நான் தினமணிகதிரில்/திருப்பூர் கிருஷ்ணன்

நான் தினமணிகதிரில் துணையாசிரியராக வேலைக்குச் சேர்ந்த புதிதில் கோயங்கா குடும்பத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தை ஒட்டி எல்லோருக்கும் வேட்டி துண்டு வழங்கப்பட்டது. நான் பணியில் சேர்ந்து மிகச்சில நாட்களே ஆகியிருந்ததால், என் பெயர் வருகைப் பதிவேட்டில் அப்போது சேர்க்கப்பட்டிருக்கவில்லை. எனவே எனக்கு வேட்டி துண்டு வந்துசேரவில்லை.

தினமணிகதிரில் என்னோடு பணியாற்றிய ஓவியர் தாமரை, ஓவியர் ஜெயன், நவீனன், சி.ஆர். கண்ணன், பி.ஏ. தாஸ் ஆகிய எல்லோரும் வருத்தப்பட்டார்கள். எனக்கு வேட்டி துண்டு வந்து சேராததை யாரோ தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமனிடம் சொல்லியிருக்க வேண்டும். ஏ.என். சிவராமன் சம்பந்தப் பட்டவர்களிடம் சொல்லியிருக்கலாம். இதெல்லாம் என் ஊகம். ஆனால் இரண்டு நாட்களில் என்னைத் தேடிவந்து ஒருவர் வேட்டி துண்டு கொடுத்துவிட்டுப் போனார். இது பெரிதல்ல. இதன் பின் நடந்த நிகழ்வு தான் பெரிது.

அந்தத் திருமணத்தை ஒட்டி எக்ஸ்பிரஸ் எஸ்டேட் பங்களாவில், கோயங்கா இல்லத்தில் எல்லாப் பணியாளர்களுக்கும் விருந்தளித்தார்கள். தலைவாழை இலைபோட்டு விருந்து. நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ராம்நாத் கோயங்காவின் புதல்வர் பி.டி. கோயங்கா பாயசத்தைத் தாங்கிய எவர்சில்வர் வாளியோடு “தினமணிகதிர் கிருஷ்ணன் எங்கே?’ என்றவாறே விசாரித்து விறுவிறுவென்று என் அருகில் வந்தார். நான் வியப்போடு அது நான்தான் என்றவாறு அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

என் இலையில் ஓர் அகப்பைப் பாயசத்தை ஊற்றிய அவர், “வேட்டி கொஞ்சம் லேட்டாக் கொடுக்கும்படி ஆச்சுப்பா. தப்பா நெனக்காதே’ என்று என் காதில் சொல்லிவிட்டுப் போனார்! அன்று இரவெல்லாம் கோயங்கா குடும்பத்தினரின் பண்பாட்டை எண்ணியெண்ணி வியந்துகொண்டிருந்தேன். “அந்த நிகழ்ச்சிக்குப் பின் 25 ஆண்டுகள் அதே நிறுவனத்தில் தொடர்ச்சியாகப் பணியாற்றினேனே, அது எதற்காக? அது பி.டி. கோயங்கா பரிமாறிய அந்த ஓர் அகப்பைப் பாயசத்தில் இனித்த அன்புக்காக என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.

  • திருப்பூர் கிருஷ்ணன்

நன்றி: தினமணி

தகவல் : ஆர். கந்தசாமி