கடந்து போன சந்திப்புகள்/S .L.  நாணு

(12)

“நீங்க இஞ்சினியரிங் தானே பண்ணினீங்க?”

அப்பாவியாகக் கேட்டேன்..

ஸ்ரீகாந்த் திரும்பி என்னைப் பார்த்தார்..

”அதெல்லாம் சும்மா பேச்சுக்கு.. சீரியஸா எடுத்துக்காதேம்மா”

அவர் பட்டென்று சொன்னதும் அங்கிருந்தவர்கள் எல்லோரும் சிரித்து விட்டோம்..

பிறகு அவரே தொடர்ந்தார்..

“ஜோக்ஸ் அபார்ட்.. கிண்டி இஞ்சினியரிங் காலேஜ்ல தான் படிச்சேன்.. படிக்கவும் செஞ்சேன்.. கூடவே கிரிக்கெட்டும்.. காலேஜ் டீம்.. டி.என்.சி.ஏ.. அப்புறம் தமிழ்நாடு ரஞ்சில..”

ஒவ்வொன்றாக கேள்விகள் மாறி மாறி பறந்தன..

”1981ல தானே இண்டியா டீம்ல செலக்ட் ஆனீங்க?”

“ஆமா.. 1981.. நவம்பர் மாசம் இருபத்தேழாம் தேதி.. இங்கிலாந்த் கூட டெஸ்ட் டெபு.. வான்கடே ஸ்டேடியத்துல..”

“அப்ப ஒன் டே?”

“அதே 1981 நவம்பர் 25ம் தேதி.. இங்கிலாந்த் கூட அகமதாபாதுல..”

”1981ல டெபு.. 1983ல உலகக் கோப்பை ஜெயிச்ச டீம்ல நீங்க.. எப்படி இருந்தது?”

“செம கிக்கா இருந்தது.. 1983 உலகக் கோப்பை நாம ஜெயிச்சோம்னா அதுக்கு கபில் தான் காரணம்.. அவன் மட்டும் ஜிம்பாப்வே கூட 175 அடிச்சிருக்-கலைன்னா நாங்க காலி.. பெட்டி படுக்கையைத் தூக்கிண்டு அடுத்த பிளைட் பிடிச்சு வீட்டுக்கு வந்து தச்சு மம்மு சாப்பிட்டிருக்க வேண்டியது தான்.. சொல்லப் போனா மேனேஜர் ரிடர்ன் டிக்கெட் கூட புக் பண்ணி வெச்சிருந்தான்”

ஸ்ரீகாந்த் விளையாடுவதை டிவியில் நிறைய பார்த்திருக்கிறேன்.. ஆனால் பேசிக் கேட்டதில்லை.. மற்ற ஆட்டக் காரர்களை அவன் இவன் என்று அவர் குறிப்பிட்டது முதலில் ஒரு மாதிரியாக இருந்தாலும்.. அவர் குரலில் அப்படிக் கேட்க நன்றாகத் தான் இருந்தது.. (அது தான் அவருடைய இயல்பு என்று பிற்காலத்தில் புரிந்தது.. அதுவும் இப்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவருடைய குரலைக் கேட்டாலே நாம் குதூகலமாகி விடுவோம்.. மற்றவர்களை அவர் கலாய்ப்பதும்.. மற்றவர்கள் அவரை கலாய்ப்பதையும் அதை அவர் ஸ்போர்டிவ்வாக ஏற்பதும்.. ஐ.பி.எல். போன்ற மேட்சுகளை ஸ்டார் ஸ்போட்ஸில் பார்க்கும் நேயர்களுக்கு மஹா விருந்து தான்).

”உலகக் கோப்பை முடிஞ்ச உடனே பேப்பர்ல நிறைய நியூஸ் வந்துதே.. அதாவது நம்ம டீமை ரொம்ப கஷ்டப் பட்டதா..”

“முக்கியமா லேங்குவேஜ் பிரச்சனை.. நம்ம பசங்கள்ள முக்காவாசி பேருக்கு இங்கிலீஷ் தெரியாது.. ஏதோ கொஞ்சம் இங்கிலீஷ் தெரிஞ்சவங்களுக்கும் அங்க அவா பேசற இங்கிலீஷ் புரியலை.. ஏன் நம்ம கேப்டன்.. கபில்.. சுத்தமா இங்கிலீஷ் தெரியாது.. அப்புறம் தான் கத்துண்டான்”

“கவாஸ்கர்?”

“அவன் கில்லாடி.. பிரமாதமா இங்கிலீஷ் பேசுவான்.. அவன் ஒருத்தன் தான்.. நா கூட நம்ம தமிழங்க ஸ்டைல்ல இங்கிலீஷ் பேசுவேனா.. அவங்க புரிஞ்சுக்கக் கஷ்டப் பட்டாங்க”

மறுபடியும் அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பு..

“கபில் தேவ் பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்”

“ஜாஸ்தி பேச மாட்டான்.. ஆனா பயங்கர தில்லான ஆளு.. எதுக்கும் அசர மாட்டான்”

“கரெக்ட்.. கவாஸ்கரையே ஒரு மேட்சுல டிராப் பண்ணினாரே”

“நீங்க வேற.. கவாஸ்கர் டிராப் ஆன உடனே எங்க எல்லாருக்கு ஷாக்.. அவன் இல்லைன்னா டீமே இல்லைன்னு நினைச்சோம்.. ஆனா கபில் அசரலையே.. அவன் ஒரு முடிவு எடுத்தா பின் வாங்க மாட்டான்.. ஸ்டெடியா நின்னான்.. அவன் ஒரு அருமையான கேப்டன்.. அவனோட அந்த தில்லுல தான் வோர்ல்ட் கப் ஜெயிச்சுக் கொடுத்தான்”

“கவாஸ்கர் கூட உங்க காம்பினேஷன் எப்படி?”

“ரொம்ப தமாஷா இருக்கும்.. பேட்டிங் பொறுத்தவரை அவனும் நானும் இரு துருவங்கள்.. ஆனா ரெண்டு பேரும் ஜாலியாப் பேசிண்டிருப்போம்.. உண்மைல சொல்லணும்னா.. அவன் அருமையான பேட்ஸ்மேன்.. என்ன டெக்னிக் தெரியுமா? அவன் பேட்டிங் பண்றதை பக்கத்துலேர்ந்து பார்க்கறதே சூப்பரா இருக்கும்”

“சார்.. கேட்கறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. உங்க பேருல ஒரு குற்றச் சாட்டு இருக்கே.. அதாவது உங்க கிட்ட கன்ஸிஸ்டென்ஸி இல்லைன்னு..”

“இதுல தப்பா நினைச்சுக்க என்ன இருக்கு? அது நிஜம் தான்.. ஏன்னா என்னால லொடுக்கு லொடுக்குன்னு தட்டிண்டு நிக்க முடியாது.. பொறுமை கிடையாது.. கவாஸ்கர் அதுல கெத்து.. நின்னு ஆடி ரன் அடிப்பான்.. என்னைப் பொறுத்தவரை வந்தோமா.. நாலு விளாசு விளாசினோமான்னு இருப்பேன்… பட்டா பாக்கியம்.. படாட்டி லேகியம்”

(சமீப காலமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் பார்வையாளர்களிடையே “பட்டா பாக்கியம்.. படாட்டி லேகியம்” வசனம் ரொம்பவே பிரபலம்.. அந்தக் காலத்திலிருந்து இப்போது வரை அதை தொடர்கிறார் ஸ்ரீகாந்த்).

1983 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுக்கு எதிராக இவர் ஆடிய அதிரடி ஆட்டம் இன்றும் பேசப் படுகிறது..

ஆனால் ஸ்ரீகாந்தின் இந்தப் போக்கு தான் அவரை இந்திய அணியில் உள்ளே வெளியே நிலமைக்குத் தள்ளியதோ?

1988ல் விசாகபட்டினத்தில் நியூஸிலாண்டுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங்கில் அரை சதம் அடித்து பந்து வீச்சில் ஐந்து விக்கெட்டையும் எடுத்தார்.. ஒரு நாள் கிரிக்கெட்டில் அரை சதம் அடித்து அதே போட்டியில் ஐந்து விக்கெட்டையும் வீழ்த்திய முதல் இந்திய ஆட்டக்காரர் ஸ்ரீகாந்த் தான்..

1989ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டன்.. பாகிஸ்தான் மண்ணில் சீரீஸ் டிரா செய்து சாதனை புரிந்தார்..

ஆனால் திரும்பிய உடனேயே அவருடைய பேட்டிங் பார்மை சுட்டிக் காட்டி அணியிலிருந்து விலக்கப் பட்டார்..

மீண்டும் 1991ல் மறுபிரவேசம் செய்து 1992 உலகக் கோப்பையிலும் விளையாடினார்..

அதோடு அவருடைய கிரிக்கெட் சகாப்தம் முடிவடைந்தது..

அதன் பிறகு 2008ல் ஐ.பி.எல். வந்தவுடன் சி.எஸ்.கே. அணிக்கு பிராண்ட் அம்பாஸிடராக நியமிக்கப் பட்டார்..

இந்திய அணி தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப் பட்டார்.. 2011 இந்தியா தோனி தலமையில் உலகக் கோப்பையை வென்ற பிறகு இவருடைய நியமனக் காலம் முடிவடைந்தது..

சரி.. ஸ்ரீகாந்த் எதற்காக எங்கள் அலுவலகம் வந்தார்?

அந்த சமயத்தில் அவர் நீலாங்கரையில் ஷூவின் மேல் பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருந்ததாக சொன்னார் என்று நினைக்கிறேன்.. அதற்கான தொலைபேசி இணைப்பு சம்பந்தமாக வந்திருந்தார்..

உடனே ஆவன செய்வதாக பத்மநாபன் சார் உறுதி கூற வந்த வேகத்துலேயே விடை பெற்று வெளியேறினார் ஸ்ரீகாந்த்..

அந்த சூறாவளி சந்திப்பிலிருந்து நாங்கள் விடுபட சிறிது நேரம் ஆயிற்று..

1983 திரைப்படம் பார்த்த பிறகு இப்போது நான் ஸ்ரீகாந்தை சந்தித்தால் அப்போதிருந்த இந்திய அணியைப் பற்றி நிறைய கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.. 1983ல் காட்டப் பட்ட எல்லா சம்பவங்களும் உண்மைக்கு அருகில் இருப்பது தானா என்று உறுதி செய்துக் கொள்ளத் தோன்றுகிறது..

சந்தர்ப்பம் வருமா?

(சந்திப்பு தொடரும்)

One Comment on “கடந்து போன சந்திப்புகள்/S .L.  நாணு”

Comments are closed.