தோன்றுமா உயிர்கள்…தொடருமா வாழ்வு../முருகு

கம்பியில்லாக் கருவிகள் தான்…
கடைத்தெருவில் ஏராளம் இன்று

தொலைக்காட்சி முதல்
அலைபேசி வரை…

கணினிக் குடும்பத்தின்
கடைசி உறவு வரை…

அருகில் ஓர் அருகலை
அல்லது ஓர் ஊடலை இருப்பின்

மின்கொடி ஏதும் வேண்டாவாம்
மின்னணுப்புலன் மின்னலென இணைக்க…

மின்னேற்றி உயிரூட்டவும்
மின்கம்பி வேண்டாமாம் !!!

பக்கத்தில் வைத்தாலே
பரவுமாம் மின்னாற்றல் !!!

கம்பிவடங்கள் சாலைகளில் இனி
கழுத்தை நெறிக்கத் தொங்காதாம்…

தொலைத் தொடர்புக்கினி வடமில்லா
வலைஇணைப்பே வழக்கமென்றாகுமாம்…

தேரிழுக்கக் கூட வடங்கள் இனி
தேவையற்றுப் போகலாம் !!!

விசையொன்றைத் தட்டினால் நகரலாம்,
விண்ணுயரத் தேர்களும் விபத்தின்றி…

இனிவரும் காலங்களில் இருக்காதாம் !!!
இணைப்புக் கொடிகளும், கம்பிவடங்களும்…

வித்தக விஞ்ஞானம்
எத்தனை முயன்றாலும்…

தொப்புள்கொடி இணைப்பின்றி
தோன்றுமா உயிர்கள்; தொடருமா வாழ்வு…

கம்பியில்லா = WIRELESS/CORDLESS
கணினி = COMPUTER
அருகலை = WIFI
ஊடலை = BLUETOOTH
மின்கொடி = ELECTRIC WIRE
மின்னணுப்புலன் = ELECTRONIC INSTRUMENT
மின்னேற்றி = CHARGER
கம்பிவடம் = CABLE

One Comment on “தோன்றுமா உயிர்கள்…தொடருமா வாழ்வு../முருகு”

Comments are closed.