மண் மணம் மனம்…/கனகா

வங்கி உத்தியோகம்.
2 வருடத்திற்கு ஒரு ஊர் மா‌ற்ற‌ம்.
ஒவ்வொரு மாற்றலும் தவறாமல் தரும் ஒரு இனம் புரியாத பயம்.
புது வீடு புது மக்கள் புது சகாக்கள்.
பல வருடம் பிறந்த ஊர் விட்டு வேற்று மாநில வாழ்க்கை.அங்கு நிலை கொள்ளா மனது இங்கு கிடைக்கும், கருணைக்கிழங்கிற்கும்,மல்லிகைப்பூவிற்கும், தமிழ்சினிமாவிற்கும் ஏங்கும்.அ‌ந்த ஏக்கம் பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது துக்கமாக மாறும்.
காரணம் ஒன்றே. தமிழ்நாட்டில் 5 நாள் தொடர் விடுமுறை. நமக்கு 5 நாளும் அலுவல் . அழகிய சென்னை நகருக்கு பணி மாற்றம் விரும்பி பலரிடம் அழுது புலம்பி ஒரு வழியாக
வந்தும் ஆகி விட்டது.
வேகமாக போன ஒரு மாதத்தில், தேடித்தேடி இத்தனை நாள் மற்றைய மாநிலங்களில் கிடைக்காத, அதனால் மறக்காத சில “நம்ம ஊரு ” குட்டி சம்சா, குண்டுமல்லியை அனுபவித்து, மறந்தே விட்ட மகிழ மரத்தை கண்டு, இது நம் இடம், இவர் நம் மக்கள் என்ற நிம்மதியில்
“இதற்குத்தானே ஆசைப்பட்டாய்? இனியாவது இக்கணத்தை ஏற்பாயா?”
எது என் சொந்த ஊர்?
பிறந்த ஊரா?
வாழ்ந்த வாழும், வாழப்போகும் ஊரா?
இதில் அடங்கும் என் பதில்.
அன்று, இந்த ஊரில் பெய்த மழையில்
மெல்லிய மயிலிறகின் வருடலாய்,மனதோரம் எட்டிப்பார்க்கும், அந்த ஊரின் மண் வாசம், “ஊட்டா மாட்தீரா” என்ற உபசரிப்பின் நேசம்,
ஒவ்வொரு ஊரும்
துளித்துளியாய் என்னிடமும்,
அந்தந்த ஊர்களில் தங்கி விட்ட என் மனதின் சிறு துணுக்குகளும்.
யாதும் ஊரே
யாவரும் கேளிர்!