ஃபெடெரிகோ கார்சியா லோர்கா கவிதை /சித்துராஜ் பொன்ராஜ் 

“யாரும் வானத்தில்

தூங்குவதில்லை. யாரும்.

யாரும் தூங்குவதில்லை.

நிலவின் உயிரினங்கள்

மோப்பம் பிடித்தபடி

அவற்றின் வசிப்பிடங்களைச்

சுற்றி வருகின்றன.

ஓந்திகள்

கனவு காணாதவர்களைக்

கடிக்க வருகின்றன

உடைந்த இதயத்தோடு

தப்பித்து ஓடுகிறவன்

மூலைகளில்

நட்சத்திரங்களின்

மெல்லிய கண்டன

ஊர்வலத்திற்கடியில்

அசையாமல் கிடக்கும்

அந்த வியக்கத்தக்க

முதலையைக் காண்பான்.”

– ஃபெடெரிகோ கார்சியா லோர்கா, ‘ப்ருக்ளின் பாலத்தில் ஒரு ரொமாண்டிக் பாடல்’, “Poet in New York” தொகுப்பிலிருந்து

***

ஃபெடெரிகோ கார்சியா லோர்கா 1929 ஆகஸ்டு மாதம் தனது 31வது வயதில் நியூ யார்க் நகரத்திற்கு வந்து சேர்ந்தார்.

ஓவியர் சால்வதோர் டாலியுடனான லோர்காவின் ஒருதலைக் காதலின் தோல்வி, அதன்பின் சிற்பி எமிலியோ பெரோஹோவுடனான உறவு முறிவு, தான் பின்னாளில் மணந்து கொள்ளப் போகும் டாலியின் அப்போதைய மனைவியான காலாவுடனான சந்திப்பு அனைத்தும் லோர்காவை அலைக்கழித்திருந்தன.

லோர்கா நியூ யார்க்கில் காலடி எடுத்து வைத்தபோது அவர் ஸ்பானிய உள்நாட்டுப் போரில் வலதுசாரிகளால் கொலை செய்யப்பட இன்னும் ஆறு ஆண்டுகளே இருந்தன.

அந்த நேரத்தில் நியூ யார்க் லோர்காவுக்குப் புத்தகங்களின் வழியாகவும் திரைப்படங்களின் வழியாகவும் பெருஞ்செல்வச் செழிப்புக்களின் பிரம்மாண்ட நகரமாக அறிமுகமாகி இருந்தது. ஆனால் லோர்கா நியூ யார்க்கை அடைந்த இரண்டு மாதங்களில் உலகப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைக் கண்டது.

நியூ யார்க்கின் பங்குச் சந்தை படுவீழ்ச்சி கண்ட ‘கறுப்புச் செவ்வாய்’ என்றழைக்கப்பட்ட அக்டோபர் நாளில் லோர்கா நியூ யார்க்கின் வர்த்தக மையமான வால் ஸ்திரீட்டில் இருந்தார். பரம்பரை பரம்பரையாகச் சேமித்த பெரும்செல்வம் ஒரே நாளில் கரைந்து காணாமல் போய் புகழ்மிக்க பணக்காரர்கள் பலபேர் நியூ யார்க்கின் பிரம்மாண்டத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட அதே வானளாவிய கட்டடங்களிலிருந்து குதித்துக் கொத்துக் கொத்தாய்த் தற்கொலை செய்து கொண்டிருந்த நேரம். நியூ யார்க் நகரத்தை அங்கு இருந்த ஒன்பது மாதங்களும் கால்நடையாகவே வலம் வந்து கொண்டிருந்த லோர்கா தன் கண் முன்னாலேயே ஆறு பேர் கட்டடங்களிலிருந்து குதித்து உடம்பு சிதைந்து இறந்தததைப் பார்த்தார்.

நியூ யார்க்கின் செல்வமும் பிரம்மாண்டமும் அந்த வேளையில் லோர்காவுக்கு வாழ்க்கையின் அர்த்தமின்மையையும் இயல்பான கொடூரத்தையும் காட்டுவதாகவே தோன்றின. அதன் கட்டமைப்பிலேயே கருணையின்மையைக் கொண்டிருந்த நகரத்தின் பகட்டும் செல்வாக்கும் லோர்காவுக்கு அழுக்கும் அசிங்கமாகவும் தோன்றின.

லோர்கா நியூ யார்க்கில் வசித்த ஒன்பது மாதங்களில் எழுதிய “Poet in New York” -இல் உள்ள 80 கவிதைகள் அவர் எழுதிய கவிதைகளில் சொல்லமைப்பிலும் படிமங்களாலும் தனித்துவமானவை. ஸ்பெயினில் இருந்தவரை நாடோடிப் பாடல்களின் சந்தங்களாலும் மற்றும் ஸ்பானிய மண்ணின் மரபார்ந்த படிமங்களாலும் பெருத்த தாக்கமுற்றிருந்த அவருடைய கவிதைகள் நியூ யார்க்கில் புதிய பரிணாமத்தை எட்டின.

பொருள் சேர்க்கும் வெறியில் மனிதர்களிடையே வேரோடிப் போகக் கூடிய வன்மம், வெறி, மனித வாழ்க்கையின் அநர்த்தம் தொடங்கி அத்தனை பெரிய நகரத்தில் ஒற்றை மனித உயிருக்கு எந்த மதிப்பும் இல்லாதது, கறுப்பினத்தவர்களுக்கு எதிராக வெள்ளையர்கள் காட்டிய வன்முறைகள் மற்றும் சமூகத் தீண்டாமை ஆகியவை கத்திபோல் கூர்மையான மீயதார்த்த நவீனப் படிமங்களாக, வால்ட் விட்மனின் ‘என்னைப் பற்றிய பாடல்’, எலியட்டின் ‘தரிசு நிலம்’ ஆகிய கவிதைகளில் காணக்கூடிய மந்திரத் த்வனியொத்த ஓசை அடுக்குகளாகப் பிறந்து வந்தன.

ஒரு கவிஞன் வேறொரு நாட்டுக்கு ஒரு வாரமோ சில மாதங்களோ வசிக்கப் போகும்போது தற்பெருமையை மட்டும் பேசிக் கொண்டு திரியாமல், தன் அளவுகோல்களாலேயே தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் அளக்காமல் அந்த நாட்டின் உயிரோட்டத்தில் தன்னை மிகுந்த நேர்மையோடு ஈடுபடுத்திக் கொள்ளும்போது பிறக்கக் கூடிய செழிப்பான கவிதைகளுக்கு

“Poet in New York” இன்னமும் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது.

ரில்கேயின் கவிதைகளை மொழிபெயர்த்து முடித்த பிறகு, லோர்காவை மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறேன்.

ரில்கேவுக்குப் பின்னர் இது வெளிவரும்.

***