இயற்கையின் இசைக்கோலம்/-கனகேஷ்

(Nature’s Symphony)

சோம்பல் முறித்து
தயங்கிக்
கண்விழிக்கும்
அதிகாலை நகரம்..

காங்கிரீட் காட்டின் நடுவே
போனால் போகட்டுமென
ஒரு பூங்காவனம்

நீரில் அலசி சணல்பாய் விரித்து
கட்டுகளை அடுக்கும் கீரைப்பாட்டி

தற்காலிக மேஜையின் மேல்
கம்பங்கூழ்ப் பானையை
கவனமாய் வைக்கும்
கருகுமணிப் பெண்

கவலைமுகத்துடன்
கத்தாழை அருகம்புல் பானகம்
விற்கும் சமீபத்தில் வேலைபோன
பச்சை பான்ட்காரர்..

வண்ணப்பாய் விரித்து
வகுப்பு துவக்கும்
யோகா மாஸ்டர்

சினிமாக்கனவில் கண்கள் மிதக்க
சண்டை பயிலும் இளைஞர்கள்

அமெரிக்கப் பேரனின் மழலைப்
பாடலை
தளர்ந்த நடையில்
ஐஃபோனில் பார்த்தபடி
தாத்தா பாட்டி

ஆயிரம் வாகனங்கள் துப்பிய
புகை விழுங்கி
நீண்டு வளர்ந்த
மரத்தின் மேல்
யாரையோ அழைக்கும் ஒரு
பச்சைக்கிளி..

அகால மழையின்
துளிகளை இதழ்களில்
கவனமாய்க் ஏந்தி நிற்கும்
பெயர் தெரியாத
சில பூக்கள்

அரைநிக்கர் ஷூ ப்ளூடூத்
குண்டலங்களுடன்
கொழுப்பைக் குறைக்க
நடை பயிலும்
செல்வந்தர்கள்

இளமை முழுவதையும் ஆஃபிஸில்
தொலைத்துச் சேர்த்த
செல்வத்தை செய்வதறியாது
சர்க்கரை பயத்தில்
ஓடும் ஊழியர்கள்

ஒரு ஞானியாய்
இத்தனையையும் பார்த்து
புன்னகை பூக்கும்
தன் பன்முகம் காட்டும்
பூங்காவனம்..

3 Comments on “இயற்கையின் இசைக்கோலம்/-கனகேஷ்”

Comments are closed.