அண்ணாவின் வாசிப்பும்…/கலாப்ரியா

அண்ணாவின் வாசிப்பும் அதைத் தமிழ் மண்ணுக்கேற்ப மாற்றும் வல்லமையுமே அவரின் தனித்த அடையாளங்கள். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நோயின் கடுமைக்கிடையேகூட அவர் மேரி கொரெல்லியின் ‘மாஸ்டர் கிறிஸ்டியன்’ (புரட்சித் துறவி) நாவலைப் படித்துக்கொண்டிருந்தார்.

அதற்காகவே, ‘அண்ணா படித்த கடைசி நூல்’ என்று குறிப்பிட்டே அதை ‘குமுத’த்தில் மொழிபெயர்த்து எழுதினார் ரா.கி.ரங்கராஜன். பெரும் வரவேற்பு பெற்றது அது. தன் கவிதைகள் குறித்து தாழ்மையான அபிப்பிராயமே கொண்டிருந்தார். ஏனென்றால், அப்போதெல்லாம் யாப்பு அணிசெய்கிற மரபுக் கவிதையே கவிதை என்கிற காலம். அதனால், அவையடக்கத்தோடு, “பாடுகிறான் அண்ணன் ஒருகவிதையென்று/ பரிவாலே எண்ணிடாதீர் உடன் பிறந்தாரே/ சீர் அறியேன் அணி அறியேன் சிந்தை உந்தும்/ செய்திதனைத் தெரிவித்தேன்: ஆசையாலே” என்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் அண்ணா, “எதுகை மோனை எழில் தரும் உவமை/ வசீகர வர்ணனை, பழமைக்கு மெருகு/ இத்தனையும் தேடி எங்கெங்கோ ஓடி/ வார்த்தை முடையும் வலைஞன் அல்ல கவிஞன்” என்று வால்ட்விட்மன் சொன்னதை மொழிபெயர்த்து, அவரைத் தன் கட்சிக்குச் சாட்சியாக அழைக்கிறார். இது அண்ணா புதுக்கவிதை நோக்கி நகர்ந்திருக்கிறாரோ என எண்ணவைக்கிறது. இந்த பாணிக் கவிதையையே கருணாநிதியும் பின்பற்றி பெரும் வெற்றிபெறுகிறார்.

அண்ணா பேசும்போது, மூக்குப்பொடி அதிகம் உபயோகிப்பதாலோ என்னவோ, அவர் அதிகமும் மூக்கினாலேயே பேசுவார். “கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டாலும் கிஞ்சித்தும் பயனில்லை…” என்பதுபோல அவர் பேசுகிற அழகைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவர் மேடையில் வைத்து, நாசூக்காக யாரும் அறியாவண்ணம் பொடி போட்டுக்கொள்வதைப் பற்றி மூத்த தோழர்கள் வியந்துகொள்வார்கள். நான் எவ்வளவோ கூட்டங்களில் கவனித்திருக்கிறேன். என்னால் அதைப் பார்க்க முடிந்ததே இல்லை.

மூக்குப்பொடி போடும் நாசூக்கை யார் யார் கவனித்தார்களோ இல்லையோ, கட்சியை அண்ணா நாசூக்காகக் கையாண்ட விதத்தை
அகில இந்தியாவும் கவனித்தது. அனைவரிடமும் மாறுபாடின்றி ஒரு சகோதர உணர்வைப் பேணினார். அவருடைய மொழியே இந்த சகோதர உணர்வைக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரையும் போற்றத்தக்க இடத்தில் இருத்தினார். எம்ஜிஆரைப் பாராட்டுகையில் சொல்வார், “நம்முடைய புரட்சி நடிகரின் திரைப்படச் சாதனைகளை முறியடிக்க ஒரே ஒரு திலகத்தால்தான் முடியும். அது…” என்று ஒரு இடைவெளி கொடுத்துவிட்டு, “அது மக்கள் திலகத்தால் மட்டுமே முடியும்” என்பார் (இரண்டு பட்டங்களுமே எம்ஜிஆருக்கு உரியன). கேட்பவர்கள் ஆனந்தக் கூத்தாடக் கேட்பானேன்.

நன்றி: இந்து தமிழ் திசை

முகநூலில் தெரியப் படுத்தியவர்: ஆர். கந்தசாமி