக் காலக் கட்டம்.. முறையா பள்ளிக்குப் போய் படிக்க முடியலை.. விவரம் தெரியறதுக்கு முன்னாலயே பதினஞ்சு வயசுல கல்யாணம்.. ஆனா இவர் தான் எனக்கு முழு ஆதரவு”
சற்று தள்ளி உட்கார்ந்திருக்கும் கணவரைப் பார்க்கிறார்.. கண்களில் ஒரு வித பெருமிதம்..
“இவர் தயவால நிறைய புத்தகங்கள் படிச்சேன்.. அப்புறம் தான் எனக்கே எழுதணங்கற எண்ணம் வந்தது.. இவர் மின் பொறியாளர்.. அரசு உத்யோகம்.. அப்பப்ப இடமாற்றம் உண்டு.. அவர் கூட நானும் போவேன்”
குந்தா அணைக்கட்டுப் பகுதியில் படகர் இன மக்களையும் அங்கு அவர் முதல் நாவலுக்கு சிக்கிய கதாநாயகனையும் பற்றிச் சொன்னார்.. (இரா முருகன் அவர்களின் பதிவிலும் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்).
மீண்டும் சிறிது மௌனம்.. சிந்தனை..
“ஆ.. என்ன சொல்லிட்டிருந்தேன்.. கரிப்பு மணிகள்.. அதைப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்.. மீனவர்கள் வாழ்க்கைப் பிரச்சனையை வெச்சு ஒரு நாவல் எழுதணம்னு எண்ணம் வந்தது.. தூத்துக்குடிலேர்ந்து கன்னியாகுமரி வரை இருக்கிற மீனவர்களோட வாழ்க்கையை.. அவங்க சந்திக்கிற பிரச்சனைகளை நேரிடையா தெரிஞ்சுக்கணும்னு தூத்துக்குடில தங்கி அவங்க கூடவே வாழ்ந்தேன்.. கிட்டத்தட்ட மூணு மாசம்.. நடுவுல ஒரு இலக்கிய கூட்டம்.. அதுல எழுத்தாளர் சிட்டி சாரை சந்திச்சு பேசிட்டிருந்தேன்.. அப்ப அவர் ஒரு கோரிக்கை வெச்சார்.. நீங்க தூத்துக்குடில தானே தங்கியிருக்கீங்க? இந்தப் பகுதில நீங்க இன்னும் ஓரு களத்தை ஆராயணும். மனுஷனுக்கு மட்டுமில்லை, விலங்கினங்களுக்கும் கூட உயிர் வாழ அவசியமான ஓரு பொருள் உப்பு.. உப்பு மனையை வெச்சு நீங்க ஒரு நாவல் எழுதணம்.. அவர் கொடுத்த பொறில பிறந்தது தான் கரிப்பு மணிகள்”
தூத்துக்குடியில் அவர் விவரம் சேகரிக்க மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி விரிவாகச் சொன்னார்..
“தூத்துக்குடில மீனவர்களோடயும்.. அந்த ஜனங்களோடயும் பழகிப் பழகி.. அதுலேர்ந்து மீண்டு வர கொஞ்ச நாளாச்சு”
சீதாலெஷ்மியின் முகத்தில் சந்தோஷம் நிரம்பி வழிந்தது..
காரணம் ஆய்வுக்கான பல விவரங்கள் கிடைத்த மகிழ்ச்சி தான்..
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம்..
“ரொம்ப நன்றி.. அப்ப நாங்க கிளம்பறோம்”
சீதாலெஷ்மி சொன்னவுடன்..
“கிளம்பறதா? அவ்வளவு தூரத்துலேர்ந்து வந்திருக்கீங்க.. ஏதாவது சாப்பிட்டுத் தான் போகணும்”
அதுவரை அறிவுப் பசியைப் போக்கியவர் உடனே சிற்றுண்டி (தோசை, தேங்காய் சட்னி என்று நூலிழை ஞாபகம்), காப்பி தயார் செய்து எங்கள் வயிற்றுப் பசியையும் போக்கினார்..
வீடு திரும்பிய சீதாலெஷ்மிக்கு அப்போதே முனைவர் பட்டம் வாங்கிய திருப்தி..
ஆனால் ஒரு பாமரனாகவே எனக்கு அந்த சந்திப்பு வாய்த்தது..
சில வருடங்கள் கழித்து ராஜம் கிருஷ்ணன் அவர்களைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்ட பிறகு தான் எப்பேர்பட்ட ஆளுமையை சந்தித்திருக்கிறோம் என்று எனக்கு உரைத்தது..
ராஜம் கிருஷ்ணன் அவர்களின் இறுதி கால போராட்டங்களைப் பற்றி நினைக்கவோ அல்லது பதிவு செய்யவோ எனக்கு விருப்பமில்லை..
காரணம்.. என் மனதில் நான் அன்று சந்தித்த நிறைவான.. சந்தோஷமான ராஜம் கிருஷ்ணன் தான் கம்பீரமாக நிற்கிறார்..
என்றும் அவர் தான் நிலைத்திருப்பார்..
(சந்திப்பு தொடரும்)
