
தேவகுமார் ஒரு உண்மைக் கிறிஸ்தவர். ரயில்வேயில் புக்கிங் கிளார்க்.
முப்பது வருடங்களுக்கு முன் வைரத்தை விட மிகவும் விலை உயர்ந்த வஸ்து ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம்.
தூர்தர்ஷனில் தமிழ் சினிமா ஒளிபரப்பாகும். மாம்பழத்து வண்டு, நிரந்தரம், சூறாவளி, துலாபாரம், தூரத்து இடி முழக்கம் போன்ற உலகத்தரம் வாய்ந்த படங்களை பீச்சில் தொலைந்துபோன மெட்டி போலத் தெருத்தெருவாகத் திரிந்து, உவேசா ஓலைச்சுவடிகளை சேகரித்தது போல் சேகரித்து, கர்மசிரத்தையாக, பண்டிகை நாட்களாகப் பார்த்துப் போடுவார்கள்.
ஆனாலும் அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
அது பெண்களாகப் பிறந்தவர்களின் பிறப்புரிமை.
அதனால் ஞாயிறு மதிய ட்யூட்டி வந்துவிட்ட சாமர்த்தியசாலிகள், வாயில்லாப்பூச்சியான சக குமாஸ்தாக்கள் தலையில் மிளகாய் அரைத்து காலை ட்யூட்டியை அபகரித்து விடுவார்கள்.
ட்யூட்டியை இழந்தவர்கள் கடுமையான வயிற்றுப் பொருமலுடன் வருகிற போகிறவர்களோடு சில்லறைக்கு சண்டை இடுவார்கள். தாங்கள் தான் சதாகாலமும் வஞ்சிக்கப்பட்ட வம்சம். வக்கில்லாமல் வரவேண்டி இருக்கிறது. இந்த ப்ரயாணிகளுக்கு என்ன வேண்டி இருக்கிறது, வீட்டில் அக்கடாவென்று டிவி பார்க்க வேண்டியது தானே?
தேவகுமாருக்குக் காலை ட்யூட்டி வந்துவிட்டது என்றால் ஸ்டேஷனே துக்கம் காக்கும்.
யாராலும் அவரை ஏமாற்ற முடியாது. இத்தனைக்கும் அவர் காலை நேரம் மாதாகோவிலுக்குப் போகவேண்டியவர். ஆனாலும், அவர் வீம்பு பிடித்து, யாரையும் அனுசரித்துப் போகிறவர் இல்லை.
அவரைத் தொடர்ந்து, ட்யூட்டி எடுப்பவர்கள் பாடு பெருங்கஷ்டம். அவர் கவுண்டரில் எல்லா சில்லறைகளையும் வாரி விட்டு விடுவார். காரணம் சில்லறைகளை வைத்துக் கொண்டு “இல்லை” என்று பொய் சொல்வது பாவம் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.
அவரது தலையைப் போலவே கவுண்டரையும் துடைத்து வைத்து விடுகிறார் என்று எல்லாரும் அவர் மீது நிரந்தரமாக வைக்கும் குற்றச்சாட்டு.
இதைவிட அவரிடம் பெண்மணிகளுக்குப் பிடிக்காத ஒரே விஷயம் அவர் ஒரு hardcore male chauvinist என்பது. ஆணாதிக்க சிந்தனை அவர் ரத்தத்தில் ஊறியது என்று அனைவரும் நம்பினார்கள்.
இந்தக் குற்றச்சாட்டு அவர்களுக்கு இரவு ட்யூட்டி வரும்போது கடுமையாக வலுப்பெறும்.
காலை ட்யூட்டியே தானம் செய்ய முன்வராதவரிடம் இரவுப் பணியை எப்படி ஏற்றுக்கொள்ள சொல்ல முடியும்?
இது கொஞ்ச நாளில், அதுவும் பெண்கள் எண்ணிக்கை ஆறாக உயர்ந்த போது, பெரிய புகைச்சலாக உருமாறி, கடைசியாக புகாராக வடிவெடுத்தது.
புகாரின் காரணம் இதுதான்.
பிதாமகன் தேவகுமாரின் சொரூபம் தெரியாமல் ஒரு அம்மணி தன் இரவுப்பணியை ஏற்றுக் கொள்ள இறைஞ்சினார். தேவனின் கதவுகள் வேண்டுமானால் தட்டினால் திறக்கப்படலாம். குமாரனின் கதவுகள் எந்த தேவாரத்திற்கும் திறவாது.
அந்த அம்மணி விடாமல் நச்சரிக்க தேவகுமாரன் பொறுமை இழந்து வெடித்தார்.
“ஏம்மா.. எல்லாருக்கும் சம்பளம் ஒண்ணு தானே? இதெல்லாம் தெரிஞ்சு தானே வேலைக்கு வந்திருக்கீங்க? முடியலைன்னா வேலைய விட்டுட்டுப் போக வேண்டியது தானே? உங்க புருஷன் உங்களை விட நல்ல வேலைல தான இருக்காரு?
உங்களோட வசதியைப் பெருக்கிக்க தானே வேலைக்கு வரீங்க… எவ்வளவு பேரு வீட்டோட இருக்காங்க? எம் பொண்டாட்டி கூட படிச்சவ தான்.. அவ வீட்டோட தான் இருக்கா.. வேலை கிடைக்கறதுக்காக சகலத்துக்கும் மண்டைய ஆட்டிட்டு, இங்கே வந்து என் மண்டை, முடி இல்லாம தேங்காய் மாதிரி இருக்கறதுனால, சும்மா உருட்டிக்கிட்டே இருக்கீங்க.. முடிஞ்சா வேலை பாருங்க.. இல்லாட்டா வேற வேலையப் பாருங்க… எவ்வளவு பேரு ஒத்தை சம்பளம் கூட இல்லாம சாப்பாட்டுக்கு அல்லாடறாங்க?”
அந்த அம்மணியின் உறவினர் தலைமை அலுவலகத்தில் ஒரு சீனியர் குமாஸ்தா.
விவகாரம் விகாரமாக அது போதுமானதாகி விட்டது.
விசாரணைக்கு உத்தரவிடப் பட்டது. குமாஸ்தாக்களின் ஆகிருதிக்கு அப்பாற்பட்ட அதிகாரிகளில் ஒருவர் அதற்கு நிர்வாகியாக வந்து இறங்கினார்.
அவர் ஒரு IRTS அதிகாரி. இளைஞர். வடக்குக்கே உரித்தான வெள்ளை நிறம்.
ஸ்டேஷன் அதிகாரி அறையில் விசாரணை. ரயில் சம்பந்தப்பட்ட நாலைந்து பேர். அதிகாரியின் பெரிய அந்தஸ்து அவரை மட்டுமே அமர வைத்து இருந்தது.
தேவகுமாரும் அவர் மீது ப்ராது கொடுத்த ஜானகியும் அதிகாரியின் இருபக்கமும் நின்று கொண்டு இருந்தனர்.
ஜானகி இரு கைகளையும் கட்டிக் கொண்டு பவ்யமாகவும், தேவகுமார் விறைப்பாக அலட்சியமாக கைகளைப் பிணைத்தவாறும் ஒருவரையொருவர் பாராது நின்றுகொண்டு இருந்தனர்.
இருபுறமும் திறந்த அந்த அறையில் என்னமோ பரபரப்பாக நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தில் இருபுறமும் கூட்டம் கூடத் தலைப்பட்டது.
கடற்கரை செல்லும் பக்கம் RPF ராஜாமணி, சின்னப்பழுவேட்டரையர் மாதிரி விறைத்த மீசையுடன், லத்தியை முதுகில் அணைத்தவாறு, தோற்றத்தாலேயே பயணிகளை அப்புறப்படுத்தினான்.
தாம்பரம் செல்லும் பக்கம், மணி. தஞ்சாவூர்க்காரன். இளைஞன். வெற்றிலைச் சிவப்பும் நமுட்டுச் சிரிப்பும் தவழும் அழகான உதடுகளால் விரட்டி, கைகளில் லத்தியை வந்தியத்தேவன் வாள் மாதிரி சுழற்றிக் கொண்டே அப்புறப்படுத்தினான்.
அப்படியும் சிலர் பிடிவாதமாக நகர முயலவில்லை. பெரும்பாலும் அவர்களில் பலர் சுவாரஸ்யம் இழந்து, வந்த ரயிலில் கூட்டத்தில் கலந்து, தமது வீடுகளில் நிர்ப்பந்திக்கப்பட்ட கவலைகளில் கரைந்து விட விரைந்தனர்.
அதிகாரி கடுமை கொப்பளிக்கும் முகமொன்றை அணிந்து கொண்டு இருந்தார். அவர் உள்ளே வரும்போதே அப்படிப்பட்ட மனநிலையில் தான் நுழைந்தார். அவருக்கு பலபடிகள் கீழே இருக்கும் மூன்றாம் வகுப்பு ஊழியர்கள் மீதான அவரது பார்வை, ஏற்கெனவே அவர்களுக்கு போதிக்கப்பட்டு இருப்பது தான்.
தேவகுமாரை அலட்சியமாகப் பார்த்தார். இதோ அடுத்த சில நிமிடங்களில் அவரை தற்காலிகப் பணி நீக்கம் செய்யப் போகிறார்.
“அப்புறம்” என்று கேட்பது போல் இருந்தது அவரது பார்வை.
“ஆக, நீங்கள் தான் தேவ்குமார்”
‘எஸ் சார்… என் பெயர் தேவகுமார் சார்… என் மீது ப்ராது கொடுத்த நபர் பெயர் ஜானகி சார்”
“இதை ஏன் நீங்கள் அவசியம் இல்லாமல் சொல்கிறீர்கள்?”
அவரது ஆங்கிலம் இந்தியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலமாக இருந்தது. சரளமாக இருந்தாலும் வளமையில்லை அதில்.
“என்னைக் குற்றவாளியாக ருசுப்படுத்தும் உத்தேசத்தில் இந்த விசாரணைக்கு ஏற்பாடாகி இருக்கிறது.. இதில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குற்றவாளிக்கு இருக்கும் அசௌகரியங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல குற்றம் சுமத்தியவருக்கு இருக்கும் சௌகரியங்கள்.. எங்கள் இருவர் பெயர்களும் தங்கள் மேலான பார்வைக்கு தெரிவிக்கப் பட்டிருக்கலாம்.. இருந்தாலும் விசாரணை என் மீதானதால் அவரது பெயர் கேட்கப்படாது என்பதால் நான் தெரிவித்தேன்.. அவ்வளவு தான்.. தவறாக இருந்தால் மன்னிக்கவும் “
தேவகுமாரின் ஆங்கிலம் இதுவரை அதிகாரி கேட்டறியாதது. அவர் படித்த மாநிலத்திலேயே, அவரது கல்லூரி ஆசிரியர்கள் உட்பட, இது மாதிரி யாரும் பேசியிருக்க மாட்டார்கள்.
அவர் தேவகுமாரை நிமிர்ந்து பார்த்தார். தாட்டியாக, வளர்ந்த புஜங்களோடும் அகன்ற மார்போடு, கருத்த உடலும், பின்புறம் அடர்த்தியற்ற முடி தவிர, முழுத்தலையும் வழுக்கையாக, கையில் கோடாலி கொடுத்தால், ஆறு குண்டு விறகை அநாயாசமாகப் பிளக்க எத்தனிப்பவன் போல இருக்கும், இந்த மனிதன், உருவத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஆங்கிலம் பேசுகிறான். அதிகாரிக்குத் தெரிந்தவரை நரோத்தம் பூரிதான் இப்படி பேசிக் கேட்டு இருக்கிறார்.
அவருக்கு மட்டும் இல்லை, அவரை ஒரு குமாஸ்தாவாக அறிமுகம் பெற்ற யாருக்குமே அவர், பியூசி முதல் முதுகலை வரை, லயோலாவில் ஆங்கிலம் படித்தவர் என்பது தெரியாது. அவர்கள் எல்லோருக்கும் அவர் ஒரு வழிக்கும் ஒத்து வராத முரட்டு மனிதர். அவ்வளவு தான்.
அதிகாரி கையில் இருந்த பென்சிலை நெட்டுக்குத்தாக வைத்து மேசையை பட்பட்டென்று தட்டினார். அடுத்தடுத்து இரண்டு ரயில்கள் பாங்கு ஊதி தடதடவென்று ஓடியது. அது போகட்டும் என்று காத்திருந்தவர் போலத் தோன்றினாலும், உண்மையில் தேவகுமாரிடம் என்ன மாதிரி கேள்விகள் கேட்பது என்று அவர் யோசித்திருக்க வேண்டும். அவரது ஆங்கிலம் போதுமானதாக இருக்காதோ என்று அவருக்குக் கவலை வந்து விட்டது. எழுதிப் படித்து விடலாம் என்றால் இது பொதுக்கூட்டம் இல்லை. வார்த்தைகளை சேகரிக்க அவர் அவகாசம் ஏற்படுத்திக் கொண்டு இருந்தார்.
ஸ்டேஷன் மாஸ்டர் உதவிக்கு வந்து, பிரச்சினையை விளக்கினார்.
அதிகாரி சற்று சுதாரித்து, தேவகுமாரிடம், “மிஸ்டர் தேவ்குமார், சக ஊழியர், அதுவும் ஒரு பெண்மணியிடம், இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் வீட்டில் பெண்களே கிடையாதா என்ன?”
“ஏனில்லை. என் மனைவி, இரண்டு பெண் குழந்தைகள், ஏசுவிற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட என் மூத்த சகோதரி, வயதான தாயார், அவரைவிட வயது முதிர்ந்த என் மாமியார்,,, பெண்களுக்குக் குறைவில்லை எங்கள் வீட்டில்… என் வீட்டில் நான் ஒருவன் தான் ஆண்மகன்.. என் வீட்டில் என்னைத் தவிர யாரும் வேலைக்குப் போகவில்லை.. என் மாமியார் மட்டும் விதிவிலக்கு.. அவரும் வேலைக்குப் போகவில்லை…
அவர் ஒரு முன்னாள் ஐ.என்.ஏ சிப்பாய்… நேதாஜியுடன் தோளோடு தோள் நின்று பர்மாவில் ஆங்கிலேயனோடு போர்புரிந்தவர். “
அதிகாரிக்கு எழுந்து நிற்க வேண்டும் போல இருந்தது. இந்த மனிதன் சாதாரணமானவன் இல்லை என்று புலப்பட்டது.
“உங்கள் தரப்பு நியாயம் என்ன? நீங்கள் ஜானகி அம்மையாரை வேலையை விட்டு நீங்கச் சொன்னது சரியில்லை “
“உண்மை தான்… நான் அவரை வேலையை விட்டுப் போகச்சொன்னது அதிகாரத்தில் சொன்னதாக ஏன் நினைக்க வேண்டும்… கரிசனமுள்ள ஒரு சக ஊழியனாக மட்டுமே கூறினேன்…ஏழு பேர், அதிலும் ஆறு பேர் பெண்களாகக் கொண்ட ஒரு குடும்பத்தைக் கண்ணியம் குறையாது, ஒற்றை சம்பளத்தில் நடத்தி வரும் அனுபவத்தில் சொன்னது அது..
என் மனைவியும் முதுகலை பயின்றவர்.. ஏன், என் தாயாருமே பட்டதாரி தான்… மாமியார் முதுகலை பயின்றவர்… இவர்கள் யாருமே முயன்று இருந்தால் வெகு எளிதில் வேலையை சம்பாதித்துக் கொண்டு இருக்கலாம்.. அவர்கள் குடும்பத்தை, அதைப் பராமரிக்கும் பெரும் பொறுப்பை, தாங்கள் மட்டுமே செய்யக் கூடிய வேலையாக, சம்பளம் இல்லாமல் விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள்..
இதனால், மற்றவர்கள் பார்வையில் தென்படும் சுகங்கள், டீவி, ஃப்ரிட்ஜ் போன்ற உபரி சௌகரியங்களை நாங்கள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.. அவை எங்களுக்கு, பொதுவாக கிறித்துவை ஆன்மரீதியாக ஏற்றுக் கொண்ட பின்னால், சௌகரியங்களாகத் தென்படவில்லை… நாங்கள் தேவைகளைக் குறைக்காமல், அவைகளுக்கு அவசியங்களே இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.. இதை நாங்களாகவே உணர்ந்து அறிந்த பாடமாக, அர்த்தமற்ற சௌகரியங்களுக்காக, தன்னையும் பிறரையும் வருத்திக் கொண்டு இருக்கும் ஜானகி போன்றவர்களிடம் தெரியப்படுத்துவதை, என் கடமையாக நினைத்தது வார்த்தைகளாக விழுந்தன.. வார்த்தைகள் தடிப்பது வாதங்களின் நீளஆழங்களை உத்தேசிப்பது… என் போதனை எப்போதுமே ஒரே மாதிரி தான்… எனக்கும் நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள், ஐயா”
“இவ்வளவு விபரமாகப் பேசுகிறீர்களே.. ஒரு சக பெண் ஊழியருக்காக விட்டுக் கொடுத்தால் தான் என்ன?”
“எதற்காக? இவர்கள் டிவி பார்ப்பதற்காகவா?”
“நான்.. நாங்க டிவி பாக்கறதுக்காக ஒண்ணும் கேக்கலை… சேஃப்டிக்காகத்தான் கேக்கறது..”
“அப்படின்னா?”
“ஒங்கள மாதிரி தடிப்போத்து தாண்டவராயன்னா எப்ப வேணா எங்கே வேணா போகலாம்… நாங்க, பொம்னாட்டி என்ன பண்ணுவோம்? காலம் கெட்டுக் கெடக்கு… இதுக்கு மேல வியாக்யானம் பண்ண யாராலயும் முடியாது… குமுட்டின்னா விசிறலாம்… குட்டிச்செவரா இருந்தா என்ன பண்றது? வெறுன முட்டிக்கத்தான் வேணும்” ஒரு விசும்பலில் தொடர்ந்து,
“நாங்க ஒண்ணும் சோத்துக்கு விதியில்லாம வேலைக்கு வரலை… என் ஹஸ்பென்ட் இன்ஜினீயர்… அவர் சம்பாத்தியம் அஞ்சு தலைமுறைக்குக் காணும். நான் ஒண்ணும் தற்குறி இல்லை… க்வீன் மேரீஸ்ல அந்த நாள்ல ஜானகின்னா அலறும்… படிச்ச படிப்பு வீணாக வேண்டாம்னு வந்தா, கண்டவன் கிட்டல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்கு”
தேவகுமார் கிண்டலாக சிரித்தபடியே,
“அப்படி என்ன படிப்பு படிச்சிட்டு, அது வீணாகக் கூடாதுன்னு டிக்கெட் அடிக்க வந்து இருக்கீங்க? டாக்டருக்கோ இன்ஜினீயரிங்கோ படிச்சிட்டு அது சம்பந்தமான வேலைக்குப் போயிருந்தா சரி”
அதிகாரி இப்போது கொஞ்சம் கடுமையான பழைய ஸ்திதிக்கு வந்து இருந்தார்.
“மிஸ்டர் தேவ்குமார்… உங்கள் நாகரீகமற்ற கிண்டலை நீங்கள் வேறிடத்தில் காட்டுவது நல்லது…உங்களது கொள்கைகள் பிற்போக்கானவை… மற்ற நேரங்களில் பரவாயில்லை..ஆனால், இரவுப்பணிக்காக ஜானகி மேடம் சொல்வது நூறு சதம் சரியானது… பாதுகாப்பு கருதி அவர்கள் அதை மறுதலித்தது ஒப்புக் கொள்ளக் கூடியதே… அதற்கான உங்கள் பதில்கள் ஏற்புடையது அல்ல…”
“மன்னிக்கவும் சார்…மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக என் கருத்துகளை நான் மாற்றிக் கொள்வது இயலாதது… சம்பளத்திற்கான வேலை என்று வந்து விட்டபின், ஆண்கள்
பெண்கள் என்ற பேதம் பார்ப்பது சட்டப்படி நியாயம் ஆகாது.. எல்லாம் தெரிந்து கொண்டே வேலைக்கு வந்துவிட்டு, அதை இன்னொருவர் தலையில் கட்டுவது நியாயமில்லாதது”
“இல்லை.. இல்லை… இரவுப்பணியின் பாதுகாப்பு அற்ற தன்மை ஏற்புடையது தான்… தார்மீக அடிப்படையில் மனிதாபிமான அடிப்படையில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படத்தான் வேண்டும் “
“பெண் தொழிலாளர்கள் என்று திருத்திச் சொல்லுங்கள் சார்… பெண்கள் என்ற உங்கள் கூற்று வர்ணம் பூசப்பட்ட ஒன்று “
“அதெப்படி?”
“இங்கு பாதுகாப்பு எந்த அளவில் குறைந்தது? ஸ்டேஷன் முழுக்க பகல் போல வெளிச்சம்… பன்னிரண்டு மணி வரை ஜன நடமாட்டம்… காலை நான்கு மணிக்கு மறுபடியும் சந்தடி, பரபரப்பு… பன்னிரண்டு போலீஸ்காரர்கள், அதில் இருவர் உயிர்க்கொலை செய்யும் ஆயுதம் தாங்கியவர்கள், எந்நேரமும் ரோந்து போகிறவர்கள்… நிலைய அதிகாரி, அவரது பரிவாரம் தூங்காமல் விழித்து இருப்பவர்கள்… நிலையத்தின் அடுத்த பக்கத்தில் ஒரு குமாஸ்தா.. பூட்டு சாத்துடன் பலத்த பாதுகாப்பு உடன் எல்லா வசதிகளும் உள்ளடிக்கிய ஒரு அறையில் இரவைக் கழிப்பதற்கு சம்பளம் வேறு கூடுதலாகத் தருகிறார்கள்… அதுவும் எதற்காக? ஜானகி மாதிரி பெரும்பாலும் தன் வசதி வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ள வேலைக்கு வருகிறவர்கள் தான் அதிகம்… கருப்பு வெள்ளை டிவியை கலர் டிவி ஆக்க வேண்டும், உந்து சைக்கிள் இரண்டு சக்கர வாகனமாக உருமாற வேண்டும் என்று நிறைய சொல்லலாம்..
ஆனால், இந்த சாத்தியங்கள் எதுவுமே இல்லாமல், என் மனைவி ஐந்து பெண்களோடு வீட்டில் தனியாக இருக்க வேண்டும்…வசதிக்காக இல்லாமல் வயிற்றுக்காக வேலைக்கு வருகிற நான், என்னுடைய நியாயமான ட்யூட்டியைத் துறந்து, என் குடும்பத்தினரை எந்த அளவும் பாதுகாப்பற்ற ஒரு இடத்தில் உதிர்த்து விட்டு, ஜானகி போன்றவர்கள், வசதிக்காக வருபவர்கள், உல்லாசமாக இருப்பதற்காகத் தியாகம் செய்ய வேண்டும்… தியாகம் நான் மட்டும் செய்வதில்லை… ஒரு பெண்ணுக்காக ஐந்து பெண்கள் தங்கள் பாதுகாப்பைத் தியாகம் செய்ய வேண்டும்… இதை எதிர்ப்பவன் பேரில் விசாரணை வேறு வருகிறது….
ஆக, பெண் உரிமை என்பது வேலை செய்யும் பெண்களுக்காகத்தான்… வீட்டில் இருக்கிற பெண்கள் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை… அப்படித் தானே?”
அதிகாரி மட்டுமல்ல… ஜானகி கூட வாயடைத்துப் போய்விட்டார்…
அதிகாரி எழுந்து தன்னுடைய விலை உயர்ந்த சட்டையை நீவி விட்டார்…
“மிஸ்டர் தேவ் குமார்… நீங்கள் சொல்வது சரியா தவறா என்று சொல்ல நான் நீதிபதி இல்லை… ஆனாலும் பெண்களோடு சமரசமாக நீங்கள் போகவேண்டும் என்ற நிர்வாகத்தின் கருத்தில் மாற்றம் இல்லை.. அவ்வாறு இருக்க வேண்டும் என்று உங்களை நிர்பந்திப்பதில் தவறில்லை… அதில் உங்களுக்கு விருப்பம் இல்லாத பட்சத்தில் உங்கள் கொள்கைகளுக்குத் தகுந்த முறையில், தற்போது பெண்கள் வேலை செய்யாத ஆம்பூருக்கு தங்களை மாற்றலாம் என்று நிர்வாகம் யோசிக்கிறது” என்றார்.
தேவகுமார் “இது எதிர்பார்த்தது தான் சார்” என்றார்.
சமரசத்திற்கு உடன்படாத அவர் பெண் உரிமைகளை எதிர்த்த பிற்போக்கு வாதி என்ற அளவில் வயது முதிர்ந்த, சுதந்திரப் போராட்டத் தியாகி உள்ளிட்ட ஐந்து பெண்கள் உள்ளடக்கிய குடும்பத்தை விட்டு, இருநூறு கிலோமீட்டர் தள்ளி இருக்கிற ஆம்பூருக்கு மாற்றப் பட்டார்.

இவருக்குத் தொழிற்சங்கமும் உதவிசெய்திருக்காதே!
(அருமையாக எழுதினீர்கள். இன்னும் இதுபோல் எவ்வளவோ நீங்கள் பார்த்த அனுபவங்களை எழுதவேண்டும். )
செய்வீர்களா, செய்வீர்களா?
சீனியர் எழுத்தாளர்களின் பெருந்தன்மை புதிதாக எழுதுபவர்களுக்கு உற்சாக மருந்து.. மிக்க நன்றி..
வீட்டில் இருக்கும் பெண்மணிகள் என்ற இன்னொரு பக்கத்தை மிகத் தெளிவாக படம் பிடித்து காட்டிவிட்டீர்கள். அப்பாடா…
….தேவகுமாரின் வாதங்கள் படு ஸ்ட்ராங்.
அருமை மிக அருமை என்பதெல்லாம் மிகக் குறைந்த அளவு பாராட்டே! அதற்கும் மேலே….சொல்ல வேண்டும். அன்றாட அலுவலகக் களத்தின் மிக யதார்தமான ஒரு சூழலை மையக் கருத்தாகக் கொண்டு இத்தனை சுவாரஸ்யமான நடையில் எழுதப்பட்ட கதையை வெகு நாட்களுக்குப் பிறகு படித்தேன். ஒரு நாள் முழுதும் பேசக் கூடிய விஷயங்கள் உண்டு. நிறைய எழுதுங்கள் .வாழ்த்துகள்.
அன்புடன் வவேசு
அருமையான விவாதம்! வித்தியாசமான கதை! வாழ்த்துகள்!
மிகப்பெரிய ஆளுமைகளின் பின்னூட்டங்கள் சிலிர்க்க வைக்கின்றன. நம் படைப்புகளை நம்மிலும் மேலானவர்களின் பார்வைக்குப் போவது என்பதே பெரிய சாதனை தான்.
சிந்தாநதியை லாசரா இப்படித்தான் முடிப்பார் –
“இனம் கண்டு கொண்டோர் எறியும் பூச்செண்டு..
வாடாமணம்..
சிந்தாநதியில் ஒரு முத்துக்குளிப்பு”
நன்றி🙏🙏
எதார்த்தமான உரையாடல்கள் மனதை தொட்டன. பிற்போக்குவாதம் என்று பெண்ணுரிமைவாதிகள் சொல்வார்கள் என்று பூசி மெழுகாமல் கதை நகர்கிறது. நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும் கணேக்ஷ்ராம்
படிக்க காத்திருக்கிறேன்
ஆகா ..பல ஆண்களின் மனக்குமுறலை ஒரு கதை இவ்வளவு தெளிவாக படிக்க ஆர்வம் தூண்டுவதாகவும் குறிப்பாக நையாண்டியுடன் சென்ற கதை சொல்ல வந்த செய்தியை அழுத்தம்திருத்தமாக பதிவு செய்திருப்பது சிறப்பானது ..வாழ்த்துக்கள்