நகைமுரண்/வவேசு

பயனுள்ள தன் பணியை
அரவமின்றிச் செய்துவிட்டு
மண்ணுக்குள் புதைந்து
நிற்கின்றன
வெளிச்சம் விரும்பா வேர்கள்.

வெயிலின் சாட்டையடி
முதுகில் பட்டாலும்
நன்றியெதையும் கேளாமல்
வெட்டப்படுவோம் என உணர்ந்தாலும்
நிழலைக் கீழே இறைத்துவிட்டுப்
படர்ந்து நிற்கின்றன கிளைகள்.

மலர்ந்தால்
வாடிவிடுவோம் எனத் தெரிந்தும்
இதழ் விரித்துப் புன்னகைத்து
மகரந்தங்களை அளிக்கின்றன
மகிழ்ச்சியோடு மலர்கள்.

களவாடப் படுவோம் கடித்து
உண்ணப்படுவோம் எனத் தெரிந்தும்
கண்ணைக் கவரும் வண்ண மேனியோடு
காலங்காலமாய்க் கனிகள்.

வீழும் சருகு உரமாவதையும்
உயிர்வளி இவையே அளிப்பதையும்
மழையை இவையே தருவதையும்
அறியார் யாரே ?என்றாலும்

இவற்றில் –

ஒற்றைப் பண்பும் இல்லா
வெற்று மனிதனை
“ மரம் போல் ஏன் நிற்கிறாய் ?”
என்று விளித்தல்
நகைமுரண் அன்றோ ?
நவின்றிடுவீரே!

5 Comments on “நகைமுரண்/வவேசு”

  1. வேர், கிளை,மலர், கனி, சருகு என அனைத்தையும் பிறர்க்கென அர்ப்பணித்த பின்பும்,கர்வமின்றி, அடக்கமாய் நிற்கிற ஒரு மரமாக முடிந்தால் , அதை விட வேறென்ன வேண்டும் ? இப்படி யோசிக்க வேண்டிய மனிதன் மரம் என்கிற சொல்லை ஒரு வசைச் சொல்லாக பயன் படுத்துகிற முரண் அழுத்தமாக வெளிப் படும் அருமையான கவிதை.( என்னை ப் பொறுத்த வரை, ஒரு மரமாய் இருக்க முடிந்தால் அது வரம்!!!).

Comments are closed.